2025 மே 02, வெள்ளிக்கிழமை

'நல்லாட்சியின் போதே இணக்கப்பாடு வரவேண்டும்'

Gavitha   / 2017 மார்ச் 04 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

இனங்களுக்கிடையிலான இணக்கப்பாடு, நல்லாட்சி அரசாங்கப் பதவிக் காலத்திலேயே எட்டப்பட வேண்டும் என்று தான் உட்பட அனைவரும் விரும்புவதாக, காணி, சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.

கிழக்கு மாகாண முதலமைச்சரின் நிதி ஒதுக்கீட்டில், ஏறாவூர் வாவி மீனவர் சமூக மக்களுக்கு, வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு, நேற்று (03) இடம்பெற்றது.

மீனவர்களுக்கான வாழ்வாதார உதவியாக, 10 வாவி மீன்பிடித் தோணிகளும் 61 வலைகளும், 27 மீனவக் குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டதையடுத்து, உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றும் போது,

'ஆளுமை உள்ள முதலமைச்சர் ஒருவர், கிழக்கு மாகாணத்துக்குக் கிடைத்திருப்பது அனைவருக்கும் நன்மையளிக்கும் விடயம். கிழக்கிலுள்ள மனித வளங்கள் மற்றும் இயற்கை வளங்கள் என்பன, வீணடிக்கப்படாமல்,  இந்தப் பிரதேசத்தின் ஒவ்வொரு குடும்பங்களினதும் நாட்டினதும் நன்மைக்குப் பயன்படுத்த வேண்டும் என்பதில், அவர் அக்கறையாக இருக்கின்றார்.

அதற்காக அரசாங்கத்தை மட்டும் நம்பியிருக்காது, சர்வதேச முதலீட்டாளர்களைக் நாட்டுக்குக் கொண்டுவந்து, கிழக்கில் முதலீடு செய்யும்படி, சர்வதேச முதலீட்டு மாநாட்டை கொழும்பில் நடத்தினார்கள். இதன்போதுதான், கிழக்கு முதலமைச்சரின் அபார ஆளுமை அநேகருக்குத் தெரியவந்தது.

குறிப்பாக, கிழக்கு மாகாணத்தில் வேலையற்றிருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு, பொருளாதாரத்தை ஈட்டிக் கொள்ளும் வழிவகைகளைக் கண்டு பிடிப்பதிலும் தொழில்களைப் பெற்றுக் கொடுப்பதிலும், கிழக்கு முதலமைச்சர் அதிக சிரத்தை எடுத்து வருகின்றார்' என்று அவர் தெரிவித்தார்.

'சுற்றுலாத்துறையை வளப்படுத்துவதைக் கொண்டு, இளைஞர், யுவதிகள் சிறந்த பொருளாதார முன்னேற்றங்களை அடைந்து கொள்ள முடியும். அதேநேரம்,  இங்குள்ள சுற்றுலாத்துறையில், பயிற்சி பெற்று அந்த அனுபவத்தையும் சான்றிதழையும் வைத்துக் கொண்டு, வெளிநாடுகளிலும்; உயரிய அந்தஸ்துடன் கூடிய தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த நாட்டின் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்பட வேண்டும். அதற்காக, ஜனாதிபதியும் பிரதமரும், எதிர்க்கட்சித் தலைவரும், மிகுந்த கவனத்துடன் செயற்பட்டு வருகின்றனர்' என்று அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .