2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

மயிலத்தமடு - மாதவனை மாடுகளும் பஞ்சாப் நாய்களும்

Freelancer   / 2023 நவம்பர் 20 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

கால்நடை விலங்குகளை வளர்ப்பதற்கு ஆசையில்லாதவர்கள் இருக்கமாட்டார்கள். அதுமட்டுமன்றி பறவைகளையும், சிலர் பொழுது போக்குக்காகவும், பெரும்பாலானோர் குடும்ப வருமானத்துக்காகவும் வளர்ப்பார்கள், இன்னும் சிலர் தங்களுடைய பாதுகாப்புக்காக குடும்பங்களில் நாய்களை வளர்ப்பர். 

இந்த கால்நடைகளில் மாடுகள் அதிக வருமானத்தை ஈட்டித்தருகின்றன. அதற்காக மாடாய் உழைத்து ஓடாய் தேயவேண்டும். இவ்வாறு வளர்க்கப்படும் மாடுகளை, சிலர் திருடிச்சென்று இறைச்சிக்காக விற்றுவிடும் சம்பவங்களும் நடைபெறாமல் இல்லை. சினை மாடுகளையும் அறுத்துச்சென்று விற்று விடுகின்றனர். 

தங்களால் வளர்க்க முடியாவிடின், அவை கட்டாக்காலிகளாக மாறிவிடுகின்றன. இதனால், பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். பல விபத்துக்களும் இடம்பெறுகின்றனர். சிலர் மரணித்தும் உள்ளனர். 

கால்நடை விலங்குகளை வளர்த்து உழைக்கும் மக்களுக்கு போதுமான சலுகைகளை அரசாங்கம் வழங்குவதில்லை. 2024ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில்,  பால் உற்பத்தித்துறை மதிப்புச் சங்கிலியில் உள்ளவர்களின்  நிதித் தேவையை எதிர்கொள்வதற்கு மேல்நிதியிடல் கடன் வழிகளில் நடைமுறைப்படுத்த   முன்மொழியப்பட்டுள்ளது. 

தேசிய கால்நடை வள அபிவிருத்திச்சபைக்குச் சொந்தமான விவசாயப் பண்ணைகள் அனைத்தையும் வினைத்திறனுடன் பயன்படுத்தி தனியார்த்துறை பங்களிப்புடன் தினசரி பால் உற்பத்தி நாளொன்றுக்கு 20 மில்லியன் லீற்றர் வரை அதிகரிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. 

எனினும், மட்டக்களப்பு மாவட்டத்தில்  மயிலத்தமடு , மாதவனை பகுதி மேய்ச்சல் தரை விவகாரம் தொடர்பில், தமிழ்த் தரப்பினரைத் தவிர, ஏனைய தரப்பினர் அதீத கவனத்தைச் செலுத்துவதாகத் தெரியவில்லை. அங்கு நிலைமை நாடுகளுக்கு நாள் மோசமடைந்துள்ளது. 

அங்கு, வாய் பேச முடியாத மாடுகளுக்கு வாய்க்குள் வெங்காய  வெடியை வைத்து வாயை சிதறடிக்கின்றீர்கள். இதனால் அந்த மாடுகள் உணவுகூட அருந்த முடியாமல் அணு அணுவாக செத்துப்போகின்றன என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான எஸ்.ஸ்ரீதரன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

புத்தரின் தர்ம போதனைகளில் ஒன்றான காருண்யம், அங்கு அப்பட்டமாக மீறப்படுகின்றது.
இதற்குப் பின்னால், காவியுடை தரித்தவர்களே நினைகின்றனர் என்பதை மறுக்கமுடியாது. பூரண (போயா) தினங்களில் முட்டையைக்கூட உட்கொள்ளாத பௌத்தர்கள் பலர் இருக்கின்றனர். ஆனால், மயிலத்தமடு- மாதவனை பகுதி மாடுகளுக்கு எதிரான அட்டூழியங்கள் விபரிக்க முடியாதவை.  

இதனிடையே,   கட்டாக்காலிகள் மனிதர்களைத் தாக்குவது இந்தியாவில்   அதிகரித்துள்ளது. தெரு விலங்குகளால் பாதிக்கப்பட்டமை தொடர்பாக 193 மனுக்கள் பஞ்சாப்-ஹரியானா உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டன. 

தெருநாய்க் கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒவ்வொரு பல் அடையாளத்துக்கு  10 ஆயிரம் ரூபாயும்,  0.2 சென்டி மீட்டர் காயத்துக்கு  20 ஆயிரம் ரூபாய் இழப்பீட்டை வழங்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளது.  பஞ்சாப் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை முன்மாதிரியாகக் கொண்டு, மயிலத்தமடு மாடுகளை கொல்வோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே எமது வலியுறுத்தல். 

2023.11.17


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X