2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

24 பலஸ்தீனர்களும் ஊடகவியலாளரும் காயமடைவு

Editorial   / 2018 நவம்பர் 21 , மு.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

காஸாவின் வடக்குப் பகுதியில், நேற்று முன்தினம் (19) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடுகளில், ஊடகவியலாளர் ஒருவரும் போராட்டத்தில் ஈடுபட்ட 24 பலஸ்தீனர்களும் காயமடைந்தனர் என, காஸாவின் சுகாதார அமைச்சுத் தெரிவித்துள்ளது. காயமடைந்த ஊடகவியலாளர், “அஷோசியேட்டட் பிரஸ்” (ஏ.பி) செய்தி முகவராண்மையின் கமெராக் கலைஞராக இருந்தவராவார். 

நூற்றுக்கணக்கான பலஸ்தீனர்கள், பெய்ட் லாஹியா பகுதிக்கு அண்மையிலுள்ள எல்லை வேலிக்கு அண்மையில் நின்று, போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, அவர்களின் போராட்டத்தைப் பதிவுசெய்துகொண்டிருந்த ஊடகவியலாளர் மீதே, இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. 

றஷெட் றஷீட் என்ற குறித்த ஊடகவியலாளர், “ஊடகம்” எனக் குறிப்பிட்டிருந்த மேலங்கியை அணிந்திருந்தார் என்று குறிப்பிட்ட ஏ.பி, அவரது காலிலேயே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது எனத் தெரிவித்தது. அவரது காலில், பல முறிகள் ஏற்பட்டுள்ளன எனவும், அவருக்குச் சத்திரசிகிச்சை தேவைப்படுகிறது எனவும், வைத்தியர்கள் அறிவித்துள்ளனர் என, ஏ.பி மேலும் தெரிவித்தது. 

எல்லை வேலியிலிருந்து, 600 மீற்றர்கள் தொலைவில் நின்றே, இப்போராட்டத்தை அவர் பதிவுசெய்துகொண்டிருந்தார் எனத் தெரிவித்த ஏ.பி, போராட்டக்காரர்களிடமிருந்தும் தள்ளியே காணப்பட்டார் எனத் தெரிவித்தது. 

இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில், “ஊடகம்” என்று எழுதப்பட்ட மேலங்கியை அணிந்தவாறு பணியில் ஈடுபட்டிருந்த யாசிர் முர்தஜா, இஸ்‌ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்டிருந்தார் என்பது நினைவுபடுத்தத்தக்கது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X