2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

கல்முனை மாநகர சபை கணக்காளரின்அலுவலகம் மேயரினால் சீல்வைப்பு

Super User   / 2010 நவம்பர் 25 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கல்முனை மாநகர சபை கணக்காளரின் நடவடிக்கை சபையினருக்கும், நிர்வாகத்தினருக்கும் அவப்பெயரை  ஏற்படுத்துவதாக கூறி கணக்காளர் அலுவலக அறை மாநகர மாநகர மேயர் மஸூர் மௌலானாவினால் சீல் வைக்கப்பட்டு கணக்காளர் வெளியேற்றப்பட்டுள்ளார்.

கல்முனை மாநகர கணக்காளருக்கும் மாநகர சபை உறுப்பினர் சிலர் மற்றும் நிர்வாகத்தினர் சிலருக்கும் இடையில் சில நாற்களாக கடமை நிமித்தம் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

இதன் வெளிப்பாடாக இன்று வியாழக்கிழமை பி.ப. 3.00 மணியளவில் கணக்காளரின் கடமையறை மாநகர மேயர் மஸூர் மௌலானா தலைமையிலான குழுவினர் சீல் வைத்து மூடியுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக மாநகர மேயர் மஸூர் மௌலானா 25.11.2010.ஆந் திகதியிட்டு கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளருக்கு (நிதி) அனுப்பிவைத்த கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

"இம்மாநகர சபையில் கணக்காளராக கடமையாற்றுகின்ற ஜனாப் ஏ.ஆர்.நஸீமுல் ஹக் அவர்களின் நடவடிக்கை சம்பந்தமாக ஏற்கனவே அனுப்பப்பட்ட 21.09.2010.ஆந் திகதிய கடிதத்தை தங்களின் கவனத்திற்கு சமர்ப்பிக்கின்றேன்.

தற்போது கூட இவரது நடவடிக்கையில் எந்தவிதமான முன்னேற்றமோ திருப்திகரமான செயற்பாடுகளோ காணப்படாதுள்ளதுடன்  தொடர்ச்சியாக எனக்கும் சபைக்கும் நிர்வாகத்திற்கும் அவப்பெயரை ஏற்படுத்தத்தக்கதான பின்வரும் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

01. இன்று (25.11.2010) நான் ஆணையாளர் முன்னிலையில் முக்கியமான விடயங்களை ஆராயும் பொருட்டு (1.கணக்காய்வு வினாக்களுக்கு  விடையளித்தல், 2. கேள்விப்படிவங்கள் திறப்பது சம்பந்தமாக, 3. 2011ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் சமர்ப்பித்தல், 4. 2009ஆம் ஆண்டுக்கான இறுதிக்கணக்கு தயாரித்தல்) போன்ற விடயங்களுக்கு  அழைத்த போது அவர் என்னைச் சந்திக்க மறுத்ததுடன் ஆணையாளரையும் சந்திக்க மறுத்திருந்தார்.

பல தடைவை அவருக்கு அழைப்பு விடுத்த போதும் அதை நிராகரித்து அலுவலகத்தை விட்டும் வெளியேறியுள்ளார்.

02. இன்று ஆளணியினருக்கு சம்பளம் வழங்க வேண்டிய நாளாக இருந்த போதிலும் காசோலைக்கு கையொப்பமிடாது அதனுடன் சம்பந்தப்பட்ட ஏனைய உறுதிச்சீட்டுகளுக்கும்  கையொப்பமிடாது மறுத்திருக்கின்றார்.

இவ்வாறான சூழ்நிலை தொடர்வதுடன் காசோலைக்குக் கையொப்பமிடாமல் இருப்பதுடன் உறுதிச்சீட்டுகளுக்கு உறுதிப்படுத்தாமல் விடுவதனால் சபை நடவடிக்கைகளை என்னால் கொண்டு நடாத்த முடியாதுள்ளது.

அத்துடன் சபையின் உச்ச அதிகாரி என்ற வகையில் என்னை அவமானப்படுத்தும் செயலாகவும் இதனை நான் கருதுகின்றேன்.

இவ்வாறான செயலினால் மாநகர நடவடிக்கைகள் முற்றாக ஸ்தம்பித நிலைக்குத் தள்ளப்படுகின்றது. இந்நிலையில் சபையையும் சபை நிர்வாகத்தையும்  கொண்டு நடாத்துவதற்காக தற்காலிகமாக கொடுப்பனவு உறுதிச்சீட்டுகளை உறுதிப்படுத்தும் அதிகாரத்தையும், பதில் கணக்காளர் நடவடிக்கையையும் எங்களது சபையின் செயலாளரும் நிர்வாக உத்தியோகத்தருமான  எம்.ஏ.எம். அலாவுதீனிடம் வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்" என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

இது தொடர்பாக மாநகர சபையின் கணக்காளர் ஏ.ஆர்.நஸீமுல் ஹக்கின் கருத்தை அறிவதற்காக பல முறை தொலைபேசியினூடாக தொடர்கொண்டும் பதில் ஏதும் கிடைக்கவில்லை.



 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .