2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கோரும் சங்கமன் கிராம மக்கள்

Menaka Mookandi   / 2011 மே 29 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

திருக்கோவில் பிரதேச சபைக்குட்பட்ட சங்கமன் கிராம மக்கள் தமது குடிநீர்த் தேவையினைப் நிறைவு செய்யும் பொருட்டு நாளாந்தம் மிகவும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும், இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வொன்றினைப் பெற்றுத் தரும் பொருட்டு இப்பகுதிக்கு குடிநீர் இணைப்பை வழங்குவதற்கு பொறுப்பானவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இக்கிராம மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

1980ஆம் ஆண்டளவில் மாதிரிக் கிராமமாக உருவாக்கப்பட்ட சங்கமன் கிராமத்தில் தற்போது 272 குடும்பங்களைச் சேர்ந்த 1084 பேர் வசித்து வருகின்றனர்.

குடிநீர் மற்றும் மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் இக்கிராமத்தின் பல பகுதிகளுக்கு இன்னும் கிடைக்கவில்லை என்றும் இதனால், தாம் பல்வேறு பிரச்சினைகளை நாளாந்தம் முகங்கொடுத்து வருவதாகவும் இப்பகுதி மக்கள் கவலை தெரிகின்றனர்.

இக்கிராமத்தின் பிரதான பாதையை அண்டிய சில இடங்களில் மின்சாரம் மற்றும் நீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ள போதும் - ஊரின் பெரும்பாலான உட்பகுதிகளுக்கு இன்னும் இந்த வசதிகள் முழுமையாகச் செய்து கொடுக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டப்படுகிறது.

நீர்த் தேவைகளுக்காக இப்பகுதி மக்களில் அதிகமானோர் பொதுக் கிணறுகளையே நம்பியுள்ளனர். ஆனால், ஜுன் - ஜுலை மாதங்களில் சாதாரணமாக பொதுக்கிணறுகளும் வற்றிவிடும் என்றும், இதன் பிறகு தாம் சுமார் 3 கிலோமீற்றர் தூரம் பயணித்தே தமக்கான நீரைப் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளதாகவும் இக்கிராம மக்கள் கவலையோடு கூறுகின்றனர்.

எனவே, தமது குடிநீர்ப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக நீர்வழங்கல் அதிகாரசபை மூலம் குடிநீர் இணைப்பைப் பெற்றுத் தருவதற்கு பொறுப்புமிக்க அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இக்கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .