Editorial / 2023 செப்டெம்பர் 20 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
போதையில் மிதக்கும் அரசியல் தலைமைகள்
மலையக அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை, தாங்கள் என்ன செய்கின்றோம்? தங்களுக்கு வாக்களித்த மக்களதுஉண்மையான பிரச்சினைகள் என்ன? அப்பிரச்சினைகளுக்கு எந்த வழிகளில் சென்று தீர்வை பெற்றுக்கொடுக்கலாம் என்பதெல்லாம் தெரியாமல், தடுமாறிக் கொண்டிருக்கும் நிலைமையே காணப்படுகின்றது.
மலையக அரசியல்வாதிகளின் செயற்பாடுகளை சமூக வலைத்தள பதிவாளர்கள் விமர்சனங்களை முன்வைத்து கிழித்துக் கொண்டிருக்கின்றனர். அதே சமூக வலைத்தளங்களில், பதிவுகளை இட்டுக்கொண்டிருக்கும் மலையகம் சார்ந்த அரசியல்வாதிகளில் சிலர், பிரச்சினைகளை கண்டும் காணாது, வேறு, வேறு பதிவுகளை இட்டு, இருக்கின்றோம் என காண்பிப்பதிலேயே குறியாக இருக்கின்றனர்.
200 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், பல தோட்டங்களில் அடிப்படை பிரச்சினைகள் கூட இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளன. ஓரளவுக்கு கல்வி கற்றவர்கள், தோட்டங்களில் இருந்து வெளியேறிவிட்டனர். கொழும்பு, உள்ளிட்ட பெருநகரங்களில் தொழில்புரியும் பெரும்பாலானவர்கள், தோட்டங்களுக்கு வெளியே காணிகளை கொள்வனவு செய்து வீடுகளை நிர்மாணித்துக் கொண்டு இடம்பெயர்ந்துவிட்டனர்.
“மலையகம்-200”ஐ வைத்துக் கொண்டு பலரும் பல நிகழ்வுகளை முன்னெடுத்தனர். அரசியல், தொழிற்சங்க நிகழ்ச்சி நிரல்களை ஒருபக்கத்தில் ஒதுக்கி வைத்துக்கொண்டு அதிலாவது சகலரும் ஓரணியில் திரண்டு இருந்திருக்கலாம். இதில், ஒருசில அரச சார்ப்பற்ற நிறுவனங்களின் கூத்தை மறக்கவே முடியாது.
இதற்கிடையே, மலையகத்தையும் தமிழர்கள் செறிந்துவாழும் பிரசேங்களையும் குறிவைத்து, புதிய மதுபான சாலைகள் முளைக்கத் தொடங்கிவிட்டன. ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் குயில்வத்தை எனுமிடத்தில் புதிதாக அமைக்கப்படவிருக்கும் மதுபான சாலைக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
ஏனைய பிரதேசங்களில் மக்களோடு மக்களாக, மக்கள் பிரதிநிதிகளும் களத்தில் நின்று எதிர்ப்பை தெரிவிப்பர். மலையகத்தை பொறுத்தவரையில், பிரதேச சபை பிரதிநிதிகள், தொழிற்சங்க பிரதிகளை முன்தள்ளிவிட்டு ஓராமாய் இருந்து வேடிக்கை பார்ப்போரே அதிகமாக இருக்கின்றனர்.
மலையக பெருந்தோட்ட மக்கள், எதிர்ப்புப் போராட்டத்தை ஓரிரு நாட்களுக்கு மட்டுமே முன்னெடுக்கக் கூடியவர்களால் உள்ளனர். அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்வதற்கு பொருளாதார ரீதியில், அவர்களுக்கு பலம் இல்லை. அரசியல் ரீதியிலும் கைகொடுப்பதற்கு முதுகெலும்புள்ளவர்கள் இல்லை. வெறும் அறிக்கை இடுவோரே அதிகமாய் உள்ளனர்.
எதிர்ப்பு தெரிவிப்பவர்களுடன் ஆசிரியர் சமூகம், பாடசாலை, பல்கலைக்கழக மாணவர்கள், வர்த்தகர்கள், ஏனைய தொழிற்றுறைகளில் இருப்பவர்கள், கைகோர்ப்பதே இல்லை. பொதுவாகக் கூறுவோமாயின், போராட்டம் ஒருங்கிணைக்கப்படாது முன்னெடுக்கப்படும்.
டயகமவில் அமைக்கப்படவிருந்த புதிய மதுபானசாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அதனை நிறுத்தியுள்ளனர். அந்த சக்தி மக்களிடத்தில் உள்ளது. அதேபோல, சமூகத்துக்கு எதிரான செயற்பாடுகளை முற்றாக ஒழிப்பதற்கு ஏனைய இடங்களிலும் குரல் கொடுக்கவேண்டும். எதிர்ப்புத் தெரிவிக்கவேண்டும்.
மலையக மக்களை பிரச்சினைகளே தெரியாமல் மதுபோதையில் மிதக்கவிட்டு, அரசியல் போதையில் மிதப்போர் இருக்கும் வரையிலும் கையேந்தி நிற்கும் நிலைமையே இருக்கும். அதில் மாற்றங்களை ஏற்படுத்துவதே காலத்தின் தேவையாகும்.
18.09.2023
40 minute ago
43 minute ago
47 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
43 minute ago
47 minute ago
52 minute ago