2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் இந்தியாவின் முன்னேற்றம்

Editorial   / 2023 மே 21 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா தொழில்துறையில் வேகமாக வளர்ந்து வரும் நாடாக மாறியிருக்கிறது. இந்த வளர்ச்சியை ஈடு செய்வதற்கு எரிசக்தியின் தேவை இந்தியாவிற்கு இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது.  தொடர்ந்து அதிகரித்து வரும் அதன் எரிசக்தி தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு இந்தியா பல மேம்பாட்டு திட்டங்களையும், இலக்குகளையும் வடிவமைத்துள்ளது.  

சமீபத்திய ஆண்டுகளில், இந்தியா அதன் எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக புதுப்பிக்கத்தக்க ஆற்றலை  (Renewable Energy) நோக்கி மிக வேகமாக  திரும்பி வருகிறது.  

உலகளவில் வெப்பம் அதிகரிப்பதை 1.5 டிகிரி செல்சியஸ் அளவிற்குள் குறைக்க வேண்டும் என்ற பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் இந்தியா தனது இலட்சிய இலக்குகளை நிர்ணயித்துள்ளது. அதன் மின்சார உற்பத்தித் தளத்தில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பங்கை அதிகரிக்க சூரிய ஒளி, காற்றாலை உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித்துறையில் முன்னோடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

புவி வெப்பமடைவதையும், அதனால் ஏற்படும்  விளைவுகளையும் தடுக்கும் நோக்கில், உலகிற்கு பேரழிவுகளை  ஏற்படுத்தும் பசுமைக் குடில் வாயுவின் வெளியேற்றத்தை குறைக்கும் ஒரு பொதுவான திட்டத்தை பாரிஸ் ஒப்பந்தம் வலியுறுத்தியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி இந்தியா தனது இலக்குகளை நிர்ணயித்து செயற்பட ஆரம்பித்தள்ளது.

இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் வளர்ச்சி

உலகம் அதன் அனைத்து ஆற்றல் தேவைகளுக்கும் இரண்டு வகையான ஆதாரங்களை பயன்படுத்துகிறது. அவை புதைபடிவ எரிபொருள்கள் மற்றும் புதைபடிவமற்ற எரிபொருள்கள் என இரு வகையாக பிரிக்கப்பட்டுள்ளன.  புதைபடிவ எரிபொருள் என்பது நிலக்கரி, எரிவாயு மற்றும் டீசல் போன்றவற்றைக் குறிக்கிறது. இவற்றின் பயன்பாட்டால் சூழல் மாசடைந்து,  உலகம் இயற்கை அனர்த்தங்கள் சார்ந்த ஆபத்தை எதிர்நோக்கி வருகிறது. 

புதைவடிவ எரிபொருள்  புவி வெப்பமடைதலுக்கு மிகப்பெரிய பங்களிப்பை வழங்குகிறது. புதைபடிவமற்ற எரிபொருட்களில் சூரிய சக்தி, காற்று, நீர் மின்சாரம், கழிவு ஆற்றல் சக்தி,  மற்றும் அணுசக்தி ஆகியவை அடங்குகின்றன.

புதைபடிவ எரிபொருட்களின் பாவனையை, குறிப்பாக நிலக்கரியின் பயன்பாட்டை படிப்படியாகக் குறைக்க வேண்டும் என்பதிலும், புவி வெப்பமடைவதைக் கட்டுப்படுத்த அவசரமாக மாற்று ஆதாரங்களைச் பயன்படுத்த வேண்டும் என்பதிலும்  உலகளாவிய ரீதியில் ஒருமித்த கருத்து உருவாகியுள்ளது.

மனிதர்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத ஆற்றல் சக்தியாக, இயற்கையாக கிடைக்கும்  வசதிகளைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் காற்றாலை, சூரியஒளி உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித்துறை இருக்கிறது. 

இதனால் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி என்பது, இயற்கை மனிதர்களுக்கு அளித்துள்ள ஒரு வரமாகவும், ஒப்பற்ற வளமாகவும் கருதப்படுகிறது.

இந்தியா தனது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகளை அடைவதில் பெரும் முன்னேற்றம் கண்டுவரும் நாடாக அடையாளப்படுத்தப்பட்டு வருகிறது.  2021 ஆம் ஆண்டின் புள்ளிவிபரங்களின்படி, இந்தியாவின் மொத்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் 94 ஜிகாவோட்டை எட்டியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   இது நாட்டின் மொத்த நிறுவப்பட்ட திறனில் சுமார் 25% ஆக கணிக்கப்பட்டிருந்தது.  இதில், சூரிய சக்தி திறன் சுமார் 40 ஜிகாவோட் ஆகவும், காற்றாலை ஆற்றல் திறன் 39 ஜிகாவோட் ஆகவும் இருந்தது. அது தவிர, நீர் மின்சாரம் போன்ற பிற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களின் திறனை இந்தியா மேலும் விரிவுபடுத்தி வருகிறது.

புதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஊக்குவிப்பதில் இந்திய அரசாங்கத்தின் பங்கு

 

இந்தியா,  2047 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குள் சூழலை மாசுபடுத்தும் அனைத்து எரிசக்தி பாவனையிலிருந்தும் முற்றாக விடுபட்டு, காபன் உமிழ்வு விகிதத்தை  2070 ஆம் ஆண்டளவில் நிகர பூஜ்ஜியத்தை அடைவது என்ற இலக்கை கொண்டுள்ளது.

இந்த இலக்கை அடைவதற்கு, அனைத்து பொருளாதார தொழில் துறைகளிலும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை அதிகரிப்பது, இந்தியாவின் ஆற்றல் மாற்ற செயற் திட்டத்தின் மையமாக இருக்கிறது.  இதனை செயல்படுத்துவதற்கு பசுமை ஹைட்ரஜன் திட்டம்  ஒரு நம்பிக்கைக்குரிய மாற்றீடாக  கருதப்படுகிறது. 

புதுப்பிக்கத்தக்க ஆற்றலை இலக்காக வைத்து செயற்படும் இந்தியா, தற்போதைய தொழிற்துறையில் உள்ள புதைபடிவ எரிபொருட்களின் பாவனையை முற்றாக மாற்றியமைத்து, சூழலுக்கு மாசு ஏற்படாத போக்குவரத்து, மின் உற்பத்தி, விமான போக்குவரத்து மற்றும் கடல் போக்குவரத்து ஆகியவற்றிற்கு பயன்படுத்தக் கூடிய புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் அவசியத்தை வலியுறுத்தும் நோக்கில்  தேசிய பசுமை ஹைட்ரஜன் மிஷனை (National Green Hydrogen Mission) கடந்த 2022  ஜனவரி மாதம்  அமைத்தது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தை மேம்படுத்துவதற்காக இந்திய அரசு பல கொள்கைகளையும் முயற்சிகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது. நாட்டின் மின்சார உற்பத்தியில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பங்கை 2030 க்குள் 40% ஆக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு அதன் செயற்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.  மேலும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதற்கு வசதியாக பல்வேறு செயற்திட்டங்களை இந்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.  

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழில்நுட்பங்களில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிப்பதோடு, நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்திய அரசு  மற்ற நாடுகளுடன் இணைந்து ஒத்துழைத்தும் வருகிறது.

தூய்மையான எரிசக்தி புரட்சியின் சகாப்தத்தை உருவாக்குவதில் இந்தியா முழு மூச்சாக ஈடுபட்டு வருகிறது.  இதில் மத்திய, மாநில அரசாங்கங்கள் புதுப்பிக்கத்தக்க  ஆற்றலை ஒரு நிலையான எரிசக்தி ஆதாரமாக மாற்றுவதற்கும், பாரம்பரிய புதைபடிவ எரிபொருளின் வெளிப்பாட்டைக் குறைப்பதற்கும் செயலூக்கமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய மின்சார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றல் 150.54 GW ஆக அதிகரித்துள்ளதுடன், 2030ம் ஆண்டுக்குள் அது 350 ஜிகாவாட் நிலையை எட்டும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் நிறுவப்பட்டு வருகின்ற புதுப்பிக்கத்தக்க  ஆற்றல் திறனில் சுமார் 55% ஐ சூரிய சக்தி பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், உலகில் சூரிய சக்தி ஆற்றலுக்கான பெரிய சக்தியாக இந்தியா வளரும் என்று நம்பப்படுகிறது.  உலகளாவிய சூரிய சக்தியின் உற்பத்தியாளர்களைப் பொறுத்தவரை இந்தியா தனது இலக்கை அடைவதற்கு அர்ப்பணிப்புடன் பயணம்  செய்ய வேண்டியுள்ளது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை இலக்கு வைத்து செயற்படுவதில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. இதன் மூலம் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை வளா்த்துக் கொள்ளும்  நாடுகளின் வரிசையில் முக்கிய இடத்தைப் பிடிப்பதற்கான வாய்ப்பை வழங்கியிருக்கிறது.

நாட்டின் பொருளாதாரத்தை வலுவாக கட்டமைக்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் பசுமை தொழில்நுட்பத்தில் 4.3 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டுள்ளது.

லடாக்கின் இமயமலைப் பகுதியில் சூரிய சக்தி மற்றும் பச்சை ஹைட்ரஜன் உற்பத்தியில் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது. இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ஆண்டு வரவு செலவு திட்ட உரையில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்களில் இந்தியாவின் எதிர்பார்ப்பு பற்றி  நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தார்.

பசுமை தொழில்துறை மற்றும் பொருளாதார மாற்றங்களில் 2070 ஆம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வு இல்லாத நிலையை எட்டும் உறுதியுடன் இந்தியா தொடர்ந்து முன்னேறி வருவதாகவும் அவர் கூறியிருந்தார்.

பசுமை எரிபொருள், பசுமை ஆற்றல், பசுமை விவசாயம், பசுமை இயக்கம், பசுமை கட்டிடங்கள் மற்றும் பசுமை உபகரணங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை திறமையாக பயன்படுத்துவதற்கான கொள்கைகள் போன்றவற்றிற்காக  இந்திய அரசாங்கம்  பல திட்டங்களை முன்னெடுத்து வருவதாக கூறிய நிர்மலா சீதாராமன்  இந்த பசுமை வளர்ச்சித் திட்ட  முயற்சிகள்  கார்பன் தீவிரத்தை குறைக்க உதவும் என்றும் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

இந்தியாவின் தேசிய பசுமை ஹைட்ரஜன்  இயக்கத்திற்கான ஆரம்ப ஒதுக்கீடாக 19,744 கோடி ரூபாய்களை இந்தியா ஒதுக்கியிருந்தது.

2030 ஆம் ஆண்டுக்குள் குறைந்தபட்சம் ஆண்டுக்கு 5 மில்லியன் மெட்ரிக் டன் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தித் திறனை மேம்படுத்த அந்நாடு  உறுதிபூண்டுள்ளது. 

இதற்காக  மொத்த முதலீடுகளாக 8 லட்சம் கோடிக்கும் அதிகமான இந்திய ரூபாய்களை செலவிட உத்தேசிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நாட்டில்  6 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் நம்பப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ்  ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமாக புதைபடிம எரிபொருள் இறக்குமதி குறையும் என்றும் ஆண்டுக்கு சுமார் 50 மில்லியன் மெட்ரிக் டன் பசுமைக் குடில்  வாயு உமிழ்வு குறைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை நோக்கிய இந்தியாவின் நடவடிக்கை ஒரு வரவேற்கத்தக்க வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது.  இது நாட்டின் வளர்ந்து வரும் எரிசக்தி தேவை, பசுமைக் குடில் வாயு உமிழ்வைக் குறைப்பதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.  

புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பொருளாதார நன்மைகளைக் கருத்தில் கொண்டு  2030 க்குள் 450 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை அடைவதற்கான இந்தியாவின் இலட்சிய இலக்கு, அதன்  முன்னேற்றத்துக்கான பாதையை வெளிச்சம் போட்டு காட்டி   நிற்கிறது. 

சரியாக கட்டமைக்கப்பட்ட  கொள்கைகள் மற்றும் முதலீடுகள் மூலம், இந்தியா புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் உலகளாவிய தலைமைத்துவத்தை அடையும் என்றும் அதன் மூலம் அந்நாட்டு  மக்களுக்கு நிலையான, சிறந்த எதிர்காலத்தை வழங்க முடியும் என்றும் எதிா்பார்க்கப்படுகிறது. 


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .