2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

36 வருட அரச சேவையில் இருந்து ஓய்வு

Princiya Dixci   / 2021 மார்ச் 10 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார் 

இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர சிரேஷ்ட அதிகாரியும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் முன்னாள் பிரதேச செயலாளரும் இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சின் மேலதிகச் செயலாளருமான எஸ்.அருள்ராஜா, தனது 36 வருட அரச சேவையில் இருந்து இன்று (10) ஓய்வு பெறுகின்றார்.

இவர், மட்டக்களப்பு - மாங்காடு கிராமத்தில் 1961 இல் பிறந்து, மாங்காடு சரஸ்வதி வித்தியாலயத்தில் ஆரம்ப கல்வியை பயின்று, உயர்கல்வியை, செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில் தொடர்ந்து, யாழ். பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்தார்.

மாங்காடு பிரதேசத்தில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட முதல் நிர்வாக சேவை அதிகாரியான இவர், 1984ஆம் ஆண்டு ஆசிரியராக குருநாகல் மாவட்ட பாடசாலை ஒன்றில் ஆரம்பித்து மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியராக இணைந்து 1991 ஆம் ஆண்டுவரை தொடர்ந்தார். 

1991ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவை பரீட்சையில் சித்திபெற்று, 20 வருடங்களாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் உட்பட அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பிரதேச செயலாளராக கடமையாற்றினார். இதில் 09 வருடங்கள் ஆலையடிவேம்பில் கடமையாற்றியமையும் இக்காலத்தில் சுனாமி அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு உதவிகளையும் பெற்றுக் கொடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.

2010 ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்துக்கு நியமனம் பெற்று, 2011ஆம் அண்டு பதவி உயர்வு பெற்று திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக 2017 வரை சேவை புரிந்தார்.

தொடர்ந்து 2017ஆம் ஆண்டு முதல் ஓய்வு பெறும்வரை சிறுதொழில் முயற்சியாண்மை அமைச்சு மற்றும் பொருளாதார அமைச்சு, பிரதேச அபிவிருத்தி அமைச்சு, புனர்வாழ்வு அமைச்சு, திறைசேரி இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சு, போக்குவரத்து அமைச்சுக்களில் உதவி செயலாளராகவும் கடமையாற்றினார்.  

மேலும் மேற்படிப்புக்காக புலமை பரிசில் மூலம் இந்தியா, ஜேர்மனி, தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு சென்று பொது நிர்வாகத் துறையில் தேர்ச்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .