Janu / 2025 பெப்ரவரி 09 , மு.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆட்சியிலுள்ள எதிர்கட்சி அரசாங்கத்தின் கதைகூரல்கள்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பதவியேற்று நான்கு மாதங்களும், பாராளுமன்றத்தில் இதுவரை காலமும் தனித்து பெற்றிராத மாபெரும் தனிப்பலத்தைக் கொண்ட தற்போதைய அரசாங்கம் பதவியேற்று இரண்டு மாதங்களும் கடந்துவிட்ட நிலையில், மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் உள்ளமைக்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றதை அவதானிக்க முடிகின்றது.
குறிப்பாக, ஜனாதிபதி நாட்டின் பல பாகங்களுக்கும் விஜயங்களை மேற்கொண்டு, மக்கள் மத்தியில் உரையாற்றுகையில் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பார், அல்லது அதற்றாக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பற்றி மக்களுக்கு தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், தாம் இன்னமும் எதிர்க்கட்சியில் அமர்ந்திருந்து, அரசாங்கம் செய்வதைப் போன்ற பாணியில் உரைகளை ஆற்றுகின்றமையின் நோக்கத்தை புரிந்து கொள்ள முடியாமலுள்ளது.
குறிப்பாக, மக்களின் தீராத பிரச்சனையாக தொடரும் அரிசி, தேங்காய் போன்றவற்றை பெற்றுக் கொள்வதில் சிக்கல்கள் இன்னமும் நாட்டின் பல பகுதிகளில் காணப்படும் நிலையில், அதிகரித்துள்ள அவற்றின் விலைகளை குறைப்பதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது பற்றிய தீர்வுகள் இல்லை.
மாறாக, அரசியலமைப்பின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட ஓய்வூதிய வாசஸ்தலங்களை மீளப் பெறுவது தொடர்பிலும், கடந்த கால அரசாங்கங்கள் மேற்கொண்ட தவறுகள், ஊழல்கள், பெற்றுக் கொண்ட சலுகைகள் போன்றன தொடர்பில் பேசப்படுகின்றன.
கடந்த காலத்தில் ஆட்சியிலிருந்தவர்களின் பிள்ளைகள், உறவினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள்கூட விசாரணைகளுக்கு அழைக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு, மறுநாள் வெளியில் பிணையில் வருவதையும், அதை பெரிய விடயமாக காண்பித்து, மக்கள் மத்தியில் கருத்துக் கணிப்பு பெறுவது போன்ற நாடகங்கள் சிலவும் நடந்தேறுகின்றன.
நாட்டில் சட்டம் ஒன்று உள்ளது. அது அனைவருக்கும் பொதுவானது. முன்னாள் ஜனாதிபதியின் மகன் அல்லது உயர் பதவி வகித்தவர் என்பதற்காக ஒருவிதமான நடத்தையும், சாதாரண குடிமகன் என்றால் இன்னொருவிதமான நடத்தையும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது. முன்னாள் ஜனாதிபதியின் மகன் கடந்த வார இறுதியில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த போது தமக்கு சோறும், சம்பலும் வழங்கப்பட்டதாக தெரிவித்த கருத்தை சில ஊடகங்கள் பெரிதுபடுத்தி காண்பித்திருந்தன. அதுவே வழமை, அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. அரிசியும், தேங்காயும் விற்கும் விலைக்கு, தற்போதும் அவை வழங்கப்படுவதே பெரிய விடயம்.
எனவே, அரசாங்கம் முதலில் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். காலையில் கைது செய்யப்படுபவர், மாலையில் பிணையில் வீடு திரும்ப முடியாத வகையில், குறைந்தது 14 நாட்களாவது தடுத்து விசாரிக்கப்பட வேண்டிய வகையில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை குறைக்கும் அரசியலமைப்பு திருத்தங்களை கொண்டு வர வேண்டும். அதன் பின்னர் அவற்றை செயற்படுத்த வேண்டும்.
தொடர்ந்தும், எதிர்கட்சி போல வசனங்கள் பேசிக் கொண்டிராமல், அதிகாரபலத்தைக் கொண்ட ஆளும் கட்சியாக செயலாற்ற வேண்டிய காலம் இது.
04.02.2025
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025