Editorial / 2023 ஓகஸ்ட் 10 , பி.ப. 01:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒருவகையான டொபி சுற்றப்பட்டிருக்கும் தாளை, மிக நீண்ட நீளத்துக்கு இழுப்பது யாரென எம்மில் பலரும் முயற்சிகளை மேற்கொண்டு இறுதியில் தோல்வியைத் தழுவியிருப்பர். இல்லையேல், ஓரளவுக்கு இழுபட்டு வரும்போது பக்கத்தில் இருப்பவர் வேண்டுமென்றே கிழித்துவிடுவார். அது ஓர் அனுபவம்.
தற்காலத்தில், சூயிங்கத்தை வாயில் போட்டு நன்றாக மென்றுவிட்டு பெரியதாக முட்டையைப்போல ஊதிக்காட்ட பலரும் முயற்சிப்பர். சிலவேளைகளில் அந்த சூயிங்கம் கீழே விழுந்தால் மண் ஒட்டிக்கொள்ளும். எதற்குமே பிரயோசனமாய் இருக்காது. மீண்டும் மற்றுமொன்றை வாங்கி ஊதவே முயற்சிப்பர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின், அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பிலான முயற்சியும் ஊதிப் பெருப்பித்து உடைக்கும் முயற்சியாகவும், நீண்ட நீளத்துக்கு இழுத்து அறுத்துவிடும் முயற்சியாகவுமே இருக்கிறது என, பலரும் விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.
பாராளுமன்றத்தால் அங்கிகரிக்கப்பட்ட அரசியலமைப்பில் இருக்கும் 13ஆவது திருத்தத்தில் உள்ள அதிகாரங்களை அமல்படுத்தாது, பாராளுமன்றத்துக்குள் மீண்டும் கொண்டு வந்ததன் ஊடாக இழுத்தடிக்கும் முயற்சியிலேயே ஜனாதிபதி ஈடுபட்டுள்ளார் என்பது தெளிவாகிறது.
மாகாணசபை, உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்து இடம்பெறவிருப்பதாகக் கூறப்படுகின்ற ஜனாதிபதித் தேர்தல் வரையிலும் 13ஆவது திருத்தத்தை இழுத்தடிக்கவே முயற்சிக்கப்படுகின்றது.
இன்றேல் தமிழ் மக்களின் வாக்குகளை அள்ளிக்கொள்ளும் முயற்சிக்கான காய்நகர்த்தலே முன்னெடுக்கப்படுகிறது என்பது தெட்டத்தெளிவாகவே தெரிகிறது.
அவ்வாறு இன்றேல், தனித்தனியாக கட்சிகளை அழைத்து பேச்சுக்களை நடத்தி, காலத்தை கடத்திச் செல்லாமல், அந்தந்த மாகாணங்களைச் சேர்ந்த சகல பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஒரு குடையின் கீழ், ஜனாதிபதி சந்தித்து இருக்கலாம்.
ஆக, தீர்வை உடனடியாக வழங்காது, நீண்டகாலம் இழுத்தடிப்புச் செய்து இறுதியில் கிடப்பில் போடும் கைங்கரியத்தையே ஜனாதிபதி மிகக் கச்சிதமாகச் செய்து கொண்டிருக்கின்றார் என்பது அம்பலமாகிவிட்டது.
ஜனாபதி ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்றத்தில் புதன்கிழமை (09) உரையாற்றியதன் பின்னர், பலரும் பலதரப்பட்ட கருத்துக்களை முன்வைத்தனர். அதில், அத்துரலிய ரத்ன தேரர், ஜனாதிபதி தமிழ் மக்களுக்காக செயற்படுகின்றார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
இதனிடையே, தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள் என்று பிரித்துப் பிரித்து பேச்சுக்களை நடத்தாமல், ஓரணியில் அழைத்துப் பேச்சு நடத்தவேண்டுமென விமல் வீரவன்ச எம்.பி வலியுறுத்தினார். அதுவொரு நல்ல யோசனையென ஜனாதிபதி பதிலளித்தார்.
இந்த விவகாரத்தில் ஜனாதிபதி கையாளும் முறைமை முற்றிலும் பிழையானது. சகலரையும் அழைத்து பேசவேண்டும். இல்லையேல், அது பிச்சைக்காரனின் புண்ணாகவே இருக்கும்.
புரையோடிப்போய்யுள்ள பிரச்சினைக்கு இன்னும் தீர்வு காணப்படாமல் இருக்கின்றது என்பதை சகல தரப்பினரும் புரிந்துகொண்டு ஓரணியில் திரண்டால் மட்டுமே விடிவு கிடைக்கும் என்பதை மனதில் கொள்க. 10.08.2023
42 minute ago
45 minute ago
49 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
45 minute ago
49 minute ago
54 minute ago