2025 ஒக்டோபர் 14, செவ்வாய்க்கிழமை

‘தண்ணீரும் மூன்று பிழை பொறுக்கும்’ என்றொரு சொல் வழக்கு உண்டு

R.Tharaniya   / 2025 ஒக்டோபர் 08 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீர்நிலை மரணங்கள் இப்போது அதிகரித்து வருகின்றன. நீர்நிலைகளில் மூழ்கியதால் ஏற்படும் அகால மரணங்கள் நெஞ்சை உலுக்குகின்றன.  ஆறு, குளம், குட்டை, ஏரி, கிணறு, வாய்க்கால், கடல் என்று எல்லா நீர்நிலைகளும் உயிர்ப்பலி வாங்கும் களங்களாகி வருகின்றன.

சிறுவர்கள், பெரியவர்கள், நீச்சல் தெரிந்தவர், தெரியாதவர் என்று பலரும் இத்தகு மரணத்திற்கு உள்ளாவதை எண்ணும்போது வேதனையாக இருக்கிறது.
தாமாகத் தேடிவந்து மனித உயிரைக் காவு கொள்ளும் இயல்பு நீர்நிலைகளுக்கு இல்லை. மனிதர்கள்தான் தேடிப்போய் இத்தகு மரணத்தை வரவழைத்துக் கொள்கின்றனர். பொதுவாக நீர்நிலைகளில் ஏற்படும் மரணங்களுக்கு நீர்நிலைகள் பற்றிய புரிதல் இல்லாமையே முக்கியமான காரணமாகும்.

பொதுவாக ஒரு ஊருக்கு வருபவர்களுக்கு அந்த ஊரிலுள்ள நீர்நிலைகள் குறித்துத் தெரிந்திருக்காது. உள்ளூர்க்காரர்களுக்குத் தங்கள் ஊரிலுள்ள ஆறு, குளத்தின் ஆழம் பற்றி நன்றாகத் தெரியும் அதனால் நடு இரவிலும் அச்சமின்றி அதில் இறங்கி நீந்துவார்கள். ஆனால் வெளியூர்க்காரர்களுக்கோ அந்த நீர்நிலையின் ஆழம் தெரியாது.

நீர்நிலைகளில் மூழ்கி இறப்பதற்கு நீச்சல் தெரியாமையும் ஒரு காரணமாகும். நீச்சல் தெரியாதவர்களுக்கு மார்பளவு தண்ணீரில் கூட மரணம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. முன்பெல்லாம் பெரும்பாலும் மக்கள் ஆறு,குளம் என்று நீர்நிலைகள் சூழ்ந்துள்ள கிராமப்புறங்களில் வசித்து வந்தனர்.

குளிப்பதற்கும் கால்நடைகளைக் குளிப்பாட்டவும் நீர்நிலைகளை நம்பி இருந்தனர் அதனால் சிறு வயதிலேயே அவர்கள் எளிதாக நீச்சல் கற்றுக் கொண்டனர்.
முங்கு நீச்சல், நிலை நீச்சல், மல்லாக்கு நீச்சல் என்று பல நீச்சலில் தேர்ந்தவராய் இருந்தனர் அதனால் ஆறு, குளங்களில் தைரியமாகக் குதித்து, நீந்தி விளையாடினர்.

ஆழமான பகுதியில் முங்கி மண் எடுத்துக் காட்டுவதைச் சாதனையாகக் கருதினர். தரையில் ஓடிப்பிடித்து விளையாடுவது போல தண்ணீரில் நீந்திப் பிடித்து விளையாடினர்.

ஆனால் இப்போது அப்படியில்லை. பெரும்பாலானோர் நகரம் நோக்கி நகர்ந்துவிட்டனர். நீர்நிலைகளும் முன்போல் நிரம்புவதில்லை. எப்போதாவது தான் முழு அளவில் நீர் இருபதைக் காணமுடிகிறது. ஆறு, குளத்தில் குளிக்கச் செல்பவர்களும் குறைந்துவிட்டனர் நகரங்களிலும் கிராமங்களிலும் வீடுகளில் குளியலறையில் குளிக்கும் பழக்கம் வந்துவிட்டது.

நீரில் மூழ்கி உயிர் இழக்கும் அபாயத்தை நீக்க நாம் சில வழிமுறைகளை அறிந்திருக்க வேண்டும். நீர்நிலையில் இறங்கும் நீச்சல் தெரியாதவர்கள், இடுப்புக்கு மேல் ஆழம் உள்ள பகுதிக்குச் செல்லக் கூடாது.

அப்படிச் சென்றால் மிகவும் கவனமாகச் செல்ல வேண்டும். திடீரென நிலை தடுமாறி தண்ணீருக்குள் சாய்ந்து விட்டால் அதிலிருந்து சமநிலை பெற்று மீண்டு எழுவதற்குச் சிரமமாகி உயிருக்கே ஆபத்தாகி விடும்.

‘தண்ணீரும் மூன்று பிழை பொறுக்கும்’ என்று ஒரு சொல் வழக்கு உண்டு. அதன்படி தண்ணீரும் மூழ்குபவர்களை மூன்று முறை வெளியே தள்ளும். 
அப்படி வெளியே வரும்போது அவர்களின் தலைமுடியைப் பிடித்து வெளியே இழுக்க வேண்டும்.

அதுதான் தண்ணீரில் விழுந்தவரைக் காப்பாற்றுவதற்குச் சிறந்த வழி.
நீச்சல் தெரிந்து, நீர்நிலையின் தன்மையும் அறிந்து, கவனமாக நீருக்குள் இறங்கினால், நீரில் மூழ்கி உயிரிழக்கும் அபாயத்திலிருந்து தப்பிக்கலாம். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X