2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

பனி மலை சிகரத்தை எாிமலையாக்கும் எல்லை தகராறு

Editorial   / 2022 டிசெம்பர் 15 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

பனி மலை சிகரத்தை எாிமலையாக்கும் எல்லை தகராறு

 

இந்திய அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் பகுதியில் யாங்சே அருகே இந்திய, சீன இராணுவங்களுக்கு இடையே இடம்பெற்ற எல்லை மோதல், பனி படா்ந்த அந்த எல்லைப் பிரதேசத்தில் அரசியல் முறுகலை உருவாக்கி உஷ்ணத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இரண்டு நாடுகளினதும் எல்லையாக கருதப்படும், பனியால் சூழப்பட்ட இந்தப் பகுதி ஆறுகள், ஏரிகள், பனிமலை சிகரங்களைக் கொண்டது.

15,106.7 கிலோமீட்டர் நீளமுள்ள இந்தியாவின் நில எல்லையானது, மொத்தம் ஏழு நாடுகளை தொட்டு செல்கிறது. இதைத் தவிர, 7516.6 கி.மீ நீளமுள்ள கடல் எல்லையை கொண்டுள்ளது.

பங்களாதேஷ் (4,096.7 கி.மீ), சீனா (3,488 கி.மீ), பாகிஸ்தான் (3,323 கி.மீ), நேபாளம் (1,751 கி.மீ), மியன்மார் (1,643 கி.மீ), பூட்டான் (699 கி.மீ), ஆஃப்கனிஸ்தான் (106 கி.மீ) ஆகிய இந்த ஏழு நாடுகளும் இந்தியாவுடன் தமது எல்லைகளை பகிர்ந்துகொள்கின்றன.

இந்தியா, சீனாவுடன் 3,488 கி.மீ எல்லையை பகிர்ந்து கொள்கிறது. ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகியவற்றை தொட்டு இந்த எல்லை நீண்டு செல்கிறது.

மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ள இந்த எல்லையின் மேற்குப் பகுதியில் ஜம்மு-காஷ்மீர், மத்தியப் பகுதியில் இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் பிரதேசமும்  கிழக்குப் பகுதியில் சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசமும் இடம் பெற்றுள்ளன.

இந்தியா, சீனா ஆகிய  இரண்டு நாடுகளின் எல்லைகளும் இதுவரை ஒழுங்காக வரையறுக்கப்படாத காரணத்தால், எல்லையில் பல பகுதிகள் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே அடிக்கடி எல்லை தகராறுகள் நீடித்து வருகின்றன.

அண்மையில்  இந்திய, சீன எல்லைப் பகுதியில் இரு தரப்பு வீரர்களுக்கிடையே ஏற்பட்ட திடீர் மோதல் காரணமாக  இந்த பிராந்தியம் மீண்டுமொரு முறை சூடு பிடித்திருக்கிறது.

கடந்த 9ம் திகதி இந்திய மற்றும்  சீன இராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதல் பற்றிய  தகவல்களை இராணுவ தரப்புகள் வழங்கியிருந்தன.

2020ம் ஆண்டு ஜுலை மாதம்  லடாக்கின், கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலுக்குப் பிறகு இந்த மோதல் இடம்பெற்றிருக்கிறது.

சீனா தனது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள வசதியாக எல்லைப் பகுதி­யில் பல்­வேறு கட்டுமானப் பணிகளை இந்தப் பகுதியில் இரகசியமாக மேற்­கொண்டு வருவதாக இந்தியா குற்றம்சாட்டி வந்திருகிறது.

கடந்த 9ம் திகதி இடம்பெற்ற  மோதலின் போது, இருதரப்பிலும் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லையென்றும் சில வீரர்கள் மட்டும்  காயமடைந்திருப்பதாகவும் சா்வதேச ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சீன- இந்திய எல்லை மோதல்  குறித்து சீன வெளியுறவு அமைச்சகமும், சீன இராணுவமும்  அறிக்கைகள் மூலம் தமது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளன. 

டிசம்பர் 9ம் திகதி மோதல் இடம்பெற்றதை ஏற்றுக் கொண்டுள்ள அந்த அறிக்கை, தமது பகுதிக்கு உரிய  உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு உட்பட்ட பகுதியில் , வழக்கம் போல  ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த  சீனத் இராணுவத்தினரை,  இந்திய இராணுவ வீரர்கள் தடுத்ததாக கூறுகிறது.

என்ற போதிலும், டிசம்பர் 9ம் திகதி அருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டரில் சீன ராணுவ துருப்புக்கள் அத்துமீறி நுழைந்ததாகவும், அதற்கு இந்தியா பதிலடி கொடுத்ததாகவும் இந்திய இராணுவம் கூறியிருக்கிறது. 

இந்த மோதலின் போது,  இரு தரப்பிலும் சில வீரர்கள் காயமடைந்ததாகவும்  அதனைத் தொடர்ந்து, இரு நாட்டு வீரர்களும் உடனடியாக அங்கிருந்து பின்வாங்கி விட்டதாகவும்  இந்திய ராணுவம் கூறியுள்ளது.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லைப் பிரச்­சினை பல ஆண்டுகளாக தொடா் கதையாக நீடித்து வரு­கிறது.

2020ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் திகதி கல்­வான் பள்ளத்தாக்கில் இருதரப்பு வீரர்களும் கடுமையாக மோதிக்கொண்டனர்.

இந்த  மோதலின் போது தடி மற்றும் ஏனைய ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்ட போதிலும், துப்பாக்கிகள் பயன்படுத்தப்படவில்லை. இதற்குக் காரணம், 1996ம் ஆண்டு  சீனாவும் இந்தியாவும் தமது எல்லையில்  துப்பாக்கி அல்லது வெடி பொருட்களை உபயோகிக்கக் கூடாது என்று ஒரு ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டுள்ளன.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னா் இடம்பெற்ற இந்த மோதலில், இந்­திய வீரர்­கள் இரு­பது பேரும் சீனத் தரப்பில் நாற்பது பேரும் பலியாகியதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால் சீனா இந்த தகவலை மறுத்து வந்ததுடன், தனது இராணுவ வீரா்கள் எத்தனைப் பேர் இறந்தாா்கள் என்ற தகவலை வெளியிட மறுத்தும் வந்தது.

அவுஸ்திரேலிய நாளிதழான 'தி கிளாக்சன்' 2022ம் ஆண்டு பெப்ரவரி மாதம் தனது புலனாய்வு செய்தியில்,  2020ம் ஆண்டு இடம்பெற்ற மோதலில் கல்வானில் நான்கு சீன வீரர்கள் அல்ல, சீனாவுக்கு அதை விட பல மடங்கு இழப்பு ஏற்பட்டதாகவும், அந்த மோதலில் குறைந்தது 38 சீன வீரர்கள் வரை இறந்ததாகவும்  எழுதியிருந்தது.

இந்திய வீரர்கள் இருபது பேரையும்,  எண்ணிக்கை குறிப்பிடப்படாத சீன வீரா்களையும் பலியெடுத்த  கல்வான் மோதலைப்  போலல்லாமல், டிசம்பர் 9ம் திகதி இடம்பெற்ற யாங்சே மோதல் இரத்தம் சிந்தாமல் இராணுவ விரா்களின் கைகால் எலும்பு முறிவுகளோடு மட்டும் முற்றுப் பெற்றுள்ளது.

சீன இராணுவத்தினர் எல்லையில் முன்னறிவிப்பு ஏதுமின்றி, சட்டவி­ரோ­த­மாக தடுப்புகளை அமைக்க முயன்றது­தான் மோதல் ஏற்பட முக்­கியக் கார­ணம் என்று இந்திய தரப்பால் கூறப்படுகிறது.

இந்த மோதல், சீன இராணுவத்திற்கு  மிகவும் மூலோபாய முக்கியத்துவமிக்க பகுதியாக கருதப்படும்  யாங்சே பகுதியில் இடம்பெற்றிருப்பதை வைத்து இதன் பின்னணி அரசியலை புரிந்து கொள்ள முடியுமாக இருக்கிறது.

இந்த மோதல் தவாங் பிரதேசத்திலிருந்து 25 கிமீ தொலைவில் அமைந்துள்ள யாங்சேயில் நடந்துள்ளது.

யாங்சேயில் இந்திய மற்றும் சீன துருப்புக்கள் மோதுவது இது முதல் முறையுமல்ல.   இந்திய மற்றும் சீனப் படைகளுக்கு இடையேயான மோதல் இடம்பெற்ற தளம் மிக உயரமான மலைச் சிகரமாகும்.  இந்த சிகரம்,  இருபுறத்தையும் தெளிவாக நோட்டமிடும் வசதியை வழங்கும் இராணுவ ரீதியில் மூலோபாய பெறுமதி மிக்க பகுதியாகும்.

கடந்த 2021ம் ஆண்டு, சுமாா்  200 வீரா்களைக் கொண்ட சீன இராணுவ படையணியொன்று அருணாச்சலப் பிரதேசத்தின் வடமேற்கு மாவட்டமான தவாங் ஊடாக இந்திய எல்லைக்குள் நுழைந்தது.

சீனா அடிக்கடி அத்துமீறும் இந்தப் பகுதி  மேற்கில் பூட்டானுடனும் வடக்கே திபெத்துடனும் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. திபெத் தற்போது சீனாவின் கட்டுப்பபட்டில் இருக்கிறது. திபெத்திய மக்கள் ஏராளமானோருக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்துள்ளது. அந்த மக்களின் மதகுருவான தலாய் லாமாவும் இந்தியாவில் இருக்கிறார். திபெத் தொடா்பாக இந்தியாவுக்கும் சீனாவுக்குமிடையில் நிறைய முரண்பாடுகள் இருக்கின்றன.

இந்தியாவின் “உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டை” ( Line of Actual Control- LAC) மீறி,  சீன இராணுவம் தனது அத்துமீறலை அடிக்கடி நடாத்தி வந்திருக்கிறது.  சீனாவின் இந்த நகா்வுகளில் “திபெத்” தொடா்பான அதன் அரசியல் நிகழ்ச்சி நிரல் பின்னணியில் இருக்கிறது.

இரண்டு நாடுகளுக்கும் அடிக்கடி சா்ச்சைகளையும், மோதல்களையும் உருவாக்கும் இந்த கட்டுப்பாடு கோடு பற்றி கொஞ்சம் பாா்ப்போம். இந்த  “உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு” ( Line of Actual Control- LAC) என்று அழைக்கப்படுகிறது.  இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே அமைந்துள்ள இந்த எல்லைக்கோடு சுமாா்  4057 கிலோ மீட்டர் நீளத்தைகொண்டிருக்கிறது.

இந்த கட்டுப்பாட்டுக் கோடு இந்தியாவின் ஐந்து மாநிலங்களைத் தொட்டுச் செல்கிறது.  மேற்கில் லடாக்கையும், மத்தியில் உத்தரகாண்ட் மற்றும் இமாசலப் பிரதேசத்தையும், கிழக்கில் சிக்கிம் மற்றும் அருணாசலப் பிரதேசத்தையும் இது தொட்டுச் செல்கிறது.

இந்திய சீனப் போருக்குப் பின்னர், இருநாடுகளின் எல்லையாக  இந்த “உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு” விளங்குகிறது.

2013 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம்  இந்திய-சீன நாடுகள், எல்லையில் பதற்றம் ஏற்படாமல் இருக்க, உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டருகில் இரு நாட்டு இராணுவப்படைகளும் ரோந்து சுற்றி வர முடியும் என்று உடன்படிக்கை செய்து கொண்டன.

என்ற போதிலும், 2020ம் ஆண்டு லடாக்கில் இந்திய - சீன இராணுவ  மோதல் தொடங்கிய காலத்திலிருந்து இரு தரப்பினரும் இமயமலை எல்லையில் தமது துருப்புக்கள் மற்றும் கனரக ஆயுதங்களை அதிகப்படுத்தி வந்தன.

கடந்த  ஆண்டு(2021) அக்டோபர் மாதம், சீன வீரர்கள் எல்லையை மீறி வந்து, இந்திய பக்கத்தில் உள்ள இராணுவ பதுங்கு குழிகளை சேதப்படுத்தியதில் இரண்டு நாடுகளுக்குமிடையில் சா்ச்சைகள் மீண்டும் மேலெழுந்தன.

100க்கும் மேற்பட்ட சீன இராணுவ வீரர்கள் உத்தரகாண்டின் பராஹோதியில் அமைந்தள்ள இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து, ஒரு பாலம் உள்ளிட்ட இந்தியாவின்  இராணுவ உள்கட்டமைப்பை சேதப்படுத்தி விட்டு திரும்பிச் சென்றனா். இந்தியாவை சினமூட்டும் சீனாவின் இந்தச் செயல்  கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத இறுதியில் இடம்பெற்றது.இதன் போது இந்திய இராணுவம் சில சீன ராணுவ வீரர்களை கைது செய்தது.

2016ம் ஆண்டில் கூட யாங்சே அருகே 200க்கும் மேற்பட்ட சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய சம்பவங்களும் பதிவாகியிருக்கின்றன.

யாங்சேயை இலக்கு வைத்து  இதுபோன்ற மோதல்கள், 1999ம் ஆண்டு தொடக்கம்  குளிர்காலத்திற்கு முன்பும் பின்பும்  வருடத்திற்கு இரண்டு முறை இடம் பெற்று வருவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே சொன்னது போல, அருணாச்சலப் பிரதேசத்தின் மீது சீனாவின் உரிமைகோரல்களுக்கு “திபெத்” தொடா்பான அதன் தந்திரோபாய அரசியல் காரணங்களும் பின்னணியாக இருக்கின்றன.

இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசம் முழுவதையும் "தெற்கு திபெத்தின்" பகுதியாக சீனா இன்றும் உரிமைக் கோரி இந்தியாவை சினமேற்றி வருகிறது.  அதன் காரணமாகவே, சீனா தவாங் பகுதியில் அதிக அக்கறை காட்டி அத்துமீறல்களை செய்து வருகிறது.

என்ற போதிலும், டிசம்பா் 9ம் திகதி இடம்பெற்ற மோதலுக்குப் பிறகு இந்திய மற்றும் சீன வீரர்கள் உடனடியாக அப்பகுதியில் இருந்து வெளியேறியதாக இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று கூறுகிறது.

இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக அப்பகுதியில் உள்ள இந்தியத் இராணுவ அதிகாரி, சீன இராணுவ அதிகாரியுடன் ஓா் அவசர சந்திப்பை நடத்தியதாக இந்திய இராணுவம் உத்தியோகபூா்வமாக அறிவித்திருக்கிறது.

எவ்வாறாயினும், சம்பவம் நடந்து 60 மணி நேரத்திற்குப் பிறகே மோதல் தொடா்பாக அறிவிக்கப்பட்டது பதற்றங்கள் உள்ளே புகைந்துக் கொண்டிருப்பதை எடுத்துக் காட்டுகிறது.

இந்த மோதல் தொடா்பான விவாதங்கள்,  இந்திய பாராளுமன்றத்தின் குளிா்கால கூட்டத்தொடரிலும்  உஷ்ணத்தைக் கிளப்பியிருந்தன. இது தொடா்பாக இந்திய பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் பாராளுமன்றத்தில் கருத்து தொிவித்தாா்.

டிசம்பர் 9ஆம் தேதி அருணாச்சலத்தின் தவாங் செக்டரில் உள்ள யாங்சே பகுதியில் சீன ராணுவம் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை (LAC) அத்துமீறிச் சென்றதை இந்திய ராணுவ வீரர்கள் தைரியமாக தடுத்ததாக ராஜ்நாத் சிங் பாராளுமன்றத்தில் கூறினார்.

"இந்திய வீரா்கள்  யாரும் கொல்லப்படவில்லை அல்லது பலத்த காயம் அடையவில்லை என்பதை நான் சபைக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டை நமது இராணுவத்தால் பாதுகாக்க முடியும் என்றும் நான் இந்த சபைக்கு உறுதியளிக்கிறேன். எந்த அத்துமீறலையும் சமாளிக்க எங்கள் இராணுவம் தயாராக உள்ளது” என்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் கூறினார்.

அருணாச்சலப் பிரதேசத்தின் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு இந்தியாவும் சீனாவும் விரைவாக விலகிக் கொண்டதை வைத்து  அமெரிக்க  பைடன் நிர்வாகம் மகிழ்ச்சி அடைவதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

செவ்வாயன்று (13) இடம்பெற்ற  ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது, வெள்ளை மாளிகையின் செய்தி தொடா்பாளர்  கெரீன் ஜீன் பியா் (Karine Jean-Pierre)  அமெரிக்கா, நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், சர்ச்சைக்குரிய எல்லைகளைப் பற்றி விவாதிக்க இரு தரப்பினரையும் ஊக்குவிப்பதாகவும்  கூறியுள்ளார்.

 

 

 

 

 

 

 

 

 

 

.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .