2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

ஐ.இராச்சிய அரசாங்கத்தின் பலம் நாடாளுமன்றத்திடம்?

Editorial   / 2019 ஜனவரி 21 , மு.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் விலகுவது (பிரெக்சிற்) தொடர்பான ஏற்பாடுகளில், அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை, நாடாளுமன்றம் பெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன என்ற செய்திக்கு, பிரதமர் தெரேசா மே-இன் அலுவலகம், தனது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

ஐ.இராச்சிய நாடாளுமன்றத்தின் கீழவையின் விதிகளை மாற்றியமைத்து, அதன் கட்டுப்பாட்டை, நாடாளுமன்றத்திடம் மொத்தமாக வழங்குவதற்கான ஏற்பாடுகளை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொள்கின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இது தொடர்பான சட்ட ஏற்பாடுகள், நாடாளுமன்றத்தில் இவ்வாரத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கான ஏற்பாடுகளை, நாடாளுமன்ற உறுப்பினர் குழுவொன்று மேற்கொண்டு வருவதாக, நேற்று (20) வெளியான பத்திரிகைகள் குறிப்பிட்டிருந்தன.

இதற்குப் பதிலளித்துள்ள பிரதமர் அலுவலகம், “ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு, பிரித்தானிய மக்கள் வாக்களித்தனர். அந்தத் தீர்ப்பை, தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் நிறைவேற்றுவது அவசியமானது” எனக் குறிப்பிட்டது.

அத்தோடு, அரசாங்கத்தின் அதிகாரங்களை நீக்குவதற்கு மேற்கொள்ளப்படும் எந்தவிதமான முடிவும், முக்கியமான இக்காலகட்டத்தில், மிகவும் அதிக கவனத்தை ஏற்படுத்துகிறது என, அவ்வலுவலகம் தெரிவித்தது.

பிரெக்சிற் நடைமுறைகள் தொடர்பாக, பிரதமர் மே-ஆல் கொண்டுவரப்பட்ட திட்டம், அந்நாட்டு நாடாளுமன்ற வரலாற்றில் அரசாங்கமொன்றுக்குக் கிடைத்த மிக மோசமான தோல்வியைப் பெற்று நிராகரிக்கப்பட்டது. அதன் பின்னர் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் அவர் தப்பித்திருந்தாலும், புதிய பிரெக்சிற் திட்டமொன்றைக் கொண்டுவந்து நிறைவேற்றுவதில் அவர் கடுமையான சவால்களை எதிர்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X