Janu / 2025 பெப்ரவரி 03 , பி.ப. 04:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படுவது, அதன் விலைகள், வரிகள் எவ்வாறு அமைந்திருக்கும் என்பன தொடர்பாக, கடந்த ஒரு மாத காலத்துக்கும் மேலாக நாட்டின் ஏனைய பிரச்சனைகளை மூடி மறைக்கும் ஒரு பேசு பொருளாக அமைந்திருந்த நிலையில், கடந்த வார இறுதியில் வாகன இறக்குமதி தொடர்பில் அரசிடமிருந்து தெளிவான விளக்கம் வழங்கப்பட்டிருந்தது.
ஐந்தாண்டுகளாக வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படாமல், தற்போது அதற்கான அனுமதி கட்டம் கட்டமாக வழங்கப்பட்டு வரும் நிலையில், முதலில் பொருட்களை கொண்டு செல்வதற்கான லொறி, பொதுப் பிரயாண சேவைக்கான பேருந்துகள், ட்ரக் வண்டிகள் போன்றவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், ஒன்பது நிபந்தனைகளுடன் தனியார் பாவனைக்கான கார் வகைகளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஒன்பது நிபந்தனைகளும் வாகன கொள்வனவை கட்டுப்படுத்தும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகின்றது. முன்னர் வாகன இறக்குமதி சாதாரணமாக நடைபெற்ற காலப்பகுதியில் வருடமொன்றில் 1.5 – 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையில் வாகன இறக்குமதி மேற்கொள்ளப்பட்டிருந்ததாக இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், ஐந்தாண்டுகளாக வாகன இறக்குமதிக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அனுமதி வழங்கப்படுகையில் அளவுக்கதிகமான கேள்வி எழுந்தால், ஏற்படக்கூடிய நெருக்கடி நிலையை தவிர்த்துக் கொள்ளும் வகையில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியிடம் இருக்கும் அந்நியச் செலாவணியிலிருந்து வாகனம் இறக்குமதி செய்யப்படுவதில்லை. நாட்டுக்கு கிடைக்கும் அந்நியச் செலாவணி வருமானத்தை பயன்படுத்தி இறக்குமதி மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக, சுற்றுலாத் துறை மேம்பட்டுள்ளது, இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளினூடாக கிடைக்கும் வருமதிகள், வெளிநாடுகளில் பணிபுரிவோர் நாட்டுக்கு அனுப்பும் பணம் போன்ற விடயங்களை சில உதாரணங்களாக குறிப்பிடலாம். இவற்றிலிருந்தே இறக்குமதிக்கான பணம் பயன்படுத்தப்படுகின்றது. எனவே, வாகன இறக்குமதியால் அந்நியச் செலாவணி இருப்பு குறைந்துவிடும் எனும் வாதம் செல்லாது. நாட்டின் வருடாந்த மொத்த இறக்குமதி 20 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அப்பாலானதாக அமைந்துள்ளது. ஆனாலும், மத்திய வங்கியின் கையிருப்பு 6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மாத்திரமே.
வாகன இறக்குமதிக்காக விதிக்கப்பட்டுள்ள வரிகளை எடுத்துப் பார்த்தால், சிறிய அளவிலான வாகனம் ஒன்றும் சுமார் 80 – 90 இலட்ச ரூபாய்களை தொடும் என அனுமானிக்க முடிகின்றது. உயர்ந்த வரி விதிப்பினூடாக, அரசாங்கம் தமக்கான வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்கும் இதனூடாக திட்டமிட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
எனவே, வாகனம் கனவு நனவாகும் எனும் நிலை மாறி, வாகனம் ஒன்றை வாங்குவதே கனவாக மாறும் ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.
03.02.2025
21 minute ago
33 minute ago
38 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
33 minute ago
38 minute ago
46 minute ago