Editorial / 2023 ஜூலை 06 , பி.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒவ்வொரு விடயத்தையும் புரிந்துகொள்ளுதல், பிரச்சினைகள் தொடர்பில் மனம் விட்டு கலந்துரையாடுதல், தங்களுக்குள்ளே விவாதித்துக் கொள்ளுதல் இன்றேல், ஆலோசனைகளை கேட்பதன் மூலமாக, மனப்பாரம் ஓரளவுக்கேனும் குறைந்துவிடும்; பிரச்சினைகளுக்கும் தீர்வை பெற்றுக்கொள்ள முடியும்.
“தோல்விகளை, வெற்றிக்கான படிக்கற்களாக மாற்றிக்கொள்ளவேண்டும்” எனப் பலரும் கூறுவார்கள். ஏனெனில், தோல்விக்கான காரணத்தை தேடியறிந்தால், அதே தவறை மீண்டும் செய்யமாட்டோம். அதேவேளை, செய்த தவறையே மீண்டும், மீண்டும் செய்து தோற்றுவிட்டால், புரிதலே இல்லை என்பதே அர்த்தமாகும்.
ஒவ்வொரு பிரச்சினைக்கும் கட்டாயம் தீர்வு இருக்கிறது. உடனடியாக அல்லது, நீண்டகாலத்தின் பின்னரேனும் தீர்வு கிட்டும். அதுவரையிலும் பொறுமையாக காத்திருக்க வேண்டியது கட்டாயமாகும். இன்றேல், உள ரீதியிலான பாதிப்புகளுக்கு உள்ளாகி, ஆபத்தான முடிவுகளையே பலரும் எடுத்துவிடுகின்றனர்.
“இலங்கையில், 2023 இல், ஏப்ரல் மாதத்துக்குள் தன்னுயிரை மாய்த்துக்கொண்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது” என மனநல மருத்துவ ஆலோசகர் டொக்டர் சத்துரி சுரவீர தெரிவித்திருக்கின்றார்.
“இலங்கையில் சுமார் 3,000 தற்கொலை வழக்குகள் வருடாந்தம் பதிவாகின்றன, ஒவ்வொரு நாளும் சுமார் எட்டு முதல் ஒன்பது வழக்குகள் பதிவாகின்றன” என்றும் தெரிவித்துள்ளார்.
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு, வேலையில்லாத் திண்டாட்டம், வாழ்க்கையின் ஸ்திரத்தன்மையின்மை ஆகியவற்றின் விளைவால், மக்கள் அனுபவிக்கும் பொருளாதார அவலநிலை காரணமாக, தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ளுதல் அதிகரிப்பதற்கான வெளிப்படையான காரணங்களாக உள்ளன.
கடந்த ஆறு மாதங்களுக்குள் பேராதனை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஐவர், தங்களுடைய உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர். இந்த விவகாரம் பாராளுமன்றத்திலும் பிரஸ்தாபிக்கப்பட்டது. மன அழுத்தம் காரணமாகவே, மாணவர்கள் இவ்வாறான முடிவை எடுத்துள்ளனர் என்றும் விளக்கம் கொடுக்கப்பட்டு இருந்தது.
இதைவிட, பாடசாலை மாணவர்கள், சிறுவர்கள் மத்தியிலும், தன்னுயிரை மாய்த்துக்கொள்ளுதல் அதிகரித்துள்ளது. விபரீதமான விளையாட்டுகளால் மரணிக்கும் சிறுவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.
ஊஞ்சலில் இறுகி, தண்ணீரில் மூழ்கி மரணிக்கும் சம்பவங்களுக்கும் குறைவில்லை. இந்த விவகாரத்தில், பெற்றோர்கள் கடும் விழிப்பாக இருக்கவேண்டும். தங்களுடைய பிரதேசங்களில் இருக்கும் ஆபத்தான இடங்களுக்கு தனியாகவோ, நண்பர்களுடனோ செல்வதை தடுக்கவேண்டும்.
வெற்றி - தோல்விகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையை சிறிய வயதில் இருந்தே ஊட்டி வளர்க்கவேண்டும். தோல்வியால் ஏற்படும் அனுபவங்களை பகரவேண்டும். வெற்றிக்கு கரகோஷம் எழுப்புவதைப் போல, தோல்வியின் போது தட்டிக்கொடுக்க வேண்டும். அப்போதுதான் சிறுவர்களிடத்தில் தன்னம்பிக்கை பிறக்கும்.
வாழ்க்கையின் நோக்கத்தை தெளிவுபடுத்த வேண்டும். போட்டி இருக்கவேண்டும்; பொறாமை இருக்கக் கூடாதென அறிவுரை கூறவேண்டும். அதேபோல, குடும்ப உறுப்பினர்களும் தோல்விகளைக் கண்டு துவண்டுவிடாது, தன்னம்பிக்கையுடன் முன்னகர வேண்டும். அதுவே, வாழ்க்கைக்கு ஒளியூட்டும்; மற்றவர்களுக்கு முன்மாதிரியாக அமையும். தன்னுயிரை மாய்த்துக்கொள்ளுதல் ஒருபோதும் தீர்வாகாது என்பதை வலியுறுத்துகின்றோம்.
2023.07.04
35 minute ago
51 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
51 minute ago
1 hours ago
1 hours ago