2025 மே 01, வியாழக்கிழமை

மாயக்கல்லிமலை விவகாரம்; சுமூகமாகத் தீர்ப்பதற்கு நடவடிக்கை

Suganthini Ratnam   / 2017 மே 10 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாணிக்கமடு, மாயக்கல்லிமலைப் பிரதேச விவகாரம் தொடர்பில் அனைத்து முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களுடனும் கலந்துரையாடி, கூட்டாக நடவடிக்கை எடுப்பதற்கு மாயக்கல்லிமலை மற்றும் காணி விவகாரக் குழுவினர் தீர்மானித்துள்ளனர் என அக்குழுவின்  செயலாளர் பாறூக் ஸாஹிப், இன்று தெரிவித்தார்.

மாயக்கல்லிமலைப்  பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையைக் கருத்திற்கொண்டு, குழுவொன்று நியமிக்கப்பட்டுச் செயற்பட்டு வருகின்றது.

இந்த விவகாரம் தொடர்பில் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வை அண்மையில்  அவரது அலுவலகத்தில் சந்தித்து தமது குழுவினர் விரிவாகக் கலந்துரையாடியதுடன், அது தொடர்பான மகஜரையும் கையளித்துள்ளனர் எனவும்; அவர் கூறினார்.

இதன்போது பதிலளித்த இராஜாங்க அமைச்சர், சிறுபான்மையின மக்களின் இப்பிரச்சினைக்கு முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்களினதும் ஒட்டுமொத்தப் பலத்தைப் பிரயோகித்து தீர்வு காண வேண்டும் என்றார்.

எனவே, இப்பிரச்சினையைத் சுமூகமாகத் தீர்ப்பதற்கு தாம் விரும்புவதாகவும் இந்த விவகாரம் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் மற்றும் இராணுவ, பொலிஸ் உயர் அதிகாரிகளையும் சந்தித்து  நியாயத்தை எடுத்துக் கூறி தெளிவுபடுத்துவதுடன், உரிய ஆவணங்களையும் கையளிப்பதற்கான முயற்சியை தமது குழு எடுத்து வருகின்றது எனவும் அவர் கூறினார்.

அம்பாறை, இறக்காமத்தில் 7ஆம் கிராம அலுவலர் பிரிவான மாணிக்கமடுவில்; மாயக்கல்லிமலை அமைந்துள்ளது.
இந்த நாட்டில் புராதனச் சின்னங்களையும் வரலாற்றுத் தடயங்களையும் கொண்டிருக்கின்ற ஒரு பிரதேசமாக இறக்காமமும் உள்ளது. இறக்காமத்தில் 19 தொல்பொருள் சின்னங்கள் 2014-10-10 அன்று தொல்பொருள் திணைக்களத்துக்கு சொந்தமானவை என்று வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டது.

அவ்வாறு வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தப்பட்ட தொல்பொருள் சின்னங்களுள் ஒன்றே மாணிக்கமடுப் பிரதேசத்தில் அமைந்துள்ள மாயக்கல்லி மலையாகும்.

2016-10-27 அன்று பௌத்த தேரர்கள் தலைமையிலான குழுவினர், குறித்த மலைக்கு வருகை தந்து அங்கு புத்தர் சிலையை வைத்தபோது, இதற்குப் பின்னால் இனவாதிகளின் மறைமுகமான திட்டங்கள் இருக்கலாம் என்று மக்கள் சந்தேகப்பட்டனர்.

என்றாலும், சிலை வைத்தமைக்காகப் பாரிய ஆர்ப்பாட்டங்களைச் செய்து பெரும்பான்மையின மக்களின் மனங்களைப் புண்படுத்தக்கூடாது என்ற நல்லெண்ணத்துடன், இப்பிரச்சினை சுமூகமாகத் தீர்க்கப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .