2024 ஏப்ரல் 30, செவ்வாய்க்கிழமை

தவறான முடிவுகளால் தள்ளாடும் மக்களும் திவாலாகும் நாடும்

Editorial   / 2023 ஜூன் 08 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

தவறான முடிவுகளால் தள்ளாடும் மக்களும் திவாலாகும் நாடும்

கடந்த காலங்களில் ஆட்சியிலிருந்தவர்களினால் தொடர்ச்சியான மேற்கொள்ளப்பட்ட தவறான முடிவுகளால் நாடு திவாலான நிலைக்கு தள்ளப்பட்டது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளால் இவ்வாறான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தமையினால், அவ்வாறான திறமை மற்றும் போதியளவு அனுபவமற்றவர்களை தெரிவு செய்த மக்களுக்கு நல்ல படிப்பினையை ஏற்படுத்தியிருந்தது.

இவ்வாறான நிலையில் கடந்த இரண்டாண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக பல்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வரும் மக்கள் மீது, சர்வதேச நாணய நிதியத்தை மேற்கோள் காண்பித்து வரி விதிப்பனவு, மின்சாரக் கட்டண அதிகரிப்பு, எரிபொருள் விலை அதிகரிப்பு போன்ற அன்றாட வாழ்க்கைச் செலவு அதிகரிப்பில் நேரடியாக தாக்கம் செலுத்தும் பல முக்கிய பொருட்களின் விலைகளின் அதிகரிப்பு ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில், 18 வயது பூர்த்தி செய்த அனைவருக்கும் வரிக் கோவை ஒன்றை திறப்பது தொடர்பான அறிவிப்பு கடந்த வாரம் வெளியாகியிருந்தது. நாட்டின் மேம்பாட்டுக்கும், வளர்ச்சிக்கும் வரி செலுத்துவது முக்கியமானது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வரிக் கோவையை ஆரம்பித்து, அதனை பேணச் செய்வது தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானம் ஒரு பக்கம் வரவேற்கத்தக்கதாக அமைந்திருந்தாலும், வரி செலுத்தும் மக்களுக்கு உகந்த சேவை கிடைக்கின்றதா என்பது கேள்வியாகவே அமைந்துள்ளது.

குறிப்பாக, பொது மக்களுக்காக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட வேண்டிய வசதிகளில் முன்னேற்றங்கள் ஏற்பட வேண்டும். அத்தியாவசிய தேவையான மருந்துப் பொருட்களைக் கூட வைத்தியசாலைகளில் பெற்றுக் கொள்வதில் சிக்கல்கள் காணப்படுகின்றன.

இந்நிலையில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வரிக் கோவை பதிவு செய்யும் முறைமை மக்களை பாதிக்காத வகையில் அமைந்திருக்க வேண்டும். நீண்ட வரிசைகளில் காத்திருக்கச் செய்து இந்த முறைமையை மேற்கொள்ளாது, எரிபொருள் QR முறைமைக்கு மக்களை பதிவு செய்தமை போன்று, இலகுவாக இந்த கோவைக்கு மக்களை பதிவு செய்து கொள்ளக் கூடிய வசதிகள் காணப்பட வேண்டும்.

வரி செலுத்தும் மக்கள் மீது அதிகாரத்திலுள்ளவர்கள் தமது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து அரசாங்கத்தின் தவறான செயற்பாடுகளுக்கு எதிரான குரல் எழுப்புபவர்கள் மீது அதிகாரத்தைப் பிரயோகத்து அவர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை தவிர்க்க வேண்டும். இதற்கு ஒரு சிறந்த உதாரணம், அண்மையில் கைது செய்யப்பட்ட யுடியுபர் ப்ரூனோ திவாகர.

மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவோர் என தம்மை அடையாளப்படுத்திக் கொள்வோர், தமது வரப்பிரசாதங்களைப் பற்றி அக்கறை கொண்டுள்ளதுடன், பொது மக்கள் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள போதிலும், வரி விலக்களிப்புகளுடனான தமக்குரிய சொகுசு சுகபோக வாழ்க்கையிலிருந்து விடுபட்டதாக தெரியவில்லை.

இந்நிலையில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வரிக் கோவை திறப்பு என்பது தொடர்பான தீர்மானத்தின் காரணமாக, நாட்டிலிருந்து புத்திஜீவிகள் மற்றும் இளம் வயதினர் வெளியேறும் நிலை மேலும் அதிகரிக்கக்கூடும்.  

(08.06.2023)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X