2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

நொடிக்கும் மேடையின் மேலேறி ஆடுவதில் அர்த்தமில்லை

Editorial   / 2022 நவம்பர் 06 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

நொடிக்கும் மேடையின் மேலேறி ஆடுவதில் அர்த்தமில்லை

ஊர் மக்கள் எல்லோரும் கூடியிருந்து, பார்த்து, இரசித்து, கைத்தட்ட வேண்டுமாயின் கட்டப்பட்டிருக்கும் மேடை, பலமானதாக இருக்கவேண்டும். நொடிக்கும் மேடையில் ஏறி, தட்டுத்தடுமாறுவோருக்கு கேலியையும் கிண்டலையும் ஹூ அடிக்கும் சத்தத்தையும்  மட்டுமே கேட்கும் நிலைமை ஏற்கட்டுவிடும். ஆக, எப்போது மேடையேற வேண்டும் என்ற புரிதல் முக்கியமாகும்.

என்னதான் மேடை, பலமானதாக இருந்தாலும் அதில் ஏறுவதற்கும் மக்கள் பங்கேற்பதற்கும் ஜனநாயகம் முக்கியமாகும். ஜனநாயகத்தை பாதுகாக்குமாறு வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் போராட்ட உரிமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவோ, இடையூறுகளை ஏற்படுத்தவோ, பலவந்தமாக முடக்கவோ அரசாங்கத்துக்கு எவ்விதமான உரிமையும் இல்லை.  

‘அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் அடக்குமுறைக் கொள்கையை நிறுத்த வேண்டும்’, ‘பயங்கரவாத தடுப்புச்சட்டத்தை வாபஸ் பெறவேண்டும்’ போன்ற கோரிக்கைகளை முன்வைத்து  நவம்பர் 2ஆம் திகதி, கொழும்பில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

பயங்கரவாத தடைச்சட்டம் தென்னிலங்கை பெரும்பான்மை மக்களுக்கு புதிதாகும். வடக்கு, கிழக்கு பிரதேசங்களிலும் அவற்றுக்கு வெளியிலும் வாழும் தமிழர்களும் அச்சட்டம் அமல்படுத்தப்பட்ட காலத்தில் இருந்தே, வேதனைகளையும் சோதனைகளையும் அனுபவித்துக்கொண்டே இருக்கின்றனர். அச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் பத்து, பதினைந்து வருடங்களுக்கு மேல் சிறைவாசம் அனுபவிக்கின்றனர்.

அச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் சிலர், பொதுமன்னிப்பின் கீழ் கொஞ்சம், கொஞ்சமாக விடுவிக்கப்படுகின்றனர்.  ஆனாலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றன. ஜனநாயக நாடொன்றின் பிரஜைகளுக்கு போராடும் உரிமையுள்ளது.  

நாட்டை நல்வழியில் கொண்டுசெல்வது அரசாங்கத்தினது மட்டுமன்றி எதிர்க்கட்சிகளினதும் பொறுப்பாகும். எரிந்து கொண்டிருக்கும் பொருளாதார பிரச்சினை, தீப்பிழம்பாகி விட்டால்,  ஒருவாளி தண்ணீர் ஊற்றி அணைத்துவிடமுடியாது என்பதை சகலரும் புரிந்துகொள்ளவேண்டும்.

இந்நிலையில், கொழும்பு போராட்டத்தின்போது மேலே குறிப்பிடப்பட்டுள்ளவாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள், அரசாங்கத்துக்கு அவ்வளவு அழுத்தத்தை கொடுக்கவில்லை. பங்கேற்றிருந்த கட்சிகளின் பிரதிநிதிகளும் இடைநடுவிலேயே நழுவிச் சென்றுவிட்டனர். 

எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், பேரணிகள் ஊடாக ஓர் அழுத்தத்தை பிரயோகிக்கலாம்; அவையே தீர்வாகாது. நெருக்கடியான இந்தச் சூழ்நிலையில், முறையான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து, அதனை வெகுசீக்கிரமாக அமல்படுத்தவேண்டும். இல்லையேல் இன்னும் அதளபாதாளத்துக்குள் நாடு விழுந்துவிடும். அதன்பின்னர், தூக்கியெடுப்பது குதிரைக் கொம்பாகிவிடும்.

அரசாங்கத்தால் எடுக்கப்படும் முடிவுகள் அனைத்தும் மிகச்சரியானவை என்பதற்கு எதிர்காலமே பதில்சொல்லும். ஆனாலும், தவறான வழியில் பயணிக்கும் அரசாங்கத்தை, சரியான பாதையில் தூக்கி நிறுத்தவேண்டிய பொறுப்பு எதிர்க்கட்சிகளின் கைகளிலேயே உள்ளது. அதற்கு ஆர்ப்பாட்டம் மட்டுமே ஆயுதமாகாது.

நாடு இருந்தால்தான் அரசியல் செய்யமுடியும். நொடிக்கும் மேடையின் மேலேறி ஆடுவதில், எவ்விதமான அர்த்தமும் இல்லை என்பதை நினைவில் கொள்க! (04.11.2022​)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X