2025 மே 01, வியாழக்கிழமை

'மு.கா இனப் பிரச்சினைக்கான தீர்வுத்திட்ட முன்மொழிவை வைக்காது மௌனமாக உள்ளது'

Suganthini Ratnam   / 2017 ஏப்ரல் 04 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா, றியாஸ் ஆதம்

முஸ்லிம்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸானது இனப் பிரச்சினைக்கான எந்தவொரு தீர்வுத்திட்ட முன்மொழிவையும் வைக்காது மௌனமாக உள்ளது எனக் கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

தேசிய காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல் அக்கரைப்பற்றில்  திங்கட்கிழமை (3) இரவு நடைபெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர்; தொடர்ந்து தெரிவித்தபோது, 'கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக  முன்னெடுக்கப்பட்ட இனவாதச் செயற்பாடுகளுக்கு விடிவு கிடைக்கும் என்பதுடன், யுத்த காலத்தில் இழந்த தங்களின் காணிகள் விடுவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புடன் முஸ்லிம் சமூகம் ஆட்சி மாற்றத்துக்கு பாரிய பங்களிப்புச் செய்தது.
ஆனால், நல்லாட்சியிலும் முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான இனவாதச் செயற்பாடுகள் தொடர்வதுடன், இச்சமூகம் இழந்த காணிகளை மீட்பதற்குப் பதிலாக பூர்வீகக் காணிகளை இந்த ஆட்சியிலும் இழக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள்ளது' என்றார்.

'தற்போது தமிழ் மக்கள் தங்களின் அரசியல் பலத்தைப் பயன்படுத்தி அனைத்து தமிழ்க்; கட்சிகளையும் ஒன்றுசேர்த்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியதுடன், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுடைய உரிமைக்காகவும் அதிகாரங்களைப் பெறுவதற்காகவும் ஒன்றுபட்டுச்  செயற்பட்டு அரசாங்கத்துக்கும் சர்வதேசத்துக்கும் அழுத்தம் பிரயோகிக்கின்றது. அத்துடன், தமிழ் மக்கள் பேரவையை உருவாக்கி, தமிழ்ச் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.  

மேலும், இனப் பிரச்சினைக்கான  தீர்வு தொடர்பில் வடமாகாண சபை தீர்வுத்திட்டத்தை முன்வைத்துள்ளது. அதில்; வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு உச்ச அதிகாரம் மிக்க சபை வழங்கப்படுவதுடன், மலையக மக்களுக்கு தன்னாட்சி சபையும் வடகிழக்கு முஸ்லிம்களுக்கு  பிராந்திய சபையும் வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் மக்களுக்கு உச்ச அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதிலும்  தமிழ் மக்களை தமிழ் மக்களே ஆள வேண்டும் என்பதிலும் முஸ்லிம் சமூகம் உடன்பாடாகவுள்ளது. ஆனால், முஸ்லிம் சமூகத்தை ஆள்வதற்கு அவர்கள் ஒருபோதும் எதிர்பார்க்கக்கூடாது என்பதுடன்,  இது தொடர்பில் முஸ்லிம் சமூகம் விழிப்புடன் உள்ளது' என்றார்.  

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .