2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வளர்ச்சியில் பங்காளியாகுமாறு அழைப்பு

Super User   / 2013 நவம்பர் 06 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம். ரம்ஸான்


கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வளர்ச்சியில் ஒவ்வொருவரும் பங்காளியாகுமாறு வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம்.நசீர் அழைப்புவிடுத்துள்ளார்.

அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வெள்ளி விழா நிகழ்வின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.இந்த நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய வைத்திய அத்தியட்சகர்,

"ஒரு பிரதேசத்தின் ஆரோக்கியம் அப்பிரதேச வைத்தியசாலையின் உன்னத சேவையில் தங்கியுள்ளது. 1988.11.05ஆம் திகதி ஒரு மகப்பேற்று மருத்துவமனையாக ஆரம்பிக்கப்பட்ட இவ்வைத்தியசாலை பல்வேறு தரப்பினரின் பங்களிப்புடன் பரிணாம வளர்ச்சிகண்டுள்ளதையிட்டு நான் ஆனந்தமடைகின்றேன்.

இவ்வைத்தியசாலையை முதன் முதலில் ஆரம்பித்து அதன் ஆரம்ப கால வளர்ச்சியில் பங்கெடுத்தவர் இன்றும் இவ்வைத்தியசாலையின் வளர்ச்சிப் பற்றி சிந்தித்துக் கொண்டு இருக்கிறார். அவர்தான் எங்களது முன்னாள் அமைச்சர் ஏ.ஆர் மன்சூர் என்பதை நாம் மறக்கமுடியாத ஒரு விடயமாகும்.

அவர் மாத்திமின்றி, தனது அரசியல் அதிகாரத்தினால் இவ்வதைதியசாலைக்கு எந்த வகையிலெல்லாம் உதவ முடியுமோ அவ்வாறெல்லாம் உதவி செய்து இவ்வைத்தியசாலையை இன்றுள்ள நிலையக்கு உயர்த்தியவர் மறைந்த அமைச்சர் எம்.எச்.எம்.அஷ்ரப் என்பதும் மறப்பதற்கில்லை.

இந்த வைத்தியசாலைக்கு மாத்திரமல்ல, இந்நாட்டில் வாழ்கின்ற அனைத்து மக்களுக்கும் வரலாற்று முக்கியத்துமிக்க நற்பணிகளை புரிந்த அவரின் பெயர் நிலைக்க வேண்டும் என்பதற்காக அனைவரினதும் வேண்டுகோளின் பேரில் இவ்வைத்தியசாலைக்கு அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப்பின் மறைவின் பின்னர் அவரின் துணைவியார் முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப்பின் சேவையையும் நாம் மறக்க முடியாது. அதன்பின் பல்வேறு மட்டங்களிலும் உள்ள பல அரசியல்வாதிகள் பல்வேறுபட்ட  உதவிகளை இவ்வைத்தியசாலைக்குச் செய்துள்ளனர்.

இப்பிரதேசத்தின் அரசியல் தலைமைகள் மாத்திமின்றி, பல்வேறு துறைசார்ந்தோரும் இவ்வைத்தியசாலையின் வளர்ச்சிக்குப் பங்களிப்பு செய்திருக்கிறார்கள் என்பதை மறக்க முடியாது.இவ்வைத்தியசாலையினூடாக கல்முனைப் பிரதேச மக்கள் மாத்திரமின்றிஇ பொத்துவில் தொடக்கம் துறைநீலானவனை வரையுள்ள சகல இன மக்களும் இவ்வைத்தியசாலையினால் நன்மையடைந்து வருகின்றனர்.

அத்துடன், பல்வேறு பிரச்சினைகள் சவால்களுக்கு மத்தியிலும் வளர்ச்சிகண்டுள்ள இந்த வைத்தியசாலை பல்வேறு தேவைகளையும் வேண்டி நிற்கின்றது. இத்தேவைகள் நிறைவேற வேண்டும். அதனால் இப்பிரதேசத்திலிருந்து இவ்வைத்திசாலைக்கு சிகிக்சை பெறவரும் நோயாளர்கள் பயன்பெற வேண்டும். அதற்கு அனைவரது ஒத்துழைப்பும் அவசியமாகும்.

அந்த வகையில கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வளர்ச்சியில் ஒவ்வொருவரும் பங்காளியாகுங்கள் என நான் அனைத்துத் தரப்பினருக்கும் பகிரங்கமான வேண்டுகோள் ஒன்றை விடுக்கின்றேன்" என்றார்.

இந்த வைத்தியசாலையின் வெள்ளி விழாவை முன்னிட்டு வைத்தியசாலையின் உள்ளக பாதை அமைப்பதற்கான அடிக்கல் நடல், பாதை யாத்திரை, கண் சிகிச்சை பிரிவு, தாய் பாலூட்டல் பராமரிப்பு பிரிவு உட்பட இன்று பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் சுகாதார நடவடிக்கைகள் போன்றன ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் இறுதியில் பொதுக்கூட்டமும் நடைபெற்றது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .