2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

சட்டத்தை அச்சொட்டாக அமுல்படுத்தாது பூசி மெழுகும் பொலிஸார்

Editorial   / 2023 டிசெம்பர் 05 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல இனங்கள் வாழும் நாடொன்றில், சட்டம், ஒழுங்கை அமுல்படுத்தும் பொலிஸார், இன, மத, மொழி பேதங்களை மறந்து, நீதி நேர்மையாக அச்சொட்டாகச் செயற்படவேண்டும். இல்லையேல், அந்நாட்டில் வாழ்பவர்கள் மட்டுமன்றி, வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும், நாட்டின் சட்டத்தின் மீது நம்பிக்கை இழந்தவர்களாகவே இருப்பர். 

தற்போதுள்ள பொலிஸாரில் ஒரு சிலரின் செயற்பாடுகளை பார்க்குமிடத்து, ஒரு துளியேனும் நேர்மையைப் பார்க்கமுடியாத துர்ப்பாக்கிய நிலைமையே ஏற்பட்டுள்ளது. 
அதுமட்டுமன்றி, சர்வதேச உடன்படிக்கையையும் மீறியே செயற்படுகின்றனர். 

அந்தளவுக்கு நிலைமை மோசமாகிக்கொண்டு போகின்றது. 

நாட்டில்,  சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கை (ICCPR) அமுலில் உள்ளது. எனினும், பக்கச்சார்பான முறையிலேயே பொலிஸார் செயற்படுகின்றனர். குறிப்பாக சிறுபான்மை இனங்களை வேண்டுமென்றே குறிவைக்கும் செயற்பாடுகளே வியாபித்து இருக்கின்றன. 

பிற மதங்களை நிந்தித்த குற்றச்சாட்டில் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கைக்கு அமைவாக, மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோ கைது செய்யப்பட்ட பல மணிநேர விசாரணைக்குப் பின்னர், கோட்டை நீதவான் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் டிசெம்பர் 13ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். 

இன, மதங்களை நிந்தித்தல், வெறுப்பு பேச்சைப் பேசியமை இது முதல் தடவையல்ல, சட்டம், ஒழுங்கு சரியாக அமுல்படுத்தப்படும் வரையிலும் இதுவே கடைசி தடவையாகவும் இருக்கமுடியாது என்பது எங்களுடைய அவதானிப்பதாகும். ஏனெனில், இதற்கு முன்னர் மிகப்பகிரங்கமாக வெறுப்பு பேச்சு பேசியவர்களுக்கு எதிராக எந்தவிதமான  நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சிங்கள- பௌத்தர்கள் பெரும்பான்மை இனமாக வாழும் நாடு என்பதால், சிங்கள-பௌத்தர்கள் குற்றமிழைக்கும் போது, கைது செய்யக்கூடாது. தண்டிக்கக்கூடாது என்று எந்தவொரு சட்டத்திலும் குறிப்பிடப்படவில்லை. எனினும், அரசியல் அழுத்தங்கள் காரணமாகவே, பலரும் பின்னடிக்கின்றனர் என்பதே எமது அவதானிப்பாகும்.

அவ்வாறு இல்லையென பொலிஸார் மறுப்பார்களாயின், தமிழர்களைத் துண்டு, துண்டாக வெட்டிக் கொல்வேன் என்று பகிரங்கமாக எச்சரித்த பௌத்த தேரர் அம்பிட்டிய சுமணரத்னவுக்கு எதிராக, ஏன்? நடவடிக்கை எடுக்கவில்லை, பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டும், விசாரணைக்காக அழைக்கப்படவில்லை.

எனினும், ஜனாதிபதியின் மட்டக்களப்பு விஜயத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர் எனக் குற்றச்சாட்டி, இருதரப்பினருக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் செய்து, பொலிஸார் பூசி மெழுகிவிட்டுள்ளனர்.

சுமணரத்ன தேரரின் வெறுப்பு பேச்சு தொடர்பில், பாராளுமன்றத்திலும் பிரஸ்தாபிக்கப்பட்டது. பொலிஸ் மா அதிபர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோரிடமும் முறையிடப்பட்டது. எனினும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

நாட்டின் சட்டம், சிறுபான்மையினரை இலக்கு வைத்தே அமல்படுத்தப்படுகின்றது என்பது மேலே குறிப்பிட்ட இவ்விரு சம்பவங்களின் ஊடாகத் தெட்டத்தெளிவாகின்றது என்பதை நினைவில் கொள்க.   

04.12.2023


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X