2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

41ஆவது ஜனாதிபதிக்கு அரச மரியாதை

Editorial   / 2018 டிசெம்பர் 07 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் 41ஆவது ஜனாதிபதியான ஜோர்ஜ் எச்.டபிள்யூ. புஷ்ஷின் அரச மரணச் சடங்கு, அந்நாட்டின் தலைநகரான வொஷிங்டன் டி.சியில், உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. ஐ.அமெரிக்காவின் அண்மைக்கால அரசியல், துருவமடைந்ததாகக் காணப்பட்ட நிலையில், இந்த மரணச் சடங்கு, அந்த வேறுபாடுகளையும் தாண்டியதாக அமைந்திருந்தது.

ஐ.அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், உயிருடன் இருக்கும் முன்னாள் ஜனாதிபதிகளான பராக் ஒபாமா, ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் (எச்.டபிள்யூ. புஷ்ஷின் மகன்), பில் கிளின்டன், ஜிம்மி கார்ட்டர் ஆகியோரும், அவர்களின் மனைவிமாரும் இச்சடங்கில் கலந்துகொண்டனர்.

இதில், எச்.டபிள்யூ. புஷ்ஷின் மகன்மாரான முன்னாள் ஜனாதிபதி டபிள்யூ. புஷ், குடியரசுக் கட்சியின் சார்பாக ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட முயன்ற ஜெப் புஷ் ஆகியோரைக் கடுமையாக விமர்சித்தமையின் அடிப்படையில், ஜனாதிபதி ட்ரம்ப்புக்கும் முன்னாள் ஜனாதிபதி எச்.டபிள்யூ. புஷ்ஷுக்கும் இடையில், கருத்து வேறுபாடுகள் காணப்பட்டன. இதன்படி, மரணச் சடங்கில் கலந்துகொண்ட ஜனாதிபதி ட்ரம்ப், அமைதியாக, முகபாவங்கள் எவற்றையும் வெளிப்படுத்தாது காணப்பட்டார்.

இங்கு உரையாற்றிய டபிள்யூ. புஷ், தனது தந்தை, அனைத்துப் பிரிவு மக்களையும் பெறுமதியாகக் கருதினார் எனவும், நம்பிக்கையற்ற ஒருவராக அவர் காணப்பட்டிருக்கவில்லை எனவும் தெரிவித்தார். தந்தையின் சடலம் அடங்கிய பேழைக்கு அருகில் நின்று உரையாற்றிய அவர், “ஒரு மகனோ அல்லது மகளோ பெறக்கூடிய மிகச்சிறந்த தந்தை அவர்” எனத் தெரிவித்ததோடு, அவரது குரல், அவ்வப்போது தளர்வடைந்து, கவலையை வெளிப்படுத்தியது.

1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை ஜனாதிபதியாகப் பதவி வகித்த ஜோர்ஜ் எச்.டபிள்யூ புஷ், 4 தசாப்தகாலமாக நீடித்த பனிப்போரை முடிவுக்குக் கொண்டு வந்த தலைவராகப் புகழப்படுகிறார். அதேபோல், அணுவாயுதங்கள் மூலமான அழிவு ஏற்படும் ஆபத்துக் காணப்பட்ட நிலையில், அவ்வாபத்தையும் அவர் மிகவும் குறைத்திருந்தார். அதேபோல், சதாம் ஹுஸைனின் வீழ்ச்சிக்கு வித்திட்டவர்களில் முக்கியமானவராகவும் அவர் கருதப்படுகிறார். இந்நிலையில் அவரது மரணச் சடங்கில், அவரது அடைவுகள் நினைவுகூரப்பட்டன.

“கருணைமிக்க, மென்மையான” தேசத்தைக் கட்டியெழுப்புமாறு கோரிய முன்னாள் ஜனாதிபதி எச்.டபிள்யூ. புஷ்ஷின் சடலம் அடங்கிய பேழை, வொஷிங்டனிலிருந்து ஹியூஸ்டனுக்கு, விமானம் மூலம் கொண்டுசெல்லப்பட்டிருந்தது. அதன் பின்னர், இலங்கை நேரப்படி இன்று அதிகாலையில், அவரது இறுதிச் சடங்கு இடம்பெறவிருந்தது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X