2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

ஆர்ப்பாடங்களைத் தடைசெய்தார்; ஜனாதிபதி பஷீர்

Editorial   / 2019 பெப்ரவரி 27 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவசரகால கட்டளைகளின் கீழ், தனது 30 ஆண்டு கால ஆட்சியில் சந்தித்துள்ள மிகவும் மோசமான அரசாங்கத்துக்கெதிரான வீதிப் போராட்டத்தை அடக்குவதற்காக, அனுமதியளிக்கப்படாத பொதுமக்களின் கூடலை, நேற்று முன்தினம் தடை செய்த சூடானிய ஜனாதிபதி ஓமர் அல்-பஷீர், பொலிஸாருக்கு புதிய அதிகாரங்களை வழங்கியுள்ளார்.

சூடானியத் தலைநகர் கார்டூமின் பல்வேறு பகுதிகளில் புதிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ள நிலையில், சூடானின் மிகப் பழைய பெண்கள் பல்கலைக்கழகத்தினுள் ஆர்ப்பாட்டம் செய்த நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கெதிராக பாதுகாப்பு படைகள் கண்ணீர்ப்புகையை பயன்படுத்திய நிலையிலேயே குறித்த கட்டளைகள் வந்துள்ளன.

அந்தவகையில், எந்தக் கட்டடத்திலும் தேடுதல் நடத்துவதற்கு, பொதுமக்களின் நடமாட்டத்தை, பொதுப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவதற்கு, அவசரகாலநிலை தொடர்பான குற்றமொன்று புரிந்ததாக சந்தேகிக்கப்படும் தனிநபர்ளை கைது செய்ய, விசாரணைகளின்போது சொத்துக்களை முடக்க பாதுகாப்புப் படைகளுக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, நாடாளுமன்ற உறுப்பினர்கள், இராணுவ அதிகாரிகளின் சிறப்பதிகாரங்களை நீக்க, சிறப்பு அவசரகால நீதிமன்றங்களை அமைக்க அரச வழக்குத் தொடருநர்களுக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அரசை அல்லது பிரஜைகளை அல்லது அரசமைப்பை கேள்விக்குறியாக்கும் செய்திகளைப் பிரசுரிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எண்ணெய்த் தயாரிப்புகள், பொருட்களை வியாபரம் செய்வது மீது தடை விதித்துள்ள ஜனாதிபதி பஷீர், 3,000 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் அல்லது 150 கிராம் தங்கத்துக்கு மேலதிகமாக வெளிநாடு செல்பவர்கள் கொண்டு செல்வதற்கு சிறைத்தண்டனை வழங்கப்படுமெனத் தெரிவித்துள்ளார்.

1989ஆம் ஆண்டு இராணுவப் புரட்சியின் மூலம் பதவிக்கு வந்த ஜனாதிபதி பஷிரை பதவி விலக வேண்டுமெனக் கோரி, கடந்தாண்டு டிசெம்பரிலிருந்து தினமும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில், பாணின் உயர் விலைக்காகவே ஆரம்பித்த ஆர்ப்பாட்டங்கள், பின்னர் ஜனாதிபதி பஷிர், அவரது அரசாங்கத்துக்கெதிரானவையாக மாறியிருந்தன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X