2025 ஒக்டோபர் 20, திங்கட்கிழமை

விதியின் விளையாட்டல்ல: விழிப்பாகவும் இருக்க வேண்டும்

Janu   / 2024 ஒக்டோபர் 08 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

சில மரணங்களை பற்றி பேச தேவையில்லை. எனினும், பல மரணங்கள் பேச வைத்துவிடும். அதிலும், அகால மரணங்கள் என்றுமே நினைவில் நிற்கும். பாடசாலையில் கல்வி பயிலும் போது, இடம்பெறும் அகால மரணங்கள், ஒவ்வோர் ஆண்டும் நினைவை நெருட செய்துவிடும்.

நுவரெலியா வலயக் கல்வி வலயத்தின் கீழ் இயங்கும் கொட்டகலை கேம்பிரிஜ் தமிழ்க் கல்லூரியில் 13ஆம் ஆண்டு தொழில்நுட்பக் கல்வி பயிலும், தலவாக்கலை கிரேட் வெஸ்டர்ன் தோட்டத்தில் வசிக்கும் 18 வயதுடைய சிவகுமார் நதீஷ் என்ற மாணவனின் அகால மரணமும், அந்த பாடசாலையைச் சேர்ந்தவர்களின் மனங்களில் மட்டுமட்டுல்ல, மாணவர் சமூகத்தின் மனங்களில் இருந்து என்றுமே அகலாது.

பாடசாலை இடைவேளையின் போது கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது பந்தை பிடிக்கச் சென்று பாடசாலை கட்டிடத்தின் சுவரில் வழுக்கி விழுந்து,தலையில் பலமாக அடி பட்டமையால், அந்த நதீஷ், வெள்ளிக்கிழமை (04) உயிரிழந்தார்.

13ஆம் ஆண்டு தொழில்நுட்பக் கல்வி பயிலும் மாணவன், கனவு மட்டுமன்றி, அந்த குடும்பத்தின் கனவை, உயரே வந்த பந்து பறித்துவிட்டது. நதீஷ், விளையாட்டில் மட்டுமன்றி, கல்வியிலும் கெட்டிக்காரன் என்பதை அவருடைய கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறு பறைசாற்றும்.

பாடசாலை இடைவேளை, அவரது குடும்பத்தை மட்டுமன்றி, பாடசாலை சமூகத்தையே, இடைவெளியாகிவிட்டது. அப்போது, பந்தை வீசிய மாணவன், அந்த பந்தை உயரே துடுப்பெடுத்தாடிய மாணவன், அவன் வைத்திருந்த துடுப்பாட்ட மட்டை, உயரே பறந்த பந்தை பிடியெடுக்குமாறு கத்திய மாணவர்களின் மனநிலை, நதீஷின் தலை மோதுண்ட கட்டிடத்தின் அந்த இடத்தை கடந்து செல்லும் போதெல்லாம் பல கதைகள் சொல்லப்படும்.

அந்த கல்லூரியில் ஒவ்வொரு நாளும் கிடைக்கும் பாடசாலை இடைவேளையின் போது, ஒவ்வொரு மாணவர்களின் மனங்களையும் நதீஷ், நெருட செய்துவிடுவான். நண்பர்கள், நண்பிகள், பாடசாலை நிர்வாகம் ஆகியவற்றில் இருந்து இலகுவில் அகல முடியாத வடுவுடன் சென்றுவிட்டான்.

பாடசாலை நேரத்தில், இவ்வாறான அகால மரணம் இடம்பெற்றது இது முதல் தடவையல்ல, இறுதி தடவையாகவும் இருக்க வாய்ப்புகள் குறைவு. எனினும், அவதானமாக இருந்தால், அதனையும் வெற்றிக்கொள்ள முடியும். நதீஷின் அகால மரணம் விதியின் விளையாட்டு எனக்கூறி அசட்டையாக இருந்துவிடாமல் விழிப்பாகவும் இருக்க வேண்டும்.

ஒவ்வொரு விளையாட்டுகளிலும் இருக்கும் ஆபத்தான விடயங்களை மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். விளையாட்டுகளால், உலகளாவிய ரீதியில் பாடசாலை மட்டங்களில் கடந்த காலங்களில் ஏற்பட்ட பல கசப்பான சம்பவங்களை உதாரணமாக எடுத்துக் கொண்டு கற்பிக்க வேண்டும்.

ஒவ்வொரு அபாயகரமான சம்பவங்களுக்கும் பின்னரும் அதிரடியான தீர்மானங்கள் எடுக்கப்படும், அவை ஓரிண்டு வாரங்களுக்கு மட்டுமே அச்சொட்டாக அமலில் இருக்கும். பின்னர், “பழைய குருடி கதவை திறவடி” கதையாக மாறிவிடும். ஆகையால், விதியின் விளையாட்டல்ல, விழிப்பாக இருக்க வேண்டுமென ஒவ்வொரு இடைவேளையின் முன்பும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என நாமும் வலியுறுத்துகின்றோம்.

2024.10.08

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .