2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஒப்பந்தமின்றி விலகுகிறது ஐ.இராச்சியம்?

Editorial   / 2018 டிசெம்பர் 20 , மு.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் விலகும் (பிரெக்சிற்) நடைமுறை, ஒப்பந்தங்களேதுமின்றி நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளனவெனக் கருதப்படுகிறது. ஒப்பந்தமின்றிய விலகலுக்கான செயற்பாடுகளை, அந்நாட்டு அரசாங்கம் துரிதப்படுத்தியதைத் தொடர்ந்தே, இச்சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

பிரெக்சிற் தொடர்பாக, பிரதமர் தெரேசா மே-க்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட இணக்கப்பாட்டுக்கு, அந்நாட்டு நாடாளுமன்றத்துக்குள் மாத்திரமன்றி, ஆளுங்கட்சிக்குள்ளும் எதிர்ப்புக் காணப்படுகிறது.

இந்த எதிர்ப்புக் காரணமாக, அந்த ஒப்பந்தம் தோற்கடிக்கப்படும் வாய்ப்புள்ளது. ஏற்கெனவே, இவ்வாறான அச்சத்தின் காரணமாகவே, இவ்வொப்பந்தம் தொடர்பான வாக்கெடுப்பை, பிரதமர் மே பிற்போட்டிருந்தார். இவ்வாக்கெடுப்பு, அடுத்தாண்டு ஜனவரி மாத நடுப்பகுதியில் இடம்பெறத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆனால் அப்போதும், பிரதமரின் திட்டத்துக்கான ஆதரவு ஏற்படுமா என்பது சந்தேகமே என்ற நிலையில், ஒப்பந்தமின்றி விலகுவதற்கான ஏற்பாடுகளை, அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.

இதனடிப்படையில், மருத்துவ விநியோகப் பொருட்களை நாட்டுக்குள் கொண்டுவருவதற்காக, கப்பல்களைத் தயார்நிலையில் வைத்திருக்கவும், அரசாங்கத்தின் அவசர திட்டங்களுக்கு உதவுவதற்காக, 3,500 படையினரைத் தயார்நிலையில் வைத்திருக்கவும், அரசாங்கம் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த பிரதமரின் பேச்சாளர், ஒப்பந்தத்துடன் விலகுவது குறித்தே, அரசாங்கம் கவனத்துடன் உள்ளதெனவும், ஆனால், ஒப்பந்தமேதுமின்றி விலக வேண்டுமாயின், அதை முழுமையாக அரசாங்கம் அமுல்படுத்துமெனவும் தெரிவித்தார்.

இது தொடர்பாக, அமைச்சரவையும் ஒத்த கருத்தில் காணப்படுகிறது எனத் தெரிவித்த அவர், ஒப்பந்தமின்றி விலகுவதற்கான தயார்படுத்தல்களை அதிகரிக்க வேண்டிய தேவைப்பாடு எழுந்துள்ளதெனவும் தெரிவித்தார்.

இந்த நிலைமைக்கு, அரசாங்கம் தயாராக இருப்பதோடு மாத்திரமல்லாமல், வணிகங்களும் தயாராக இருக்க வேண்டுமென, அவற்றுக்குப் பரிந்துரைக்கவும், அமைச்சரவை ஏற்றுக்கொண்டது என, அவர் தெரிவித்தார்.

பிரெக்சிற் தொடர்பான சர்ஜன வாக்கெடுப்பு, 2016ஆம் ஆண்டில் நடைபெற்றதோடு, அடுத்தாண்டு மார்ச் மாதத்துடன், உத்தியோகபூர்வமாக விலக வேண்டிய தேவையில் ஐ.இராச்சியம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X