2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

பிரசவ வலி, பெண்ணுக்குத்தான் தெரியும்!

A.K.M. Ramzy   / 2021 செப்டெம்பர் 01 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

கும்பகோணம்

ஆதரவற்ற, மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருந்தபோது, அவ்வழியாகச் சென்ற பெண் பொலிஸார் உடனடியாகத் துரிதமாகச் செயல்பட்டு தாயையும் சேயையும் காப்பாற்றியதோடு மட்டுமல்லாமல், இதற்குக் காரணமானவரை உடனடியாகக் கண்டுபிடித்துக் கைது செய்தனர்.

கும்பகோணம் பொற்றாமரைக் குளத்தின் கிழக்குக் கரையில், ஆதரவற்ற நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட சுமார் 35 வயது நிரம்பிய பெண் ஒருவர் அங்கேயே தங்கியுள்ளார். அவர் யாரிடமும் பேசாமலும், யாசகமும் பெறாமலும், எவருக்கும் தொந்தரவு செய்யாமலும் அங்கேயே இருந்துள்ளார். யாராவது அவருக்கு உணவு கொடுத்தால் மட்டுமே வாங்கிச் சாப்பிடுவார். அவர் நைட்டி மட்டுமே அணிந்திருந்தார்.

இந்நிலையில் நேற்று காலை பொற்றாமரைக் குளத்தின் கிழக்குக் கரைக்கு மேற்கு பொலிஸ் நிலைய அதிகாரியொருவர்  யதேச்சையாகச் சென்றபோது, அங்கு மனநலம் பாதிக்கப்பட்ட பெண் சுவரில் சாய்ந்துகொண்டு முனங்கிக் கொண்டிருந்தார். பிரசவ வலியால் அவர் துடிப்பதை உணர்ந்த அதிகாரி, உடனடியாக அருகில் சென்று பார்த்தபோது அவருக்கு ரத்தம் வெளியேறிக் கொண்டிருந்தது. உடனடியாக மேற்கு பொலிஸ் நிலையத்துக்கு வந்து அங்கிருந்த சில பெண் பொலிஸார்களை உதவிக்கு அழைத்துக் கொண்டும், அனைத்து மகளிர் பொலிஸ் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்துவிட்டும் உடனடியாக அங்கு சென்று பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு முதலுதவி செய்தார். அப்போது அந்தப் பெண்ணுக்குப் பெண் குழந்தை பிறந்தது. பின்னர் மேற்கு பொலிஸ் நிலையப் பெண் பொலிஸ் ஆய்வாளர் பேபி, பொலிஸ்  நிலையத்தில் வைத்திருந்த தன்னுடைய இரண்டு சேலைகளைக் கொண்டுவந்து அந்தப் பெண் மீது போர்த்தி அவரைப் பாதுகாப்பாக  அம்பியூலன்ஸை வரவழைத்து, கும்பகோணம்  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அப்பெண்ணைச் சேர்த்தனர்.

 

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் என்பதால், அந்தப் பெண்ணிடமிருந்து எந்தவிதத் தகவலையும் பெற முடியவில்லை.  

மேலும், மனநலம் பாதிக்கப்பட்ட பெண், குழந்தை பெறக் காரணமாக இருந்த நபரை பொலிஸார் தேடி வந்தனர். இந்தப் பெண் ஒரே இடத்தில் இருந்ததால் யார் இந்த நிலைக்கு ஆளாக்கியது என அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது, பாலக்கரையைச் சேர்ந்த ஒருவர் அடிக்கடி வந்து அப்பெண்ணைச் சந்தித்தது தெரியவந்தது.

இதையடுத்து   மகளிர் பொலிஸார் பாலக்கரைக்குச் சென்று அங்கிருந்தவரைப் பிடித்து விசாரித்தபோது, அவர் இந்தப் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்து, கர்ப்பமாக்கியது தெரியவந்தது. இதையடுத்து அவரை பொலிஸார் கைது செய்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .