2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

கீழ்த்தரமான அரசியலென ராகுல் மீது குற்றச்சாட்டு

Editorial   / 2019 பெப்ரவரி 01 , மு.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, கீழ்த்தரமான அரசியலை மேற்கொண்டுள்ளார் என, அந்நாட்டின் ஆளுங்கட்சியான பாரதிய ஜனதா கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. ரபேல் கொள்வனவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழலுக்காக, நோய்வாய்ப்பட்ட ஒருவரை விஜயம் செய்ததைப் பயன்படுத்தினார் என்பதே, ராகுல் காந்தி மீதான குற்றச்சாட்டாக அமைந்துள்ளது.

கோவா மாநிலத்தின் முதலமைச்சரான மனோகர் பரிக்கார், சதையி அழற்சி காரணமாகச் சிகிச்சை பெற்று வருகிறார். அவரைப் பார்வையிடுவதற்காக, கடந்த செவ்வாய்க்கிழமை (29), ராகுல் காந்தி சென்றிருந்தார். தனிப்பட்ட விஜயமாக அமைந்த இவ்விஜயத்தின் பின்னர், அரசியல் கூட்டமொன்றில் கருத்துத் தெரிவித்த ராகுல் காந்தி, சர்ச்சைக்குரிய ரபேல் கொள்வனவு இடம்பெற்றபோது பாதுகாப்பு அமைச்சராகப் பதவி வகித்திருந்த மனோகர் பரிக்கார், அக்கொள்வனவு பற்றித் தனக்குத் தெரிந்திருக்கவில்லை என்று கூறினார் எனத் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, தனிப்பட்ட விஜயத்தைப் பயன்படுத்தி அரசியல் செய்கிறார் என, ராகுல் காந்தி மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் (30) அறிக்கையொன்றை வெளியிட்ட பரிக்கார், தனிப்பட்ட விஜயமாக வந்தே ராகுல் காந்தி தன்னைப் பார்வையிட்டார் எனத் தெரிவித்ததோடு, தங்களுடைய சந்திப்பில், ரபேல் தொடர்பாகக் கலந்துரையாடப்படவே இல்லை எனத் தெரிவித்தார். அத்தோடு, வெட்ககரமான அரசியலை அவர் மேற்கொண்டுள்ளார் எனவும் குற்றஞ்சாட்டினார்.

பரிக்காரின் கடிதம், ராகுல் காந்திக்கான எதிர்ப்புகளை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, அக்கடிதத்துக்கான பதிலை வழங்கிய ராகுல் காந்தி, நேரடியான குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கவில்லை. மாறாக, பிரதமர் நரேந்திர மோடியாலும் பா.ஜ.க தலைவர் அமித் ஷாவாலும் அழுத்தம் வழங்கப்பட்டதைத் தொடர்ந்தே அக்கடிதத்தைப் பரிக்கார் எழுதியுள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X