2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

மக்களை பாதுகாக்க வேண்டியவர்களுக்கே பாதுகாப்பில்லை

Mayu   / 2024 மார்ச் 03 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு காவல்துறையைச் சேர்ந்தவர்களிடம் உள்ளது. குறிப்பாக பொலிஸ், மக்கள் பாதுகாப்பு அமைச்சர் போன்றவர்கள் இதற்கு பொறுப்பாளிகளாக உள்ளனர்.

இவ்வாறு மக்களைப் பாதுகாப்பதற்காக நாட்டில் போதைப் பொருள் பாவனை அடங்கலாக சட்டவிரோத செயற்பாடுகளை முழுமையாக இல்லாமல் செய்யும் யுக்திய நடவடிக்கையை மக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் இணைந்து முன்னெடுத்து வரும் நிலையில், இதற்கு பல தரப்பினரும் பல்வேறான கருத்துகளை முன்வைத்த வண்ணமுள்ளனர்.

ஒரு சிலர் இந்த நடவடிக்கையை வரவேற்பதுடன், சிலர் இதற்கு எதிர்ப்பையும் வெளியிடுகின்றனர்.

சரி, இவ்வாறான சட்ட விரோத செயற்பாட்டுடன் தொடர்புடைய சிலர் கைது செய்யப்பட்டு ஆட்டுப்பட்டித் தெரு பொலிஸ் நிலையத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வந்த நிலையில், அவர்களுக்கு நஞ்சு கலந்த பால் வெளிநபரால் வழங்கப்பட்டு அவர்களைக் கொலை செய்ய முயற்சித்த நடவடிக்கைகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டிருந்த குற்றத்தடுப்பு பிரிவின் விசாரணை அதிகாரி ஒருவர் நாட்டை விட்டு வெளியேறியுள்ள சம்பவம் பற்றி பேசப்படுகின்றது.

குறித்த குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரி வெளிநாடு சென்ற பின்னர் தமக்கு நேர்ந்த சம்பவம் தொடர்பில் தனியார் ஊடகமொன்றுக்கு விளக்கமளித்துள்ளதுடன், அதன் பின்னர் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அது பற்றித் தெளிவுபடுத்தும் வகையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்த குரல் பதிவுகளைக் கேட்கும்போது, உயரதிகாரிகளுடன் ஏதேனும் வகையில் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருக்கும் நபரால் இந்த அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றதா என்பது தொடர்பில் சந்தேகம் எழுகின்றது.

குறிப்பாக, இந்த போதைப்பொருள் ஒழிப்பு, குற்றச் செயல்களை இல்லாமல் செய்யும் நடவடிக்கையை ஆரம்பித்தவர்கள் மக்கள் பாதுகாப்பு அமைச்சரும், பதில் பொலிஸ் மா அதிபருமாவர்.

இவர்கள் இந்த செயற்பாடுகளில் ஈடுபடும் பொலிஸ் அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டியது கண்டிப்பானதாகும்.

கடந்த 14 ஆம் திகதி நாட்டை விட்டு வெளியேறி, பின்னர் சுமார் 2 வாரங்களின் பின்னர் ஊடகங்களுக்கு தமக்கு நேர்ந்த அச்சுறுத்தல் தொடர்பில் ஆதாரங்களுடன் தகவல் வெளியிடும் நிலைக்குக் குற்றத்தடுப்பு பிரிவில் பணியாற்றும் இதர அதிகாரிகளும் அச்சமின்றி முன்வந்து இந்த நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபடுவார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

குறிப்பாக, தம்மை விட, தமது குடும்பத்தாருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என அறிந்ததும், அதற்கு தமது மேலதிகாரிகளிடமிருந்து உரிய பாதுகாப்பு உத்தரவாதம் இல்லாத நிலையில், அவர்களும் பின்வாங்கக்கூடும்.

துரதிர்ஷ்டவசமான சம்பவம் நடந்தேறிய பின்னர், அவர்களின் இல்லங்களுக்கு சென்று, துக்கம் விசாரிப்பதால் பலனில்லை.

அனைத்து தரப்பினரின் பாதுகாப்பையும் உறுதி செய்து இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சரும், பொலிஸ் மா அதிபரும் கவனம் செலுத்த வேண்டும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X