2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

சசிகலாவின் ரூ.100 கோடி பங்களா முடக்கம்

A.K.M. Ramzy   / 2021 செப்டெம்பர் 09 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை,

சசிகலா குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் உட்பட 187 இடங்களில் கடந்த 2017ஆம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

தொடர்ந்து 5 நாட்கள் நடந்த சோதனையில் சசிகலா குடும்பத்தினர் 60இக்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை தொடங்கி ரூ.1,500 கோடி வரை வரி ஏய்ப்பு செய்ததை வருமான வரித்துறை புலனாய்வு பிரிவினர் கண்டுபிடித்தனர்.

அத்துடன், சில ஆயிரம் கோடி ரூபாய்க்கு பல்வேறு சொத்துகளில் முதலீடு செய்தது தொடர்பான ஆவணங்களும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து, ரூ.1,500 கோடி மதிப்பிலான சொத்துகளை கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் முடக்க நடவடிக்கை எடுத்தனர்.

இந்த நிலையில் மேலும் ரூ.300 கோடிக்கும் அதிகமான சொத்துகளை வருமான வரித்துறையினர் கையகப்படுத்தினர். கையகப்படுத்திய சொத்துகளில் வருமான வரித்துறையினர் நோட்டீஸ் ஒட்டி உள்ளனர். தற்போது பையனூர் பங்களாவும் முடக்கப்பட்டு உள்ளது.

 

இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

சசிகலா மற்றும் அவருக்கு தொடர்புடையவர்களின் வீடுகளில் கடந்த 2017-ம் ஆண்டு வருமான வரி சோதனை நடந்தது. அப்போது கிடைத்த ஆவணங்கள் தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு சொத்துகள் முடக்கப்பட்டு வருகின்றன. அதேபோல், ஐதராபாத்தில் உள்ள ஒரு நிறுவனத்தின் பெயரில் இருந்த 65 சொத்துகள் பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்டன.

 

இதில், சென்னை போயஸ் தோட்டத்தில் வேதா நிலையம் எதிரே 22 ஆயிரத்து 460 சதுர அடி நிலத்தில் கட்டப்பட்டு வரும் கட்டிடமும் அடங்கும். ஆலந்தூர், தாம்பரம், ஸ்ரீபெரும்புதுார் உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள 200 ஏக்கர் நிலங்கள் உள்பட ரூ.300 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துகள் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

 இந்த சொத்துகள் பரிமாற்றம் கடந்த 2003, 2005ஆம் ஆண்டுகளில் நடந்துள்ளது. கையகப்படுத்தப்பட்ட சொத்துகளின் வாயில்களில் வருமான வரித்துறையின் பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த சொத்து கையகப்படுத்தப்பட்டுள்ளதாக நோட்டீஸ் ஒட்டப்பட்டு வருகிறது.

தற்போது செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த பையனூர் பகுதியில் 49 ஏக்கரில் அமைந்துள்ள ரூ.100 கோடி மதிப்பிலான பங்களா முடக்கப்பட்டுள்ளது. பங்களா முடக்கப்பட்டதற்கான 10 பக்கங்கள் உடைய நோட்டீசும் அதன் வாசலில் ஒட்டப்பட்டுள்ளது.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .