2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

சவூதிப் பெண்ணுக்கு தாய்லாந்து அடைக்கலம்

Editorial   / 2019 ஜனவரி 08 , மு.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

சவூதி அரேபியாவைச் சேர்ந்த 18 வயதான பெண்ணை, மீண்டும் சவூதி அரேபியாவுக்கே உடனடியாகத் திருப்பியனுப்பப் போவதில்லையென, தாய்லாந்து அறிவித்துள்ளது. இதன்மூலமாக, அப்பெண்ணுக்கு இடைக்கால நிம்மதி கிடைத்துள்ளது.

சவூதி அரேபியாவைச் சேர்ந்த றஹாப் மொஹமட் அல்-குனுன் என்ற இப்பெண், குவைத்துக்குச் சென்றிருந்த போது, தனது குடும்பத்திடமிருந்து தப்பியோடியிருந்தார். தனது குடும்பத்திடமிருந்து உடல், உள சித்திரவதைகளை எதிர்நோக்குவதாக அவர் தெரிவித்திருந்தார்.

இதன்படி, தாய்லாந்துக்குச் சென்ற அவர், அங்கிருந்து அவுஸ்திரேலியாவுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தார். எனினும், தாய்லாந்தின் குடிவரவு - குடியகல்வு அதிகாரிகள், நேற்று முன்தினம் அவரைத் தடுத்தனர்.

தனது ஹொட்டல் அறைக்குள் தங்கியிருந்த அப்பெண், அங்கிருந்து காணொளியொன்றை வெளியிட்டிருந்தார். இஸ்லாம் மதத்தைத் துறந்துவிட்டதாகவும், மீண்டும் சவூதிக்கு அனுப்பப்பட்டால், தனது உயிருக்கு ஆபத்து ஏற்படுமெனவும், அவர் தெரிவித்திருந்தார். அத்தோடு, தனது கடவுச்சீட்டுப் பறிக்கப்பட்டுள்ளதெனவும் அவர் தெரிவித்தார்.

“எனது குடும்பம், மிகவும் கடுமையான நிலைப்பாடுகளுடைய குடும்பம். எனது தலைமுடியை வெட்டியதற்காகவே, 6 மாதங்களுக்கு, ஓர் அறையில் என்னை அடைத்து வைத்திருந்தார்கள்” என, அவர் குற்றஞ்சாட்டினார்.

இந்நிலையில், அவரைத் திருப்பியனுப்புவதைத் தடைசெய்யும் நோக்கில், வழக்கொன்றும் நேற்றுத் தாக்கல் செய்யப்பட்ட போதும், தாய்லாந்து நீதிமன்றமொன்று, அவ்வழக்கை நிராகரித்தது. எனவே, அவர் திருப்பியனுப்பப்படுவார் என்று அஞ்சப்பட்டது. இதற்கிடையிலேயே, திருப்பியனுப்பப்பட்டால் அவரது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் காணப்படுகிறது என்பதைக் கருத்திற்கொண்டு, அவரைத் திருப்பியனுப்பப் போவதில்லையென, தாய்லாந்து அரசாங்கம், நேற்று மாலை அறிவித்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X