2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

‘சுகாதார நடைமுறைகளை மீறுவோர் கைது செய்யப்படுவர்’

Princiya Dixci   / 2021 மே 04 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா, பாறுக் ஷிஹான்

கல்முனை மாநகர சபை எல்லையினுள் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மிக இறுக்கமாகவும் துரிதமாகவும் அமுல்படுத்துவதற்கு மாநகர கொவிட்-19 தடுப்புச் செயலணி தீர்மானித்துள்ளது.

கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளுக்கு ஒத்துழையாமல், பொது இடங்களில் சுகாதார நடைமுறைகளை அலட்சியம் செய்வோரைக் கைது செய்து, சட்ட நடவடிக்கை எடுப்பதெனவும் அச்செயலணி தீர்மானித்துள்ளது.

கல்முனை மாநகர கொவிட்-19 தடுப்பு செயலணிக் கூட்டம், மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில்,  மேயர் செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (03) மாலை நடைபெற்றபோதே,  இத்தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாட்டில் கொரோனா தொற்று மூன்றாவது அலை தீவிரமாக உருவெடுத்து வருகின்ற சூழ்நிலையில், கல்முனை மாநகர பிரதேசங்களில் அதனைக் கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்து இதன்போது தீவிரமாக ஆராயப்பட்டன.

தற்போது ரமழான் நோன்புப் பெருநாள் வியாபாரம் களைக்கட்டியுள்ள நிலையில், புடவைக் கடைகளில் சனநெரிசலைக் கட்டுப்படுத்துவது தொடர்பிலும் கூடிய கவனம் செலுத்தப்பட்டது.

அவ்வாறே பொதுச் சந்தைகள், கடைத்தெருக்களில் சமூக இடைவெளிகளை பேணச் செய்வதிலும் முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட அனைத்து சுகாதார நடைமுறைகளையும் இறுக்கமாக அமுல்படுத்துவதெனவும் இதற்கு வர்த்தகர் சங்கங்கள் முழுமையாக ஒத்துழைக்கும் எனவும் உறுதியளிக்கப்பட்டது.

வெளி மாவட்டங்களுக்கான போக்குவரத்துகளை கட்டுப்படுத்தல் மற்றும் கண்காணித்தல், கொழும்பு போன்ற தூர இடங்களுக்கான பயணங்களில் ஈடுபடுகின்ற பஸ்களினதும் பயணிகளினதும் விவரங்களை அன்றாடம் சேகரிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

தேவையின்றி வீதிகளில் நடமாடுவோர், அங்கும் இங்குமாக கூடி நிற்கின்ற, வீதிகளில் சுற்றித்திரிகின்ற இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அவர்களுக்கு அண்டிஜன் பரிசோதனை மேற்கொள்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

இவற்றைக் கண்காணித்து, நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக சுகாதாரத்துறையினருக்கு பக்கபலமாக பொலிஸ் மற்றும் முப்படையினரின் ரோந்து நடவடிக்கைகளை மேலும் அதிகரிப்பதற்கும் இணக்கம் இதன்போது காணப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .