2024 மார்ச் 28, வியாழக்கிழமை

வழிசமைக்கவேண்டும்

Editorial   / 2022 ஓகஸ்ட் 30 , மு.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

போசாக்குக் குறைபாட்டை போக்குவதற்கு வழிசமைக்கவேண்டும்

போகிற போக்கைப் பார்த்தால், “இன்னும் எத்தனை நாட்களுக்குத் தான் நோய்நொடி இல்லாமல் வாழப்போகிறோம்” என நினைப்பவர்கள் ஏராளம். “அந்தக் காலத்தில் நாங்கள் சாப்பிட்ட சாப்பாட்டால் தான், நாங்கள் எல்லாம் தென்போடு இருக்கிறோம்” என்று உடலை முறுக்கிக்காட்டும் வயோதிபர்களும் இருக்கின்றனர்.

மனிதர்களின் அத்தியாவசியத் தேவைகளான உணவு, உடை, உறையுள் ஆகியவற்றில் முழுமையான திருப்தியைப் பெறாதவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். இருக்கும் வரையிலும் நிம்மதியாக இருந்துவிட்டுப் போவோமெனக் கூறுபவர்கள் பலரும் இருக்கின்றனர். ஏனெனில், நாட்டின் பொருளாதார நெருக்கடி, அந்தளவுக்கு தலைவிரித்தாடிக் கொண்டிருக்கின்றது.

மூவேளையில் பல வேளைகளைப் பலரும் வெறுமையாகவே கழித்துவிடுகின்றர். காலை உணவின் முக்கியத்துவம் அறியாத பலரும், அதைத் தவிர்த்து விடுகின்றனர். இவை எதிர்கால சந்ததியினர் மீது கடுமையான தாக்கத்தைச் செலுத்தும். அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பினால், சத்துணவை உண்பதை விடவும், குறைந்த விலையில் வயிற்றை நிரப்பிக் கொள்வதையே பலரும் செய்கின்றனர்.

நாட்டின் பொருளாதார நெருக்கடி, சகல மட்டங்களைச் சேர்ந்தவர்களையும் கடுமையாகப் பாதித்துள்ளது. இந்நிலையில், ஐக்கிய நாடுகளின் சிறுவர்கள் நிதியம்  (யுனிசெப்)பின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் ஜோர்ஜ் லாரியா அட்ஜெய்யின் கூற்று பேரச்சத்தை ஏற்படுத்துகின்றது.

குழந்தைகளின் போசாக்குக் குறைபாட்டின் அடிப்படையில் இலங்கை உலகளாவிய ரீதியில்  6ஆவது இடத்திலும், தெற்காசியாவில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்கொள்ளும் நாடுகளில் 2ஆவது இடத்திலும் உள்ளது.

கொரோனா காலத்தில், வைரஸ் தொற்றிக்கொள்ளக் கூடாதென, சுகாதார வழிமுறைகளைக் கடுமையாக கடைப்பிடித்தமை மட்டுமன்றி, போசாக்கான உணவையும் உட்கொண்டனர். எனினும், நிலைமை தற்போது தலைகீழாக மாறிவிட்டது. குறைந்த விலையில் கிடைக்கும் உணவுகள் மீதான நாட்டமே மக்களிடத்தில் அதிகரித்துள்ளது.

உணவைப் பெற்றுக்கொள்ள முடியாமையால், பல குடும்பங்கள் வழமையாக உட்கொள்ளும் உணவைத் தவிர்த்து வருவதாகவும் குழந்தைகள் பசியுடன் நித்திரைக்கு செல்வதாகவும் ஜோர்ஜ் லாரியா அட்ஜெய் தெரிவித்துள்ளார். ஆகையால், சகலவற்றையும் கொள்வனவு செய்வதைக் கைவிட்டு, வளர்க்கக்கூடிய மரக்கறிகளை வீட்டுத் தோட்டங்களில் வளர்த்து, குழந்தைகளுக்கு உணவாகக் கொடுக்க ஒவ்வொரு பெற்றோரும் முன்வரவேண்டும்.

பாடசாலைகளுக்குச் செல்லும் சிறார்களைப் பொறுத்தவரையில், காலை உணவு கட்டாயமானது. வெறும் வயிற்றுடன் செல்வோர், வகுப்பறையில் சோர்வாகவே இருப்பர். அதில், அவர்களின் எதிர்காலத்தை முழுமையாகப் பாதித்துவிடும்.  போசாக்கு இன்மையானது எதிர்காலத்தை சூனியமாக்கிவிடும்.

நாட்டின் தற்போதை நிலைமையானது வழமைக்குத் திரும்புவதற்கு நீண்ட நாட்கள் எடுக்கும். செலவுகளோ வருமானத்தை விஞ்சி நிற்கிறது. எனினும், எதிர்கால சந்ததியினரைக் கவனத்தில் கொண்டாவது ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென நாமும் வலியுறுத்துகிறோம். (30.08.2022)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X