2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

வைத்தியர்களின் ஆலோசனைகளை பின்பற்றுவது அவசியம்

Editorial   / 2024 பெப்ரவரி 14 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

வைத்தியசாலைகளுக்குச் சென்று மருந்தெடுக்க அச்சமடையும் நபர்கள், இதெல்லாம் என்ன? நோய், கொஞ்சம் சுடுநீரைக் குடித்தால் அல்லது மஞ்சளை அள்ளி பூசிக்கொண்டால் எல்லாமே சரியாகிவிடும் என நினைக்கும் அளவுக்கு மருத்துவத்துறை சென்றுள்ளது.

முன்னைய காலங்களில், கைவைத்தியமே சிறந்ததாக இருந்தது. தற்போதும் சில வருத்தங்களைக் குணப்படுத்த கை வைத்தியம் சாத்தியமானதாக இருக்கிறது.

எனினும், எல்லா வருத்தங்களுக்கு அது சரிபட்டுவராது. தொற்று நோய்களும், தொற்றா நோய்களும் தலைவிரித்து ஆடுகின்றன. நம்முடன் நேற்று உயிர்வாழ்ந்தவர்கள் மறுநாள் மரணமடைந்திருப்பார்.

சிலரது மரணங்களுக்குத் தொற்றா நோய்களே பிரதான காரணங்களாக அமைந்துவிடுகின்றன. இவற்றுக்கெல்லாம் அப்பால், பருவ நோய்களும் அவ்வப்போது வாட்டி வதைத்துக்கொண்டிருக்கின்றது. கடந்த வருட நடுப்பகுதியில் இருந்து இவ்வருட ஜனவரி நடுப்பகுதி வரைக்கும், கடுமையாக மழை பெய்ததது.

இதனையடுத்து, டெங்கு நுளம்புகள் பெருகியமையால், டெங்குகாய்ச்சல் தலைவிரித்தாடியது. இதற்கிடையில், கடும் வெப்பமான காலநிலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.

இதனால் தோல் நோய்களின் தாக்கம் அதிகமாகக் காணப்படுமென லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள் நல மருத்துவர் தீபால் பெரேரா எச்சரித்துள்ளார்.

குழந்தைகளைத் தினமும் இரண்டு வேளை குளிக்க அனுமதிக்க வேண்டும் என்றும், தோல் நோய் உள்ள குழந்தைகளைக் காலை, இரவு என 20 நிமிடங்கள் தண்ணீரில் குளிப்பாட்டினால் கட்டுப்படுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் , குழந்தைகள் விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டால், உட்புற இடங்களைப் பயன்படுத்தவும், தண்ணீர் மற்றும் திரவங்களைத் தவறாமல் குடிக்கவும், இந்த நிபந்தனைகளைப் பின்பற்றாவிட்டால், அவர்கள் வெப்ப அதிர்ச்சி நிலைமைகளால் இறக்கக்கூடும் என்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் உள்ள குழந்தைகளுக்குக் குளிப்பதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

கடுமையான வெப்பத்தால் ஏற்படும் தோல் நோய்கள், குழந்தைகள், சிறுவர்களையே கடுமையாகத் தாக்குகின்றன. அரச வைத்தியசாலைகளில் பல்வேறான மருந்துகளுக்குக் கடுமையான தட்டுப்பாடு நிலவுவதால், தனியார் வைத்தியசாலைகளையே நாடவேண்டும். அதற்கும் போதியளவில் நிதி வசதி இருக்காது.

இதேவேளை, தண்ணீர்க் கட்டணங்கள் பல மடங்குகளாக அதிகரிக்கப்பட்டுள்ளமையால், சாதாரண குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு இரண்டு, மூன்று தடவைகள் நாளொன்றுக்கு நீராடுவது சாத்தியமாகாது. எனினும், தோல் நோய்களில் இருந்து தப்பித்துக்கொள்வதற்கு மாற்று வழிமுறைகளே இல்லை.

இந்நிலையில், சில பாடசாலைகளில், விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. அதற்காகக் கடுமையான வெயிலில் மாணவர்களுக்குப் பயிற்சியளிக்க வேண்டாம் என்றும் வலியுறுத்துகின்றோம்.

இந்த வெப்பத்தால், மரம், செடி, கொடிகள் காய்ந்து விடும், நீர்நிலைகள் வற்றி விடும். கரையோர ஆறுகளுக்குள் கடல் நீர் புகுந்துவிடும், நீர் வெட்டும் அமுலாகும். இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு, பாதுகாப்பான நடவடிக்கைகளை எடுத்துக்கொள்வது ஒவ்வொருவரினதும் பொறுப்பாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X