2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

ஜனாதிபதி நிதியத்துக்குள் புகுந்து விளையாடிய பெருச்சாளிகள்

R.Tharaniya   / 2025 ஓகஸ்ட் 07 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

வறுமை ஒழிப்பு, கல்வி அல்லது ஞானத்தின் வளர்ச்சி, மதங்களின் எழுச்சிக்கு பங்களிப்பு செய்தல், நாட்டுக்கு சேவையாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கல், ஜனாதிபதி மற்றும் ஆட்சிமன்றக்குழு குழுவின் கருத்துப்படி, பொதுமக்களின் நலனுக்கான பணிகளைச் செய்தல் ஆகிய குறிக்கோள்களை அடிப்படியாகக் கொண்டு, ஜனாதிபதி நிதியம் 1978ஆம் ஆண்டின் 7ஆம் இலக்கச் சட்டத்தால் நிறுவப்பட்டது. 

அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஐயவர்த்தனவின் பதவியேற்பை முன்னிட்டு நடத்தப்பட்ட ஆரம்ப வைபவத்தின்போது பொதுநலவிரும்பிகளின் நிதிசார் பங்களிப்புடன் 237,120 ரூபாய்  ஆரம்ப மூலதனத்தினால் ஜனாதிபதி நிதியம் ஆரம்பிக்கப்பட்டது. அபிவிருத்தி லொத்தர்சபை மற்றும்  பொதுமக்கள் நன்கொடைகள் மூலமாக இந்த நிதியத்துக்கு நிதி திறக்கப்படுகின்றது. 

பல்வேறு நோய்களுக்கான மருத்துவ உதவி,மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வறுமை ஒழிப்புத் திட்டம்,மஹாபொல புலமைப்பரிசில் திட்டம், க.பொ.த (உ/த) விசேட சித்தி பெற்ற மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்குதல்,க.பொ.த (சா/த) விசேட சித்தி பெற்ற மாணவர்களுக்கு (உ/த) கற்பதற்காக புலமைப்பரிசில் வழங்குதல், மத சீர்திருத்தம் மற்றும் கட்டுமான பணிகளுக்காக மானியங்கள் வழங்குதல், ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படும்

‘பெரஹெரா’ மற்றும் பிற கலாச்சார நடவடிக்கைகளுக்கு நிதியுதவி வழங்குதல், தனிநபர்களின் நலனுக்காக ஜனாதிபதி நிதியம் என்ற பெயரில் அரசு வங்கிகள் மற்றும் பொது அறங்காவலர் திணைக்களத்தில் பராமரிக்கப்படும் கணக்குகள். மற்றும் ஜனாதிபதி மற்றும் செயற்குழுவின் விருப்பப்படி வழங்கப்படும் நன்மைகள் ஆகியன இந்த நிதியத்தின் செயற்பாடுகளாகும். 

எனினும், கடந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்த அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய உறவினர்களுக்காக இந்த நிதியத்தின் ஊடாக நிதியைப்பெற்றுள்ளமை அம்பலத்துக்கு வந்துள்ளது. தன்னுடைய மனைவிக்காகவும் நிதியுதவி பெறப்பட்டுள்ளது.

இது வெட்கமே இல்லாமல் பெற்றுக்கொண்டுள்ளனர். எனினும், நோய்களுக்கான மருத்துவ உதவிக்கான நிதியுதவிக்கு விண்ணப்பித்த பலரும், உரிய நேரத்தில் நிதி கிடைக்கவில்லை என கூறுவதைக் கேள்விப்பட்டிருக்கின்றோம்.

பொதுப் போக்குவரத்துக்களில் படங்களைத் தாங்கியவாறு நிதியுதவி கோரும் பலரும், தாங்கள் ஜனாதிபதி நிதியத்துக்கு விண்ணப்பித்து இருப்பதாகவும், பல மாதங்கள் கடந்தும் நிதியுதவி கிடைக்கவில்லை என கவலைப்படுவதைப் பலரும் பார்த்திருப்பீர்கள் எனினும், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் உட்பட அரசியல்வாதிகள் குழுவின் 72 க்கும் மேற்பட்ட குழந்தைகள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ரூ. 200 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள வெளிநாட்டு உதவித்தொகைகளை வழங்கியுள்ளமை அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. 

மக்கள் பணத்தை மட்டுமன்றி, பொதுமக்களுக்குக் கிடைக்கவேண்டிய நிதியத்திலும் அரசியல் பெருச்சாளிகள் புகுந்து விளையாடிவிட்டனர். அதனால்தான், அரசியலில் தொடர்ந்து குளிர்காய்வதற்குப் பலரும் முண்டியடித்துக் கொண்டுள்ளனர் என்பது புலனாகிறது. அந்தளவுக்கு சுகபோகங்களை அனுபவிக்கின்றனர், ஆகையால், எதிர்காலங்களில் இவ்வாறான முறைகேடுகள் இடம்பெறாதவகையில் சட்டங்கள் கடுமையாக்கப்படவேண்டும் என்பதே எமது அறிவுறுத்தலாகும். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .