2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

எண்ணெய்க் குழாய் வெடிப்பால் உயிரிழந்தோர் எண். 73ஆக அதிகரித்தது

Editorial   / 2019 ஜனவரி 21 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெக்ஸிக்கோவின் மத்திய பகுதியில், எண்ணெய்க் குழாயொன்றில் ஏற்பட்ட வெடிப்புக் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை, 73ஆக உயர்வடைந்துள்ளது. எரிபொருளைத் திருடும் நோக்கில் செயற்பட்டோராலேயே இவ்வெடிப்பு ஏற்பட்டது எனச் சந்தேகிக்கப்படுகிறது.

ஹிடால்கோ என்ற மாநிலத்தில் அமைந்துள்ள தலஹுலிபான் என்ற நகரத்தில், மெக்ஸிக்க நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு, இவ்வனர்த்தம் இடம்பெற்றிருந்தது.

எண்ணெய்க் குழாயில் வெடிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, எண்ணெயைச் சேகரிப்பதற்காக அப்பகுதி மக்கள், கொள்கலன்களுடன் அப்பகுதியில் குவிந்து, எண்ணெயைப் பெற்றுக்கொண்டனர். கொண்டாட்ட மனநிலையுடன் காணப்பட்ட அப்பகுதியில், திடீரென ஏற்பட்ட வெடிப்புக் காரணமாக, அவ்வாறு நின்றோரில் பலர் கொல்லப்பட்டனர்.

ஜனாதிபதியாக அன்ட்ரியஸ் மானுவல் லோபஸ் ஒப்ரடோர் பதவியேற்றதைத் தொடர்ந்து, எண்ணெய்த் திருட்டைத் தடுத்து நிறுத்துவதற்குக் கடுமையான முயற்சிகளை அவர் மேற்கொண்டுவரும் நிலையில், அதன் காரணமாக இப்பகுதிகளில் எண்ணெய்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது எனவும், அதுவே அப்பகுதி மக்களை அப்பகுதியில் அதிகமாக ஒன்றுகூட வைத்தது எனவும், மக்கள் தெரிவித்தனர்.

அனர்த்தம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஹிடால்கோ ஆளுநர் ஓமர் ஃபயாட், இதன்போது 73 பேர் கொல்லப்பட்டமைக்கு மேலதிகமாக, 74 பேர் காயமடைந்தனர் எனத் தெரிவித்தார். அப்பகுதியில் ஏற்பட்ட தீ, 7 மீற்றர்கள் உயரம் வரை சென்றது எனவும் தெரிவித்தார்.

காயமடைந்த பலரின் உடல்நிலை மோசமடைந்து வருகிறது எனத் தெரிவித்த அவர், அவர்களில் சிறுவர்கள் சிலரை, ஐக்கிய அமெரிக்காவின் டெக்ஸாஸுக்கு இடமாற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அப்பகுதியில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்ட போது, இராணுவத்தினர் அப்பகுதிக்குச் சென்ற போதிலும், மக்களைக் கட்டுப்படுத்தத் தவறியிருந்தனர். இராணுவத்தினரின் பிரசன்னத்திலேயே, எண்ணெயைப் பொதுமக்கள் பெற்றிருந்தனர். இதனால், இராணுவத்தினர் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

எனினும், இராணுவத்தினரை நியாயப்படுத்திய ஜனாதிபதி லோபஸ் ஒப்ரடோர், மக்கள் கைவிடப்பட்டதாலேயே மக்கள் அவ்வாறு செயற்பட்டனர் எனத் தெரிவித்ததோடு, “நெருப்போடு நெருப்பை எதிர்த்து நாங்கள் போராடப் போவதில்லை” எனத் தெரிவித்தார். மக்கள் பெருமளவில் குவிந்திருந்த நிலையில், மக்களுடனான முரண்பாடுகளை ஏற்படுத்த இராணுவத்தினர் விரும்பவில்லை என அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X