2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

அமிழ் தண்டூர்தி துப்பாக்கிச்சூடு: சந்தேகநபரை கைது செய்யதனர் பொலிஸார்

Editorial   / 2019 மார்ச் 20 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

நெதர்லாந்தின் யூட்ரச்ட்டிலுள்ள அமிழ் தண்டூர்தியொன்றில், நேற்று முன்தினம் மூன்று பேரைச் சுட்டுக் கொன்றதுடன், ஐந்து பேரைக் காயப்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் துருக்கியரான கோக்மென் தனிஸை நெதர்லாந்துப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

மணித்தியாலக் கணக்காக இடம்பெற்ற தேடுதலைத் தொடர்ந்தே குறித்த நபரைக் கைது செய்யததாக பொலிஸார் கூறியுள்ளனர். காலை நெருக்கடி மணித்தியாலத்துக்கு சற்றுப் பின்னர் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டைத் தொடர்ந்து யூட்ரட்ச் முடக்கப்பட்டிருந்ததுடன், ஆரம்பத்தில் இது பயங்கரவாதத் தாக்குதல் போன்று தோன்றுவதாக அதிகாரிகள் கூறியிருந்தனர்.

கோக்மென் தனிஸின் புகைப்படமொன்றை வெளியிட்ட பொலிஸார், சில இடங்களில் தேடுதல்களை நடத்தியிருந்ததுடன், அவரை அணுக வேண்டாமென பொதுமக்களை எச்சரித்திருந்தனர்.

எவ்வாறாயினும், துப்பாக்கிச்சூடு இடம்பெற்று மணித்தியாலக் கணக்காகியுள்ளபோதும் துப்பாக்கிதாரியின் நோக்கம் தெளிவில்லாமல் உள்ளது. குடும்ப காரணங்களாக இருக்கலாம் என அரச வழக்குரைஞரொருவர் தெரிவித்துள்ள நிலையில், துப்பாக்கிதாரியின் உறவினர்களை மேற்கோள்காட்டிய துருக்கிய அரச அனடொலு செய்தி முகவரகம், உறவினரொருவர் மீது அமிழ் தண்டூர்தியில் அவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும் பின்னர் அப்பெண்ணுக்கு உதவ முயன்ற ஏனையவர்களை சுட்டதாகக் கூறியுள்ளது.

வழமையாக அமைதியான யூட்ரட்ச் நகரின் மீது ஹெலிகொப்டர்கள் சுற்றியிருந்ததுடன், பயங்கரவாத ஆபத்தை அதன் உயர் மட்டத்துக்கு அதிகாரிகள் உயர்த்தியிருந்ததுடன், பாடசாலைகளின் கதவுகளை மூடுமாறு உத்தரவிடப்பட்டதுடன், விமான நிலையங்கள், ஏனைய உட்கட்டமைப்புகள், பள்ளிவாசல்களில் துணைப் பொலிஸார் பாதுகாப்பை அதிகரித்திருந்தனர். சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஆபத்து மட்டம் ஒரு படியால் குறைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த நபர் முன்னர் கைதுசெய்யப்பட்டிருந்ததாக அரச வழக்குத்தொடருநர் ருட்கர் ஜெயுகென் தெரிவித்தபோதும் மேலதிக தகவல்கள் எதையும் கூறியிருக்கவில்லை

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X