2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

பொலிஸ் அதிகாரிகளுக்குப் பாலியல் தொல்லை

Ilango Bharathy   / 2023 ஜனவரி 05 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

”பெண் பொலிஸ் அதிகாரிகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த திராவிட முன்னேற்றக் கழகத்தின்  உறுப்பினர்களைக்  கைது செய்யவேண்டும்” என முன்னாள் தமிழக முதலமைச்சர்  ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை விருகம்பாக்கம், தசரதபுரத்தில் அண்மையில் தி.மு.க. சார்பில் பொதுக் கூட்டமொன்று நடைபெற்றுள்ளது.

இக்கூட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் பொலிஸ் அதிகாரிகளுக்கு தி.மு.க உறுப்பினர்கள் சிலர் பாலியல் தொல்லை கொடுத்துள்ள நிலையில், இதனைப் பார்த்த ஏனைய பொலிஸ் அதிகாரிகள், குறித்த நபர்களை மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர்.

 இதனால் தி.மு.க தொண்டர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஆளும் கட்சியினரின் தலையீட்டால் கைது செய்யப்பட்ட நபர்களைப்  பொலிஸார் விடுதலை செய்தனர்.

இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இச்சம்பவம் தொடர்பில் கண்டன அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் ”அரசாங்க அலுவலகப் பணிகளில் தலையிடுவது, அரசு ஊழியர்களை மிரட்டுவது, பொதுமக்களை மிரட்டுவது, பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பது என்ற வரிசையில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் காவல் துறையினருக்கே பாலியல் தொந்தரவு கொடுக்கும் நிலைக்கு தி.மு.க-வினர் சென்றுவிட்டனர்.

அண்மைக்காலமாக  தீவிரவாதிகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும், சமூக விரோதிகளுக்கும் புகலிடமாக தமிழ்நாடு விளங்கி வருகின்றது.

இதன் காரணமாக பொதுமக்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது.

மேலும், பாலியல் தொந்தரவு கொடுத்தவர்களை விடுவிப்பது என்பது பாலியல் குற்றத்துக்கு தி.மு.க. அரசு துணை போவதற்கு சமமாகும். அத்துடன் அரசின் இத்தகைய நடவடிக்கையானது ‘ வேலியே பயிரை மேய்வது போல்‘ உள்ளது.

எனவே குறித்த பெண் பொலிஸ் அதிகாரிகளுக்குப்  பாலியல் தொந்தரவு கொடுத்த தி.மு.க.வினரை உடனடியாக கைது செய்து, சட்டத்தின்முன் நிறுத்தி அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுக்கொடுக்கவும், தமிழகத்தில் ஊடுருவியுள்ள சர்வதேச போதைப்பொருள் கடத்தல் தலைவன் கஞ்சிபாணி இம்ரான் மற்றும் அவரது கூட்டாளிகளை உடனடியாக கைது செய்து நாடு கடத்தவும் தமிழக அரசு  துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .