Editorial / 2023 ஒக்டோபர் 22 , பி.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
அலைபேசிகளை பயன்படுத்த தடைவிதிக்கும் சட்டம் அவசியம்
ஒவ்வொரு துறைகளுக்குள்ளும் கருப்பு ஆடுகள் இருப்பதை எளிதில் எவரும் மறுக்கமுடியாது. சில சினிமா படங்களை பார்த்தோமெனில், அக்காட்சிகளில் கருப்பு ஆடுகள் எவ்வாறு இரகசிய தகவல்களை எதிர்த்தரப்பினருக்கு கொடுக்கின்றன. அதற்காக அவர்களுக்கு வழங்கும் சன்மானங்கள் பற்றி அறிந்திருப்போம். ஒருசில தருணங்களில் கையும் களவுமாக சிக்கியும் கொள்வர்.
நமது நாட்டைப் பொறுத்தவரையில், பல நிறுவனங்களின் உள்ளக தகவல்களை உள்ளே இருக்கும் ஒரு சிலர் வெளியில் கசியவிட்டு விடுகின்றனர். இதுவே யதார்த்தமாகும். எனினும், தீர்மானங்களை எடுக்கும் மட்டங்களில் இருக்கும் அதிகாரிகள் எவ்வளவுதான் இரகசியம் காத்தாலும், இரகசியம் அம்பலமாகிவிடுகின்றது.
பரீட்சைகளை பொறுத்தவரையில், மாகாண மட்டங்களில் நடக்கும் பரீட்சைகளில் வினாத்தாள்கள் பரீட்சை ஆரம்பிக்கும் சில தினங்களுக்கு முன்னதாகவே கசியவிடப்பட்டு விடுகின்றன. இதனால், இராப்பகலாக கண்விழித்து கற்ற பரீட்சார்த்திகளை விடவும், ஏனையவர்கள் ஆகக் கூடுதலான புள்ளிகளைப் பெற்று, பெற்றோரிடத்திலும் பாடசாலையிலும் ஏன்? ஆசிரியர்கள், பிரத்தியேக வகுப்புகளிலும் பாராட்டுகளைப் பெற்றுக்கொள்கின்றனர்.
நன்றாக கற்றவர்களுக்கு அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. அவ்வாறானவர்களை சமாதானப்படுத்துவது பெரும் சிரமமாகவே இருக்கும். எனினும், தேசிய பரீட்சைகளில் இவ்வாறான சேட்டைகளை விடமுடியாதென ஆறுதல் கூறி, ஓரளவுக்கு அவர்களின் மனங்களை தேற்றலாம்.
எனினும், கசியவிடப்பட்ட வினாத்தாள்களுக்கு முன்கூட்டியே விடைகளை எழுதி, முன்தேர்ச்சி பெற்ற பரீட்சார்த்திகள் தேசிய பரீட்சைகளில் எதிர்பார்த்த பெறுபேறுகளை பெற தவறிவிடுகின்றனர்.
நடந்துமுடிந்த ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான வினாத்தாள்கள் பரீட்சை நிறைவடைந்த இரண்டொரு மணிநேரத்துக்குள் சமூக வலையத்தளங்களில் கசியவிடப்பட்டன. இதனை எந்தவொரு பரீட்சார்த்தியாலும் செய்யவே முடியாது.
ஏனெனில், வினாத்தாளிலேயே விடையளித்து, பரீட்சை நிலையங்களின் மேற்பார்வையாளர்களிடம் கையளிக்கவேண்டும்.
பரீட்சையின் பின்னர் சமூக ஊடகங்களில் வினாத்தாள்கள் வெளியாகியிருப்பதன் மூலம் பரீட்சையின் இரகசியத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படாத போதிலும், அது பிள்ளைகளின் மன நிலையைப் பாதிக்கக் கூடும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
பரீட்சை முடிந்து முடிவுகள் வெளியாகும் வரை பரீட்சை வினாத் தாள்கள் பரீட்சை திணைக்களத்துக்குச் சொந்தமான இரகசிய ஆவணங்கள் மற்றும் அதற்கு முன்னர் அவற்றை வெளிப்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
வினாத்தாள்கள் ஒவ்வொன்றிலும் பரீட்சார்த்திகளின் சுட்டெண்கள் அச்சிடப்பட்டே வருகின்றன. புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய பரீட்சார்த்திகளால், வினாத்தாள்களைப் பரீட்சை மண்டபத்துக்கு வெளியே எடுத்துச் செல்லவே முடியாது.
ஆகையால், பரீட்சை மண்டபங்களில் மேற்பார்வையாளராகக் கடமையில் இருந்த யாரோ ஒருவர்தான், இவ்வாறு கசியவிட்டிருக்கலாம். அவர்களே கருப்பு ஆடுகளாக இருந்திருக்கலாம். ஆகையால், பரீட்சை மண்டபங்களில் அலைபேசிகளைப் பயன்படுத்துவதைத் தடைவிதிக்கும் வகையிலான சட்டங்களே அவசியம்.
2023.10.17
41 minute ago
44 minute ago
48 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
44 minute ago
48 minute ago
53 minute ago