2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

குளத்துடன் கோபித்துக்கொண்டு கழுவாவிட்டால் நாறும்

R.Tharaniya   / 2025 ஓகஸ்ட் 14 , பி.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு, முத்தையன்கட்டு இராணுவ முகாமிற்கு சென்ற இளைஞர்களில் ஒருவர் கொல்லப்பட்டமை கண்டித்தும் வடக்கு, கிழக்கில் இராணுவ பிரசன்னத்தைக் குறைக்குமாறு வலியுறுத்தியும், ஓகஸ்ட் 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹர்த்தால், திங்கட்கிழமைக்கு (17) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

முல்லைத்தீவு, முத்தையன் கட்டுப் பகுதியில் வசித்து வரும் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தனது பொருளாதார நிலை காரணமாக வீடு அமைப்பதற்கான தகரத்தைப் பெறுவதற்காக இராணுவத்தினரின் அழைப்பின் பேரில் இராணுவ முகாமிற்கு வேறு சிலருடன் சென்றுள்ளார்.

குறித்த பகுதியில் நின்ற இராணுவத்தினர் குறித்த இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அவர்கள் அச்சத்தின் காரணமாக ஓடியுள்ளதுடன், ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இராணுவ முகாமுக்குள் சாதாரண நபர் செல்லமுடியாது. ஆக, காவலில் நின்றிருந்த இராணுவ வீரர் அனுமதியளித்துள்ளார்.ஆனால், இராணுவ முகாமுக்குள் இருந்த இராணுவ வீரர்கள், அந்த இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனால்தான், இராணுவ முகாமுக்குள் திருட வந்ததாக, பொலிஸ் தரப்பினரால் விளக்க அறிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில், இராணுவ வீரர்கள் ஐவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

யுத்தம் நிறைவடைந்து 16 வருடங்கள் கடந்தும் இராணுவத்தின் மனநிலையில் மாற்றம் ஏற்படவில்லை. அவர்கள், தமிழர்களை எதிரிகளாகவே இன்னும் பார்க்கின்றனர். என்பது முத்தையன் கட்டு சம்பவத்தில் இருந்து புலனாகிறது.

அந்த இளைஞர்களைப் பிடித்து, பொலிஸாரிடம் ஒப்படைத்து விசாரணை செய்திருந்தால் உண்மை வெளியாகியிருக்கும் ஓர் உயிரை இழந்திருக்கவேண்டியதில்லை. 

நிர்வாக முடக்கல் போராட்டத்திற்குத் தமிழரசுக் கட்சி அழைப்பு விடுத்திருக்கின்றது. அறிவிப்பு வெளியாகி இரண்டு மூன்று நாட்கள் கடந்து விட்டன. தமிழ் முற்போக்குக் கூட்டணி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள், போராட்டத்திற்கு தங்களின் தார்மீக ஆதரவையும் தெரிவித்திருக்கின்றன.

எனினும், ஏனைய தமிழ்க் கட்சிகள் எவ்விதமான கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை. இன்னுமே மௌனம் காத்துவருகின்றனர். ஓர் உயிர் இராணுவத்தால் அப்பட்டமாக அபகரிக்கப்பட்டுள்ளது. அதன் ஈரம் காய்வதற்குள் நிர்வாக முடக்கல் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தின் ஊடாக நீதி நியாயத்தை எதிர்பார்க்க முடியாது. எனினும், சர்வதேசத்துக்கு ஒரு பலத்த செய்தியைக் கொடுக்கமுடியும் என்பதே எமது அவதானிப்பாகும். அதற்கு கூட தமிழ்க்கட்சிகள் திராணியற்றவையாக இருக்கின்றன என்பதையிட்டு வெட்கித்தலைகுணிய வேண்டும். 

இங்கு ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்தது யார்? என்ற பிரச்சினையை ஏனைய தமிழ் கட்சிகளின் தலைமைகளிடம் இருக்கலாம். எனினும், அப்பாவி இளைஞனின் உயிர் காவு கொள்ளப்பட்டுள்ள நிலையில், போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தவர் யார்? என்பதைப் பார்த்துக்கொண்டிருப்பது குளத்துடன் கோபித்துக்கொண்டு குண்டியைக் கழுவாமல் விட்டால் நாறும் என்பதற்கு சமமாகும். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .