2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

அவசரப்படாத அவசர தொலைபேசி எண்களால் பயனேது

Editorial   / 2023 டிசெம்பர் 20 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

நமது நாட்டை பொறுத்தவரையில், அவசர தொலைபேசி (ஹொட்லைன்) எண்களுக்குக் குறைவே இல்லை. மூன்று இலக்கங்களைக் கொண்டவை மற்றும் நான்கு இலக்கங்களைக் கொண்டவை என, இரண்டு வகைகளில் அவசர தொலைபேசி இலக்கங்கள் அவ்வப்போது அறிமுகப்படுத்தப்படுகின்றன.

அவற்றில் சில எண்கள் இன்னும் செயற்பாட்டில் உள்ளன. சில அவசர தொலைபேசி இலக்கங்கள் அந்தந்த சந்தர்ப்பங்களில் மட்டுமே செயற்படும், ஏனைய நாட்களில், தூங்கிவிடும் அல்லது அந்தந்த நிறுவனங்களில் கடமையிலிருக்கும் கடமை நேர உத்தியோகஸ்தர்கள் அவை தொடர்பில் கவனம் செலுத்துவதே இல்லை.

இலங்கை பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கமான 119 நாடு முழுவதிலும் 24 மணிநேரமும் செயற்பாடுகளிலேயே இருக்கும். இதனால், தகவல் கிடைத்தவுடன் துரிதமாகச் செயற்படும் பொலிஸார், பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களைக் கைது செய்கின்றனர். அதோடு, போதைப்பொருள், ஆயுதங்களை கைப்பற்றியுள்ளனர்.

ஏன்? குடும்ப வன்முறைகளையும் தவிர்த்து உயிர்களையும் காப்பாற்றியுள்ளனர். சந்தேகத்தின் பேரில் தேடப்பட்டுவரும் நபர்களையும் கைது செய்துள்ளனர். அந்தளவுக்கு அவசர தொலைபேசி இலக்கம் மிகத் துரிதமாகச் செயற்படுகின்றது.

எனினும், ஒரு சில திணைக்களங்கள், நிறுவனங்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட அவசர தொலைபேசி இலக்கங்கள், எப்போதுமே மௌனம் காத்திருப்பது, வெட்கித் தலைகுனியச் செய்துவிடுகின்றது.

இது இவ்வாறு இருக்க, அறிமுகப்படுத்தப்பட்ட ஓரிரு நாட்களுக்கு மட்டுமே செயற்பாட்டில் இருந்த இலக்கங்களும் இல்லாமல் இல்லை. இவையெல்லாம் தவிர்க்கப்படவேண்டியவையாகும்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் எதிர்கொள்ளும் துன்புறுத்தல் மற்றும் ஒடுக்குமுறைகளைக் கையாள்வதற்காக 2024ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் 24 மணி நேர தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்படும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ், செவ்வாய்க்கிழமை (19) தெரிவித்துள்ளார்.

நாட்டில் எங்கிருந்தும் எந்த மொழியிலும் பிரச்சினைகளை ஹொட்லைன் இலக்கத்தின் மூலம் தெரிவிக்க முடியும் என்று கூறிய அமைச்சர், பெண் பொலிஸ் அதிகாரிகளால் இயக்கப்படும் இந்த அழைப்பு மையத்தின் மூலம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மிகவும் நம்பகமான மற்றும் நம்பகமான சேவை வழங்கப்படுகிறது. தனியுரிமை பாதுகாக்கப்பட்ட முறையாகும் என்றும் கூறியுள்ளார். நமது நாட்டை பொறுத்தவரையில், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் நாடுகளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.

குடும்ப வன்முறைகளுக்குக் குறைவே இல்லை, இதனால், பெண்களும் சிறுவர்களும் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். இதற்கிடையே பாலியல் வன்முறைகள் அதிகரித்துள்ளன. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார அமரசிங்கவின் தகவல்களின் பிரகாரம் இவ்வருடம் 2000 சிறுமிகள் தாயாகியுள்ளனர்.

இது, சமூகத்தில் பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும். அவற்றைக் கட்டுப்படுத்தும் வகையில், புதிய ஹொட்லைன் தொலைபேசி இலக்கம் செயலில் இருக்குமென நம்புகின்றோம்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X