Editorial / 2025 நவம்பர் 06 , பி.ப. 12:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே வன்னியபுரத்தில் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்க கூடிய தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இங்கு பணிபுரியும் பெண் ஊழியர்கள் தங்குவதற்காக லாலிக்கல் கிராமம் அருகே அடுக்குமாடி விடுதி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. இதில் ஒரு அறைக்கு 4 ஊழியர்கள் வீதம் ஏராளமான பெண் ஊழியர்கள் தங்கி உள்ளனர்.
இந்த நிலையில் இங்குள்ள ஒரு அறையின் குளியல் அறையில் ரகசிய கேமரா இருந்ததை அங்கிருந்த பெண் ஊழியர்கள் நேற்று முன்தினம் பார்த்தனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது குறித்து தொழிற்சாலை நிர்வாகத்திடம் புகார் அளித்தனர்.
இதைத் தொடர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் விடுதி முன்பு அமர்ந்து நேற்று முன்தினம் இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏராளமான பொலிஸார் அங்கு சென்று அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் அவர்கள் அதை ஏற்க மறுத்து தொடர்ந்து விடிய, விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே குளியல் அறையில் ரகசிய கேமரா வைத்தது தொடர்பாக அதே விடுதியில் தங்கி இருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த நீலுகுமாரி குப்தா (வயது 22) என்பவரை பொலிஸார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து பெண் ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
கைதான நீலுகுமாரி குப்தா கடந்த 2022-ம் ஆண்டு முதல் அந்த நிறுவனத்தில் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. பெண்கள் தங்கும் விடுதி குளியல் அறையில் ரகசிய கேமரா கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அங்குள்ள அனைத்து அறைகளிலும் மகளிர் பொலிஸார் நேற்று தீவிரமாக சோதனை நடத்தினர்.
8 அடுக்கு மாடிகளை கொண்ட அந்த கட்டிடத்தில் நேற்று காலை முதல் சோதனை நடந்தது. இதில் புகாருக்குள்ளான ஒரு அறையில் மட்டும் ரகசிய கேமரா கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே அந்த வீடியோக்களை நீலுகுமாரி குப்தா தனது காதலன் சந்தோசுக்கு பகிர்ந்துள்ளதாகவும், அவரை பிடிக்க பொலிஸார் பெங்களூரு விரைந்துள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் பெங்களூரு சென்ற போலீசார் நேற்று மாலை சந்தோஷை கைது செய்து, அவரது செல்போனை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை ஓசூருக்கு அழைத்து வந்து விசாரித்தனர். மேலும், விடுதி வார்டன் சரிதாவிடமும் பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடையே இந்த வழக்கு விசாரணையில் உள்ளதால் உண்மைக்கு புறம்பான தகவல்களை யாரும் சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம் என்று பொலிஸார் அறிவித்து உள்ளனர்.
13 minute ago
19 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
19 minute ago
2 hours ago
2 hours ago