2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கோரிக்கை தட்டிக்கழிப்பு; போராட்டத்துக்கு முஸ்தீபு

Princiya Dixci   / 2021 ஒக்டோபர் 19 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா

ஓய்வூதியர்களின் அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு வழங்கப்படாமல் தொடர்ந்தும் இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருவதைக் கண்டித்து, போராட்டங்களை முன்னெடுப்பதற்கு தயாராகி வருவதாக ஓய்வூதியர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் அம்பாறை மாவட்டக் கிளை அறிவித்துள்ளது.

இது குறித்து கிளையின் செயலாளர் அப்துல் லத்தீப் இன்று (19) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்;

“நல்லாட்சி அரசாங்கத்தில் 2016ஆம் ஆண்டு சகல அரசாங்க ஊழியர்களின் சம்பளம்  நூற்றி ஏழு மடங்காக அதிகரிக்கப்பட்டு, 2016 முதல் 2019 வரை கட்டம் கட்டமாக வழங்கப்பட்டு 2020ஆம் ஆண்டுடன் பூரணப்படுத்தப்பட்டது.

“இது தொடர்பான அரச நிர்வாக சுற்றுநிரூபத்தில், 2016 முதல் 2019 வரையான காலப் பகுதியில் ஓய்வு பெற்றவர்களுக்கு சம்பள அதிகரிப்புக்கமைய வழங்கப்பட வேண்டிய ஓய்வூதிய அதிகரிப்பு 2020ஆம் ஆண்டு ஜனவரியில் வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

“எனினும், ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, இந்த அதிகரிப்பை இடைநிறுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தால், நாடுபூராகவும் சுமார் 120,000 ஓய்வூதியர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

“இத்தீர்மானத்தை வாபஸ் பெற்றுவிட்டு, அதிகரித்த ஓய்வூதியத்தை வழங்குமாறு முன்வைக்கப்பட்டு வருகின்ற கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்ப்பதாக இல்லை.

“எமது கோரிக்கையை வலியுறுத்தி, பாதிக்கப்பட்ட ஓய்வூதியர்கள் அனைவரும் ஒரே நாளில் தபாலகங்களில் திரண்டு டெலிகிராம் போராட்டத்தில் குதித்திருந்தோம். அத்துடன், விகார மகாதேவி பூங்காவில் கூடி பேரணி ஒன்றை நடத்துவதற்கும் முயற்சித்தோம். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டது.

“அதேவேளை, 2022ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தின் ஊடாக இதனை வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும் என்று எமது ஓய்வூதியர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பு விடுத்த கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் உள்ளிட்டோர் எவ்விதப் பதிலும் அளிக்காமல் மௌனம் காத்து வருகின்றனர்.

“எனவே, போராட்டங்களில் குதித்து அரசாங்கத்தின் கவனத்தை ஈர்ப்பதற்கு எதிர்பார்த்திருக்கிறோம்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .