2025 மே 01, வியாழக்கிழமை

வடக்கு, கிழக்கில் கல்வியில் பின்னடைவு; ஆய்வு மேற்கொள்ள வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2017 மே 02 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கல்வித்துறையில் ஏற்பட்டுவரும் பின்னடைவு தொடர்பில்  துறைசார் நிபுணர்கள் சுயாதீனமான ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்று  இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பில் மேற்படி சங்கத்தின் செயலாளரும் பிரதிக் கல்விப் பணிப்பாளருமான ஏ.எல்.எம்.முக்தார் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,'பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ள 2016ஆம் ஆண்டு க.பொ.த சாதாரணதரப் பரீட்சை பெறுபேற்று பகுப்பாய்வின்  அடிப்படையில் வடமாகாணம் எட்டாவது இடத்தையும் கிழக்கு மாகாணம் ஒன்பதாவது இடத்தையும் அடைந்துள்ளமையானது கல்வியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதைக் காட்டியுள்ளது.

யுத்த காலத்தில் பரீட்சைத் திணைக்களத்தின்  பொதுப் பரீட்சைகளில் முன்னணி வகித்த வடக்கு, கிழக்கு மாகாணங்கள், தற்போது அப்;பரீட்சைகளில் பின்னடைவைக் கண்டுள்ளமை தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

மேலும் வடக்கு, கிழக்கு மாகாணப் பாடசாலைகள் மற்றும்  கல்வி அலுவலகங்களில் அரசியல்வாதிகளின் தலையீடு அதிகரித்துள்ளது. தகுதியானவர்கள் மற்றும் அனுபவசாலிகளுக்குப் பொருத்தமான பதவிகள் மறுக்கப்பட்டு, அரசியல்வாதிகளின் செல்வாக்கு மற்றும் உயர் அதிகாரிகளின் சட்டத்துக்கு முரணான செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்குபவர்களுக்கு பதவி என்ற நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது.

இவ்விரு மாகாணங்களிலுமுள்ள பாடசாலைகளில் முறையான மேற்பார்வையில்லை என்பதுடன்,  வெளிவாரி மதிப்பீடு மற்றும் மேற்பார்வை தொடர்பில் பின்னூட்டல் இல்லை. தேசிய பாடசாலைகளில் மத்திய அரசாங்கம் மற்றும் மாகாண சபைகளின் கண்காணிப்போ, மேற்பார்வையோ இல்லை.

பாடசாலை ஆசிரியர்கள் தேவையற்ற இடமாற்றங்களுக்கு உட்படுத்தப்படுகின்றார்கள். அதன் காரணமாக ஆசிரியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இதுவும் பரீட்சைப் பெறுபேறுகளில் தாக்கம் செலுத்துகின்றது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .