2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

தொல்பொருள் பிரதேசம் என பள்ளிவாசலை அகற்ற முஸ்தீபு

Editorial   / 2022 ஜனவரி 21 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா

முஸ்லிம்களின் புனிதஸ்தலமான தப்தர் ஜெய்லானி பள்ளிவாசலை அகற்றுவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென தென்கிழக்கு முஸ்லிம் பேரவை வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் அலி சப்ரி மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் வக்பு சபை என்பவற்றுக்கும் அவசர மகஜர்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இவ்விடயம் தொடர்பாக அப்பேரவையின் செயலாளர் செயிட் ஆஷிப், நேற்று (20) தெரிவிக்கையில்; “கூரகல தப்தர் ஜெய்லானி பள்ளிவாசலை அண்மித்து  அமைந்துள்ள விகாரையை மையப்படுத்தி, பாரிய தாது கோபுரம், தர்ம மண்டபம் போன்றன அமைக்கப்பட்டு வருகின்ற நிலையில், இப்பள்ளிவாசலை அங்கிருந்து அகற்றுமாறு உத்தரவிடப்பட்டிருக்கிறது.

“பள்ளிவாசல் நிர்வாகம் அதனை உடனடியாக செய்ய முன்வரா விட்டால் அப்பள்ளிவாசலை பலாத்காரமாக அகற்ற நடவடிக்கை எடுப்போம் என்று, சர்வதேச பௌத்த நிலையத்தின் பிரதானியான தம்மரத்ன தேரர் எழுத்து மூலம் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

“கூரகல பிரதேசமானது பௌத்தர்களின் புனித பூமி என்பதுடன், தொல்பொருள் பிரதேசமுமாகும் என்று கூறியே, பள்ளிவாசலை அகற்றுமாறு நிர்ப்பந்திக்கப்படுகிறது.

“கூரகல பிரதேசத்துக் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் விஜயம் செய்து, மேற்படி கட்டுமானப் பணிகளை பார்வையிட்டுச் சென்றதன் பின்னரே ஜெய்லானி பள்ளிவாசலை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன.

“எதிர்வரும் வெசாக் தேசிய நிகழ்வை, கூரகலையில் நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டிருக்கின்ற நிலையில், அதற்கு முன்னதாக இப்பள்ளிவாசலை அகற்றி விட வேண்டும் என பேரினவாத செயற்பாட்டாளர்கள் விடாப்பிடியாக நிற்கின்றனர். 

“2010ஆம் ஆண்டு தொடக்கம் இப்பள்ளிவாசலை அகற்றுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் புதிய அரசாங்கம் உருவான காலம் முதல் இவ்விடயத்தில் கடும் முனைப்புக் காட்டப்படுகிறது.

“800 வருடங்களுக்கு மேலாக இயங்கி வருகின்ற ஜெய்லானி பள்ளிவாசல் மற்றும் சியாரம் உள்ளிட்டவை சட்ட ரீதியானதாகும். ஆகையால், இதனை சட்டத்துக்குப் புறம்பாக அகற்றவோ அழிக்கவோ எவருக்கும் உரிமை கிடையாது.

“எனவே, ஜெய்லானி பள்ளிவாசலை அகற்றாமல் பாதுகாப்பதற்கு அனைத்து முஸ்லிம் தலைமைகளும் பாராளுமன்ற உறுப்பினர்களும் சிவில் அமைப்புகளும் ஒருமித்துச் செயற்பட முன்வர வேண்டும்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .