2026 மே 05, செவ்வாய்க்கிழமை

சீனாவில் பாரிய வெடிப்பு: 21 பேர் பலி; 61 பேர் காயம்

Editorial   / 2026 மே 05 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சீனாவின் ஹூனான் மாகாணத்தில் உள்ள வானவேடிக்கை தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட பயங்கர வெடிப்புச் சம்பவத்தில் சிக்கி 21 பேர் உயிரிழந்துள்ளதுடன், 61 பேர் காயமடைந்துள்ளனர் என ஏ.எஃப்.பி (AFP) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

லியுயாங் நகரில் அமைந்துள்ள 'லியுயாங் ஹுவாஷெங் வானவேடிக்கை உற்பத்தி மற்றும் காட்சிப்படுத்தல் நிறுவனத்தில்' (Liuyang Huasheng Fireworks Manufacturing and Display Company) இந்த அனர்த்தம் மே மாதம் 4 ஆம் திகதி நிகழ்ந்துள்ளது.

மலைப்பாங்கான பகுதியில் அமைந்துள்ள இந்தத் தொழிற்சாலையிலிருந்து அடுத்தடுத்து வெடிப்புச் சத்தங்கள் கேட்டதுடன், பாரிய புகைய மூட்டம் எழுவதையும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட காணொளிகள் காட்டுகின்றன. சம்பவ இடத்தைப் ட்ரோன் (Drone) மூலம் ஆய்வு செய்தபோது, அங்கு கட்டடங்கள் இருந்த சுவடுகளே தெரியாதவாறு இடிபாடுகள் சிதறிக் கிடப்பதும், மீட்புக் குழுவினர் அங்கு தேடுதல் பணிகளில் ஈடுபடுவதும் தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு 480-க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் விரைந்துள்ளனர். பாதுகாப்புக் கருதி தொழிற்சாலையைச் சுற்றியுள்ள மூன்று கிலோமீற்றர் பரப்பு பாதுகாக்கப்பட்ட வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மீட்பு மற்றும் விசாரணை நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக மத்திய அரசாங்கம் நிபுணர்களை அனுப்பி வைத்துள்ளது.

இந்த வெடிப்புச் சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், குறித்த நிறுவனத்தின் நிர்வாகத்தினரை பொலிஸார் தடுத்து வைத்துள்ளனர். காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்கும், காணாமல் போனவர்களைத் தேடுவதற்கும் "அனைத்து முயற்சிகளையும்" எடுக்குமாறு சீன அதிபர் ஷி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார். அத்துடன், தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

லியுயாங் நகரம் சீனாவிலேயே வானவேடிக்கை உற்பத்தியின் பிரதான மையமாகும். இது சீன உள்நாட்டுச் சந்தையில் 60 சதவீதத்தையும், ஏற்றுமதியில் 70 சதவீதத்தையும் பூர்த்தி செய்கிறது. எவ்வாறெனினும், சீனாவில் போதுமான பாதுகாப்புத் தரநிலைகள் கடைபிடிக்கப்படாத காரணத்தினால் இத்தகைய தொழிற்சாலை விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் பல்வேறு வெடிப்புச் சம்பவங்களில் சிக்கிப் பல டஜன் கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .