2025 ஒக்டோபர் 20, திங்கட்கிழமை

லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் வெட்கக்கேடு

Janu   / 2024 ஓகஸ்ட் 10 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசு துறையாக இருந்தாலும் சரி, தனியார்  துறைகளாக இருந்தாலும் சரி, ஒரு வேலையைச் செய்து கொள்வதற்கு முறைமை​யொன்று இருக்கும். அதன் செயற்பாடுகள் மெதுவாக நகரும். ஒரு சில சந்தர்ப்பங்களில் வரிசையாக நின்றே ஆகவேண்டும். அரச திணைக்களங்கள், காரியாலயங்களில் வரிசைக்கு குறைவே இருக்காது.

எனினும், பலரும் வரிசைகளில் நிற்பதற்கும், தங்களுடைய தேவைகளை முறையாக செய்து கொள்ள காத்திருக்காமல், குறுக்கு வழியில் நாடுகின்றனர். இதனால், பலரும் சிக்கி தவிக்கின்றனர். நமது நாட்டை பொறுத்தவரையில், லஞ்சம் வாங்குதல் கொடுத்தலும் மலிந்து கிடக்கின்றன.​

அடி மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரையிலும் லஞ்சத்துக்கு குறைவே இல்லை. சின்ன, சின்ன வேலைகளை செய்து கொள்வதற்கு  லஞ்சத்தை எதிர்பார்ப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து விட்டது. போக்குவரத்தை பொருத்தவரையில், போக்குவரத்து குற்றங்களுக்கான தண்டப்பணம் அதிகரிக்கப்பட்டதை அடுத்து போக்குவரத்து லஞ்சம் கூடிவிட்டது.

புற்று நோயைப் போல லஞ்சம் என்பது சமூகம் முழுவதும் பரவியுள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பல அரசு நிறுவனங்களுக்கு எதிராக மென்மேலும் அதிகரித்து வருகின்றன. கிராம சேவகர்களுக்கு எதிராக லஞ்சம் வாங்கும்  குற்றச்சாட்டுகள் அதிகமாக காணப்படுகின்றன.

பாடசாலைகளில் பிள்ளைகளை சேர்த்துக்கொள்வதற்கான  லஞ்சம் சகஜம் என்பது இரகசியமல்ல. லஞ்சம் என்பது பணமாக மட்டுமல்ல, பாலியல் ரீதியாகவும் இருக்கிறது. பிள்ளையை பாடசாலையில் சேர்ப்பதற்காக பிள்ளையின் தாயை அறைக்கு அழைத்திருந்த அதிபர் ஒருவர் சட்டத்தின் பிடியில் இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்னர் சிக்கியிருந்தார். தரம் 1 க்கு பிள்ளைகளை சேர்த்துக்கொள்வதற்காக, அதிபர்கள் பலர் லஞ்சம் வாங்குவதாக குற்றச்சாட்டுகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் தலைமை அதிகாரி ஒருவர் லஞ்சமாக பெற்ற பணத்தை எண்ணும் போது லஞ்ச வலையில் சிக்கியது ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  

லஞ்சத்துக்கு  பயம்-சந்தேகம், பதட்டம், கூச்சம் எதுவும் இல்லை என்பது லஞ்சத்தின் அளவைப் பார்த்தால் தெளிவாகத் தெரிகிறது. மேலும் அது சமூகத்தில் இயல்பாகப்பட்டுள்ளது. இது மிகவும் ஆபத்தான நிலை. பணத்தைக் காட்டாமல் ஒன்றும் செய்ய முடியாது என்ற மிக மோசமான நிலையை நாடு எட்டியுள்ளது.

சிலர் சில தந்திரங்களை செய்வதன் மூலம் தங்கள் கடமைகளை எளிதாகச் செய்ய ஆசைப்படுகிறார்கள். கடமைகளை நிறைவேற்றுவதற்கு குறிப்பிட்ட முறையான அமைப்பு இல்லாததே இதற்குக் காரணம். மேலும் அந்த கடமைக்காக எடுக்கும் நேரத்தை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் சில அரசு அலுவலகங்கள் 'முறைக்கேடானவர்களால் ' நிரம்பி வழிகின்றன.

ஒருங்கிணைப்பு செயலாளரும், வர்த்தகத்துறை அமைச்சரின் உறவினரும் லஞ்சம் வாங்கிய விவகாரத்தில், அரசியல்வாதிகளின் நெருங்கிய சீடர்கள் லஞ்சம் வாங்குவதில் தீவிரம் காட்டுவது தெளிவாகிறது. சில சமயங்களில் தங்களுக்குப் பணம் கிடைக்காது, அமைச்சருக்கு தான் என்று சொல்லி லஞ்சம் வாங்கலாம். எனவே, அரசியல்வாதிகளுக்கும் தம்முடன் நெருங்கிப் பழகும் மக்கள் மீது பொறுப்பு உள்ளது என்பதை நினைவில் கொள்க. 

05.08.2024


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .