2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

கிழக்கில் முதலீடு செய்ய ஆர்வமுள்ள சவூதி நிறுவனங்களை அழைத்து வர இணக்கம்

Super User   / 2013 ஜனவரி 10 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஹனீக் அஹமட்


கிழக்கு மாகாண விவசாயம் மற்றும் மீன் பிடித்துறைகளில் முதலீடு செய்வதற்கும், இலங்கையில் முலீடுகளை மேற்கொள்வதற்கு ஆர்வமுள்ள சவூதி அரேபிய நிறுவனங்களை அழைத்து வருவதற்கு கிழக்கு மாகாண அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமத்திடம் சவூதி அரேபியாவின் இளவரசி ஆதிலாவின் ஆலோசகர் யஹ்யா பின் அப்துல் அஸீஸ் அல் ராசிட் விருப்பம் தெரிவித்துள்ளார். 

கிழக்கு மாகாணத்தில் சவூதி அரேபிய நிறுவனங்களின் முதலீடுகளை ஊக்குவிப்பது தொடர்பிலான கலந்துரையாடலொன்று கிழக்கு மாகாண விவசாய, கால்நடை உற்பத்தி, சிறுகைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமத்துக்கும் சவூதி அரேபியாவின் இளவரசி ஆதிலாவின் ஆலோசகர் யஹ்யா பின் அப்துல் அஸீஸ் அல் றாசிட் தலைமையிலான குழுவினருக்கும் இடையில் நேற்று புதன்கிழமை கொழும்பு ஹில்டன் ரெசிடன்ஸில் இடம்பெற்றது.

இதன்போதே, அப்துல் அஸீஸ் அல் ராசிட் மேற்படி விருப்பத்தினைத் தெரிவித்தார். இந்த  கலந்துரையாடலில், கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தியினை கருத்திற் கொண்டு, அங்கு  எவ்வாறான முதலீடுகளை மேற்கொள்ளலாம் என ஆராயப்பட்டது. 

விவசாயம் மற்றும் மீன் பிடித்துறைகள் கிழக்கு மாகாணத்தில் சிறந்து விளங்குவதையும், மாகாணத்தின் வளர்ச்சிக்கும், அபிவிருத்திக்கும் இத்துறைகள் பாரியளவில் பங்காற்றி வருகின்றமையையும் அமைச்சர் ஹாபீஸ் நஸீர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதற்கிணங்க, மேற்படி துறைகளின் அபிவிருத்தித் திட்டங்களில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு சவூதி அரேபியாவின் இளவரசி ஆதிலாவின் ஆலோசகர் யஹ்யா பின் அப்துல் அஸீஸ் அல் ராசிட் விருப்பம் தெரிவித்ததோடு, சவூதி அரேபிய நிறுவனங்களை இலங்கையில் முதலீடு செய்வதற்கு அழைத்து வரவுள்ளதாகவும் கூறினார்.

இதேவேளை, இலங்கையில் அரபு மொழியினை கற்பிப்பதற்கும், அறபு மொழி கற்கும் மாணவர் சமுதாயத்தை எதிர்காலத்தில் அதிகமாக்கிக் கொள்வதற்குமான உதவிகளை தான் மேற்கொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் ஹாபிஸ் நஸீரிடம் அப்துல் அஸீஸ் அல் ராசிட் உறுதியளித்தார்.

இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் அப்துல் காதர் அல் மசூத் மௌலானவும் கலந்துகொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X