2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கல்முனை மாநகர சபையில் ஊழலா?

Princiya Dixci   / 2021 ஒக்டோபர் 10 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா

கல்முனை மாநகர சபையில், மாநகர ஆணையாளர் மற்றும் கணக்காளர் ஆகியோர் ஊழல், மோசடிகளில் ஈடுபடுகின்றனர் என்று குற்றஞ்சாட்டும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல், அதற்கான  ஆதாரங்களை முன்வைத்து, நிரூபிப்பாரானால் அவ்வதிகாரிகளை சட்டத்தின் முன்னிறுத்தி அதற்கான தண்டனையை பெற்றுக் கொடுப்பதற்கு, தான் தயாராகவிருப்பதாக மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்துள்ளார்.

கல்முனை மாநகர சபையால் சாய்ந்தமருது பிரதேசம் புறக்கணிக்கப்படுவதாக ஜெமீல் தெரிவிக்கும் குற்றச்சாட்டை தான் அடியோடு மறுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது விடயமாக மேயர், இன்று (10) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;

“கல்முனை மாநகர ஆணையாளரும் கணக்காளரும் ஊழல் செய்வதாகவும் கல்முனை மாநகர சபையால் சாய்ந்தமருதுக்கு எவ்வித சேவைகளும் வழங்கப்படுவதில்லை என்றும் இப்புறக்கணிப்பினால்தான் சாய்ந்தமருது தனியான நகர சபைக் கோரிக்கையை முன்வைத்திருக்கிறது எனவும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் ஊடகமொன்றில் கூறியிருக்கிறார்.

“கல்முனை மாநகர சபையில் ஊழல் இடம்பெறுமாயின் அதற்கான ஆதாரங்களோடு சகோதரர் ஜெமீல் அதனை நிரூபித்தால், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கையை மேற்கொண்டு, அவர்களுக்கு எந்தத் தணடனையையும் பெற்றுக் கொடுப்பதற்கு மேயராகிய நான் தயாராகவே இருக்கின்றேன்.

“கல்முனை மாநகர சபையின் வரவு- செலவு உள்ளிட்ட அனைத்து நிதி சம்மந்தப்பட்ட விடயங்களும் தற்போது கணினி மயப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஒரு 10 ரூபாயையேனும் எவராலும் கையாடல் செய்ய முடியாதவாறே தற்போது எமது மாநகர சபையின் நிதிக்கட்டமைப்பு ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கிறது.

“மேலும், கல்முனை மாநகர சபையின் சேவை வழங்கலை பொறுத்தவரையில் ஏனைய ஊர்களைப் போன்றே, சாய்ந்தமருது பிரதேசத்துக்கும் உரிய சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

“குறிப்பாக கடந்த காலங்களை விட எனது ஆட்சி நிர்வாகத்தில் மாநகர சபையால் மேற்கொள்ளப்படுகின்ற திண்மக் கழிவகற்றல் சேவையை சாய்ந்தமருது பிரதேசத்திலும் எவ்விதக் குறையுமில்லாமல், மிகவும் சிறப்பாக முன்னெடுத்து வருகின்றோம்.

“அவ்வாறே, தெரு விளக்கு பராமரிப்பு சேவையும் இப்பிரதேசத்தில் என்றுமில்லாதவாறு இரவு - பகலாக சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஒரு முறைப்பாடு கிடைக்கப்பெற்றால் இரவு நேரத்தில் கூட உரிய இடத்துக்குச் சென்று, திருத்த வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன், வடிகான் பராமரிப்பு பணியையும் கிரமமாக மேற்கொண்டு வருகின்றோம்.

“இந்நிலையில், ஜெமீலின் குற்றச்சாட்டு குறித்து நான் மிகவும் வருத்தமடைகின்றேன். சாய்ந்தமருது நகர சபை கோரிக்கை என்பது நான் மேயரான பின்னர் உருவான கோஷமல்ல என்பதும் அது மிக நீண்ட காலமாக இருந்து வந்த கோஷம் என்பதையும் எல்லோரும் அறிவார்கள்” என மேயர் ஏ.எம்.றகீப் மேலும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .