2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

விடயம் விளங்காமல் நேரத்தை வீணடிப்பது இப்படித்தான்

Mayu   / 2024 மார்ச் 07 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மத்திய வங்கி ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கியமை தொடர்பில் பல தரப்பினர் மத்தியில் பேசப்படும் நிலையில், பாராளுமன்றத்தில் பேசப்படும் முக்கிய விடயமாகவும் அமைந்துள்ளது. 

குறிப்பாக அரச நிதி தொடர்பான குழு கூட்டத்தில் முன்னிலையாகிய மத்திய வங்கியின் ஆளுநர் அடங்கிய குழுவினர் சம்பள அதிகரிப்பு தொடர்பில் விளக்கங்களை சமர்ப்பித்திருந்த நிலையில், இந்த சந்திப்பு எவ்வித தீர்மானத்தையும் எட்டாமல் நிறைவடைந்திருந்தது. 

சம்பள அதிகரிப்பை வழங்குவது என்பது மத்திய வங்கியின் சம்பளக் கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானமாக அமைந்திருப்பதாக மத்திய வங்கியின் சார்பில் தெரிவிக்கப்பட்ட போதிலும், அந்த கூட்டு ஒப்பந்தம் தொழில் அமைச்சில் பதிவு செய்யப்படாமை ஒரு பிரச்சனையாக அமைந்திருந்தது. 

இந்நிலையில் சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும், ஆனால் வழங்கப்பட்ட உயர்வு, குறிப்பாக இலட்சக் கணக்கில் வழங்கப்பட்ட உயர்வு என்பது ஏற்றுக் கொள்ள முடியாது.

அதுவும் நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியான சூழலில், மத்திய வங்கியினால் இவ்வாறான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டமை ஏற்புடையதல்ல என்பதே அரச நிதி தொடர்பான குழு கூட்டத்தின் தலைவர் கலாநிதி. ஹர்ஷ டி சில்வாவின் வாதமாக அமைந்திருந்தது. 

இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும், அது தொடர்பில் விவாதம் நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளாலம் என்பது தொடர்பில் நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த விடயம் பற்றி தெளிவில்லாத அரச மற்றும் எதிர்தரப்பு உறுப்பினர்கள் பலர் பாராளுமன்ற நேரத்தை வீணடிக்கும் வகையில் தமது கருத்துகளை முன்வைத்திருந்ததை அவதானிக்க முடிந்தது.

ஒவ்வொரு பாராளுமன்ற அமர்வும் பொது மக்களின் பணத்தில் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த அமர்வுகளில் மக்களுக்கு பயனுள்ள வகையிலான விடயங்கள் பேசப்பட வேண்டியது முக்கியமானதாகும். 

தமக்கு ஒருவிடயம் பற்றிய போதிய தெளிவு இல்லாவிடின், அது பற்றி முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். மாறாக, கருத்து தெரிவிப்போரை திசை திருப்பும் வகையில் நடுவே எழும்பி உரத்த குரலில் கத்துவது என்பது பொருத்தமற்ற செயற்பாடாகும். 

பல்வேறு தரப்பினரிடமிருந்தும் மத்திய வங்கிக்கு அழுத்தம் பிரயோகிக்கப்படும் நிலையில், தாம் மேற்கொண்ட தீர்மானத்தின் பிரகாரம் வழங்கிய சம்பள அதிகரிப்பை, மீள் பரிசீலனை செய்யுமா? அதற்கு சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்கள் ஒத்துழைக்குமா? ஊழியர்களின் மனநிலை எவ்வாறு அமையும்? இந்தக் கேள்விகளுக்கு பதில் ஒருபுறமிருக்க, மத்திய வங்கியின் பொறுப்பின் கீழுள்ள ஊழியர் சேமலாப நிதியத்துக்கு வழங்கப்படும் வட்டி வீதம் 9 சதவீதமாக குறைப்பது தொடர்பில் கடந்த ஆண்டில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இவ்வாறான மக்களுக்கு பாதிப்பான தீர்மானத்தை மேற்கொண்டுவிட்டு, சாதாரண மக்களை விட உயர்ந்த சலுகைகளை அனுபவிக்கும் மத்திய வங்கியின் ஊழியர்களுக்கு இவ்வாறு உயர்ந்த தொகையில் சம்பள அதிகரிப்பு வழங்குவது உண்மையில் அந்த தீர்மானத்தை மேற்கொண்ட அதிகாரிகளின் மனசாட்சிக்கு சரியானது தானா?

தொடர்ந்தும் இதைப்பற்றி பேசியே, நாட்டின் ஏனைய பிரச்சனைகள் கவனிக்கப்படாமல் இருந்துவிடுமா?


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X