2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

சிறார்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராக தண்டனை அவசியம்

Editorial   / 2024 பெப்ரவரி 08 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒவ்வொரு மனிதரிடத்திலும் அன்பு, பொறுமை, பணிவு, மனித நேயம், நம்பிக்கை, தைரியம், மன உறுதி, பேராசை,மன்னிக்கும் பண்பு, கோபம், முயற்சி, கடின உழைப்பு ஆகிய பண்புகள் இருக்கவே செய்கின்றன. இதில், கோபத்தைத் தேவையான இடங்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

வாழ்க்கையில் முன்னேர வேண்டுமாயின் பேராசை இருக்கத்தான் செய்யும். மேலே குறிப்பிட்ட நற்பண்புகளில், சிலவற்றைத் தேவையான நேரங்களிலும் உடனடியாக கடைப்பிடிக்கவேண்டிய பண்புகளை அந்நொடிப்பொழுதிலும் கடைப்பிடித்தால், வாழ்க்கையில் பாரிய பிரச்சினைகளைச் சந்திக்கவேண்டிய தேவையும் இல்லை.

பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கவேண்டிய நிலைமையும் ஏற்படாது. இவற்றை எல்லாம் குழந்தைகளிடம் எதிர்பார்க்கவே முடியாது. தீக்குச்சி ஒன்றைப் பற்றவைத்து, அக்குழந்தையின் அருகில் கொண்டுச்சென்றால், அதனைப் பிடிக்கவே முயற்சிக்கும்.

ஏனெனில், குழந்தைகளிடம் இருப்பதெல்லாம். பிஞ்சு மனசு, எதையும் எடுக்கத்தான் செய்யும். அவ்வாறான குழந்தைகளுக்குக் கொஞ்சம், கொஞ்சமாகச் சொல்லிக்கொடுக்கவேண்டும். நமது நாட்டை பொறுத்தவரையில், குழந்தைகள், சிறுவர்கள், பெண் பிள்ளைகளுக்கு எதிராக வன்முறைகள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. இதில், தாய்மார் தங்களுடைய குழந்தைகளைக் கணவனிடம் விட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்குச் சென்றுவிடுகின்றனர்.

ஒரு சில மாதங்களுக்குச் சம்பளத்தை அனுப்பாவிடின், மனைவியைப் பழிவாங்கும் நோக்கில், பிள்ளைகளை அடித்துத் துன்புறுத்தும் கணவன், அதனை வீடியோவாக பதிவு செய்து அனுப்பிவிடுகின்றார். அவ்வாறான சம்பவமொன்று திம்புள்ளை-பத்தனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது. அந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து, அடித்துத் துன்புறுத்திய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். இது ஒரு சம்பவமாகும்.

இதுபோன்ற, வெளிச்சத்துக்கு வராத சம்பவங்களும் இருக்கத்தான் செய்கின்றன. வீட்டுப் பணிப்பெண்களாகச் செல்லும் தாய்மார், தங்களுடைய பெண் பிள்ளைகளையும் கணவனிடம் விட்டுச் சென்றுவிடுகின்றனர். அப்பிள்ளைகள், தன்னுடைய தந்தையால், சிறிய தந்தையால் இன்றேல் உறவினர்களால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும் சம்பவங்களும் இடம்பெறாமல் இல்லை. இவ்வாறான சம்பவங்கள், குடும்பத்தையே நடுவீதிக்கு இழுத்துவிடுகின்றன.

அந்த பெண் பிள்ளையின் எதிர்காலமே கேள்விக் குறியாகிவிடுகின்றது. பிள்ளைகள் இருக்கும் வீடொன்றில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பொருட்கள் அந்தந்த இடங்களிலேயே இருக்குமாயின், பிள்ளைகள் எதனைச் சிந்திக்கவில்லை என்பதே அர்த்தமாகும். அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் பொருட்கள் ஆங்காங்கே இழுத்து வீசப்பட்டு வீடு முழுவதும் சிதறிக் கிடக்குமாயின், அந்தப் பிள்ளைகள் புதுப்புது முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர் என்பதே அர்த்தமாகும்.

ஆகையால்தான் குழந்தைகள் மனநலத் துறை மருத்துவர்கள், அடிப்பதாலோ வேறு தண்டனைகளைக் கொடுப்பதாலோ பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது என்பதைத் தெளிவாகக் கூறியிருக்கின்றனர். சிறுவர்கள் மீதான வன்முறைகளுக்கு எதிரான சட்டங்கள் உள்ளன. எனினும், இன்னுமொரு தாய், தந்தை, குழந்தைகள் மீது வன்முறையை காட்டமல் இருக்கும் வகையில் சட்டங்கள் கடுமைப்படுத்தப்படவேண்டும் என்பதே எமது அவதானிப்பாகும். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X